கடற்புலிகள் நூல் மதிப்பீடு

விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவினரால் அண்மையில் வெளியிடப்பட்ட கடற்புலிகள் நூலைக் கற்றபின் (‘வாசித்தல்’ என்பது இங்கே பொருந்தாதுபோல் தோன்றுகின்றது), ஒரு வேறுபட்ட அனுபவம் எவர்க்குள்ளும் துளிர்விடும்.
89 பக்கங்களில் அழகான – தெளிவான – புகைப்படங்களோடு எத்தனை செய்திகள்!
கடற்புலிகளின் வரலாற்றினைக் கூறும் ஆவணமாக கடற்கரும்புலிகளின் மகத்தான ஈகங்களைப் பதிவு செய்யும் பதிவேடாக, அவர்களின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் இலக்கியமாக, எதிரியின் கடற்படைகுறித்து பல்வேறு தகவல்களைக் கொண்ட தகவலேடாக ‘கடற்புலிகள்’ நூல் அமைந்துள்ளது.
இந்நூலை வாசித்து முடித்ததும் எவர்மனதிலும் எம்மவரின் இறந்தகாலப் பெருமைகளை மீட்கும் நினைவலைகளையும், எதிர்காலத்தில் விடியப்போகும் தமிழீழம் பற்றிய கடல்சார் கற்பனையையும் உதிக்கச் செய்யும்.
உலகிலேயே எந்த ஒரு போராட்ட அமைப்பின் தலைவனும் சிந்திக்காத அல்லது சிந்திக்க முடியாதிருந்த ஒரு போராட்டத்துறை – இன்று எமது தலைவனால் செயல்வடிவமாக்கப்பட்டு – ‘கடற்புலிகள்’ என மக்கள் கண்முன் காட்சி தருகின்றது. எனவே இப்போது தமிழீழத் தமிழன் பெருமை கொள்ளும் வகையில் அவனது காவல் படையணியாக, கடலிலே காவியம் படைக்கும் கடற்புலிகளின் எழுச்சி திகழ்கின்றது.
தமிழீழத்தின் புவியியல்சார் அமைவிடத்தின் நுணுக்கமான அடிப்படைத் தகவல்கள் இந்நூல் முழுவதும் விரவிஇ ஆங்காங்கே ஒளிக்கீற்றுக்களாகத் தெறிக்கின்றன.
“புவியியல் ரீதியாக தமிழீழத்தின் பாதுகாப்பு கடலோடு ஒள்றிப்போயுள்ளது” என்ற தலைவரின் நிதர்சனமான சிந்தனையோடு தொடங்கி, “பலர் நினைப்பது போல எமது பாரம்பரிய வாழிடமான நிலப்பகுதி மட்டும்தான் தமிழர் தாயகம் அல்ல” என்பதை விளக்கி,
“தரையுத்தம் போலல்லாது கடற்போர் வித்தியாசமானது” என்று, கடற்போரின் கடுமையான பக்கங்களையும் இந்நூல் வெளிப்படுத்துகின்றது.
“எல்லையற்றதாக விரிந்து கிடக்கும் கடற்பரப்பில், எந்த நேரத்தில் எந்த முனையிலிருந்து எதிரி தலையெடுப்பான் என்று அனுமானிப்பது கடினம்.”, “இருள் கவிந்து கொண்டதும் பாதையும் புலப்படாது திசையும் புரியாது” என கடலின் அபாயத்தைப் புலப்படுத்தி, “எமது போராளிகள் கடற்போர்க்கலையில் வல்லவர்கள்; அபாரதுணிச்சல் கொண்டவர்கள். எமது துணிவிற்கே எதிரி பயப்படுகின்றான்” என, தளபதி சூசையின் புன்சிரிப்பு பொதிந்த கூற்றாக நூல் விளக்கும் செய்திகள் அநேகம்.
இவை எல்லாவற்றையும் விட “கடலோடு கரைந்த கரும்புலிகள்”, “ஓயாத அலைகளில் எழுதிய காவியம்” என்ற தலைப்புகளிலான கடற்புலிகளின் வரலாறுகள், வரை ஓவியம் போல் அமைகின்றன. போரிலக்கியத்தின் ஒரு புது யுக்தியாக இவை எழுதப்பட்டுள்ள விதம் கூர்ந்து நோக்கப்படவேண்டியதே.
மாவீரர்களின் பெற்றோர்களிடமும் உற்றார்களிடமும் மற்றும் சக போராளி நணபர்களிடமிருந்தும் தகவல்களைத் திரட்டி, அதேசமயம் அவர்களையே அந்த வரலாற்றின் சாட்சியங்களாக்கி, எழுதுவோரும் தம்மையறியாமல் தம்மையும் ஒரு உணர்வுப் பாத்திரமாக்கி தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவிடங்களிலும் சஞ்சரிக்கும் ஒரு புதிய ஆற்றொழுக்கைப் போன்ற எழுத்து நடையோடு இவை அமைவதும், அற்புதமாயுள்ளது!
இனிமேல் எம்மக்கள், வீரத்திற்கும் விவேகத்திற்கும் ஈகத்திற்கும் முன்னுதாரணம் காட்ட அரிச்சந்திரனிடமோ, கர்ணனிடமோ போகத் தேவையில்லை. இந்த மாவீரர்களைத் தவிர வேறெவர் எடுத்துக்காட்டுகளாக அமைய முடியும்?
இவ்விடத்திலே, எமது தேசத்தின் புவிசார் அமைவிடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது. இது பழம் பெருமை பீற்றல் அல்ல் கடற்புலிகளின் எதிர்கால இன்றியமையாமையைப் புரிதலும் ஆகும். அத்தோடு, விடியப்போகும் எமது தேசத்தின் இரு கண்களாக அமையப்போகும்.
வேளாண்மையினதும் கடல்சார் தொழில்களினதும் முக்கியமும், அதற்கு உறுதுணையாக அமையப்போகும் எமது நவீன அறிவியல்சார் தொழில் அறிவும் எவ்வளவு அவசியம் என்பது, எவர் மனதிலும் படமாக விரியும்.
இற்றைக்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்னே சீன, உரோம, சேர, சோழ, பாண்டியர் தொடர்புடைய சர்வதேச வர்த்தகமையமாக மாந்தை திகழ்ந்தது அல்லவா?
பாக்கு நீரிணை – மன்னார்க்குடாக்கடல் எந்நேரமும் போக்குவரத்து நடந்த கடல்வழிப் பாதையல்லவா
அண்மைக்காலத்தில் 20ஆம் நூற்றாண்டின் முன்னரைப்பகுதிக்கு முன்னர் காங்கேசன்துறை, வல்வெட்டித்துறைஇ பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தலைமன்னார், பேசாலை, விடத்தல்தீவு, முல்லைத்தீவு என்பன மிக முக்கியத்துவம் பெற்றிருந்த துறைகள். 1940 இற்கு முன், கொழும்புக்கு அடுத்தபடியாக ஊர்காவற்றுறையே அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைமுகமாக இருந்தது.
எனவே இந்தியாவுக்கும், சிங்களத்துக்கும், தென்கிழக்காசியாவுக்கம் எம்மவர் கடல் மூலமே தொடர்பு கொண்டனர். கடற்புலிகளின் எழுச்சி எதிர்காலத்தில் எத்தகைய பாத்திரத்தை வகிக்கப்போகின்றது என்பதை அறிய, இந்த விடயங்களும் சிறந்ததாகவே இருக்கும்.
இன்னொரு செய்தியும் இங்கே சுட்டிக்காட்டப்படவேண்டும். அண்மைக்காலமாக விடுதலைப்புலிகளின் வெளியீடுகளை அவதானிப்போர், அவற்றின் உள்ளே முதன்மைச் செய்தியொன்று புலப்படுமென அறிந்திருப்பர். எமது போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களை, பெரும்பாலோர் அறிந்திருக்க முடியாத எமது போராளிகளின் அடியுள்ளத்து உணர்வுகளை, வியத்தகு இராணுவ செயற்பாடுகளின் விந்தைமிகு தகவல்களை, இராணுவ உத்திகளை, ஆயுதங்கள் பற்றிய விளக்கங்களைக் கற்பதில் இன்று மக்கள் ஆர்வம் காட்டுகின்றார்கள். போரிலக்கியத்தின் இன்னொரு வெளிப்பாடு இது. அந்த வகையில் ‘கடற்புலிகள்’ நூலின் பங்கு கணிசமானது. மக்கள் எல்லோரும் குறிப்பாக இளம் பருவத்தினர் வாசிக்க வேண்டிய சுவையான – அறிவான – இலக்கியநயம் மிகுந்த – நூல் இது.
நூல் மதிப்பாய்வு: க.வே. பாலகுமாரன்.
நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (மாசி 1994)
