முல்லைத்தீவு படைத்தளம் மீதான “ஓயாத அலைகள் – 01” நடவடிக்கையில்…

முல்லைத்தீவு படைத்தளம் மீதான “ஓயாத அலைகள் – 01” நடவடிக்கையில்…
புகழ்பெற்ற உலக வரலாற்று சமர்களுடன் ஒப்பீட்டு மதிப்பீடு செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் “ஓயாத அலைகள் – 01” நடவடிக்கை; தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நேரடி நெறிப்படுத்தல் பதித்த சாதனையின் பின்னால் கரும்புலிகளின் பங்களிப்பும் முக்கியம் பெறுகின்றது.
18.07.1996 அன்று விடுதலைப் புலிகளிடம் முற்றாக வீழ்ச்சிகண்ட முல்லைத்தீவு படைத்தளத்தை மீளக்கைப்பற்ற எதிரி சிலாவத்துறை கடற்கரைப் பிரதேசத்தில் மூப்படைகளின் உதவியுடன் அதிவிசேட பயிற்சிகள் பெற்ற சிறப்பு கொமாண்டோ துருப்புக்கள் தரையிறக்கப்பட்டு புதிய சமர்க்களம் ஒன்று உருவாக்கியது. மூம்முனைத் தாக்குதல் என பொருள்படும் ‘திரிவிட பஹர’ என இந்த நடவடிக்கையை சிறிலங்கா அரசின் படைத்தரப்புக்கள் பெயர்சூட்டி முழு அளவிலான பலப்பிரயோகங்களுடன் மேற்கொண்டன.
சிறிலங்கா கடற்படையின் ‘போராயுத மேடை’ என வர்ணிக்கப்படும் சங்காய் III வகையைச் சேர்ந்த P 321 “ரணவிரு” போர்க்கப்பல் மீது கடற்புலிகள் தாக்குதல் தொடுத்தனர்; கடற்கரும்புலிகளின் இலக்கும் இந்த “ரணவிரு” மீதுதான்.
கடற்கரும்புலி மேஜர் கண்ணபிரானும், கடற்கரும்புலி மேஜர் பார்த்தீபனும் உச்சவிசை கொடுத்து ஒட்டிச்சென்ற வெடிகுண்டுப் படகு கப்பலில் மோதுவதற்கு இன்னும் ஐந்து மீற்றர் இடைவெளி இருக்கும்போது, எதிரியின் குண்டுமழையில் வெடித்து சிதறுகிறது. அடுத்த வெடிகுண்டுப் படகில் கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளையும், கடற்கரும்புலி மேஜர் சுடரொளியும் புறப்படுகிறனர். ரணவிருவின் இயந்திரப்பகுதி இவர்களின் குறியாகிறது. கப்பலின் இயந்திரப்பகுதி நொருங்க கப்பல் சூழலத் தொடங்குகிறது. நிலைகுலைந்து போய்க்கிடந்த எதிரியின் கப்பலை மறுபுறத்தில் நெருங்கி வெடிக்கமுனைந்த வெடிகுண்டு படகு தொழில்நுட்பக் கோளாறினால் வெடிக்காது ஏமாற்றிவிடுகிறது.
வெடிகுண்டுப் படகில் இருந்த கடற்கரும்புலி கப்டன் இன்னிசை காயப்படுகிறாள். முன்பக்கத்தால் உடைந்த நிலையில் நீர் உட்புகுந்துகொண்டிருந்த கரும்புலிப் படகை சாதுரியமாக பின்னுக்கு கொண்டுவருகிறான் படகிலிருந்து மற்றைய கடற்கரும்புலி மேஜர் மீதுபாலன்.
மீண்டும் கடற்கரும்புலி மேஜர் பதுமனின் வெடிகுண்டுப்படகு புறப்படுகிறது ரணவிருவின் முன்பகுதி தாக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது; கடற்புலிகளின் தாக்குதல் தொடர்ந்தன. இந்த கடற்சமரில் 40 வரையிலான படையினர் கொல்லப்பட்டதாக அறியமுடிந்தது.
கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை, கடற்கரும்புலி மேஜர் கண்ணபிரான், கடற்கரும்புலி மேஜர் பார்த்தீபன், கடற்கரும்புலி மேஜர் பதுமன், கடற்கரும்புலி மேஜர் சுடரொளி ஆகியோர் வீரகாவியமானார்கள்.

21.07.1996 அன்று முல்லைத்தீவு – அளம்பில் கடற்சமர்…
முல்லைத்தீவு படைத்தளம் மீதான “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கை 18.07.1996 அன்று தொடங்கப்பட்டது. படைத்தளத்தின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளினால் மீட்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த படைத்தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அளம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட படையினரால் முல்லைத்தீவு படைத்தளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க கடல்வழியாக மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படை தரையிறங்கு கலங்கள் மீது கடற்புலிகளால் கடுமையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.
19.07.1996 அன்று எதிரியின் P 321 “ரணவிரு” போர்க்கப்பலை மறுபுறத்தில் நெருங்கி வெடிக்க முயற்சித்தபோது வெடிகுண்டு படகு தொழில்நுட்பக் கோளாறினால் வெடிக்கவில்லை. கடற்கரும்புலி மேஜர் மிதுபாலனுடன் சென்ற கடற்கரும்புலி கப்டன் இன்னிசை காயப்படுகிறாள். இதனைத் தொடர்ந்து 21.07.1996 அன்று கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன், கடற்கரும்புலி கப்டன் சயந்தனுடன் கூட்டுச்சேர்ந்து 600ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையிரை அளம்பில் கரையில் தரையிறக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தரையிறங்கு கலத்தினை இலக்குவைத்து விரைந்தார்கள்.
கரும்புலிப்படகு தரையிறங்கு கலத்தினை நெருங்கிவருவதை கண்டுகொண்ட சிறிலங்கா கடற்படையினர் ஒரேநேரத்தில் கடற்கரும்புலிகளின் படகின் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர். கடற்படையின் தாக்குதலில் சிக்காதவாறு தமது கரும்புலிப் படகினை செலுத்தி தரையிறங்கு கலத்தினை நெருங்கியவேளை எதிர்பாராதவிதமாக படகு வெடித்துச் சிதறியது; இதனால் குறித்த தரையிறங்கு கலமும் அதில் சென்ற 600 படையினரும் மயிரிழையில் உயிர் தப்பினர். கடற்கரும்புலி மேஜர் மீதுபாலன், கடற்கரும்புலி கப்டன் சயந்தன் ஆகியோர் தமிழீழக் கடலில் கலந்து காவியம் ஆகினர்.
கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் உள்ளத்திலிருந்து…
நான் கரும்புலியாக போவதற்கு எடுத்துக்கொண்ட முடிவு இந்தக் கடலிலும், கரையிலும் எமது மக்கள் படுகின்ற இன்னல்களைக் கண்டுதான். குறிப்பாக. இன்றைய காலத்தில் கடலில் சிறிலங்கா கடற்படையினரால் பாரிய அழிவுகள் எமது மக்களுக்கு வந்திருக்கிறது; வந்துகொண்டிருக்கிறது இந்த அழிவுகளைக் கண்டு எனது மனம் பொறுக்கமுடியவில்லை.
என்னைப்பொறுத்தவரையில் ஒரு தமிழனாக இருந்தால் நிச்சயம் இந்த மக்களுக்காக போராட வேண்டும்; நிச்சயமாக எங்கள் கடலில் வரும் எதிரியை அடிக்கவேண்டும். அப்படி நாம் அடித்தால்த்தான் எங்களின் கடலில் எங்களின் மக்கள் நிம்மதியாக தொழில்செய்து வாழமுடியும். இவற்றை உணர்ந்துதான் நான் இன்று கரும்புலியாக போகவிரும்புகிறேன்.
விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
