கலைஞர் கணேஸ் மாமா

ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவார் கணேஸ் மாமா.
காயப்பட்ட தமிழினத்தின் உள்ளங்களுக்கு நகைச்சுவை மருந்திட்ட கலைஞன். ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் சிங்கள அரசு பன்னாட்டு உதவிகளுடன் திட்டமிட்டு மேற்கொண்ட தமிழின அழிப்பில் 09.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் தொடர் எறிகணை வீச்சில் படுகொலை செய்யப்பட்டார்.
போராட்டத்துக்காக “கலை” வடிவில் போராடிய உண்மை கலைஞன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்கள அரசு எம்மக்கள் மீது நாளும் விளைவிக்கும் இனவெறித் தாக்குதலை – கொடுமைகளை அதனால் துன்பப்படும் உறவுகளின் சொல்லிலடங்கா வேதனைகளை, தன் தத்துருவமான திறனால் அவற்றை ஓர் காட்சியாக நடித்து ஓர் உறவுகளின் உயிரோட்டமாக புலத்து மக்களிடம் சென்றடைந்து அவர்கள் புரிதலுக்கு ஏற்றவகையில் செயல்திறன் கொண்டவரும் எத்தனை எத்தனையோ போராளிகளின், தாய் – தந்தையர்களின், சகோதர – சகோதரிகள், மழலைகள் மனங்களில் நிறைந்தவர்.
தன்னடக்கம், குறும்பு சிரிப்பு, அனைவர் மனத்தையும் வசிகரிக்கும் பார்வை….. வறுமையில் வாடினாலும் போராட்டத்துடன் ஒன்றிப்போன, போராடத்துகாகவே வாழ்வை அர்ப்பணித்து கடைசிவரை உறுதியாக இருந்த உண்மை மனிதர்களில் இவரும் ஒருவர்.
“நமது எதிர்கால சந்ததிக்கு, நாம் தலை குனிந்து பதில் சொல்லும் நிலைமை வந்து விடக்கூடாது”
பல காலமாக தமிழீழ திரைப்படத் துறையில் ஓர் கலைஞானாக வலம் வந்தவர். எல்லோராலும் கணேஸ் மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார். தமிழீழ தேசம் ஓர் கலைத்துறையில் ஓர் சிறந்த கலைஞனை, ஓர் நகைச்சுவையாளனை தன்னுள் ஓர் வரலாறாக அரவணைத்தது.
கணேஸ் மாமாவின் நடிப்பும் அவரின் விடுதலைப்பற்று யாருக்கும் யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. மிக அண்மைகாலம் வரையில் போராட்டகளங்களுக்கு மத்தியில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தாய் மண்ணின் நினைவோடு தாயகத்திலிருந்து வரலாறாகிய இந்த கலைஞனுக்கு எமது இதய அஞ்சலிகள்.
கணேஷ் மாமாவின் விடுதலைக்கான உழைப்பின் விரிந்த திரைக்காவியங்கள்…
* இன்னும் ஒரு நாடு
* அம்மா ! நலமா ?
* உயிரம்புகள்
* கடலோரக் காற்று
ஓர் நாள் விடியும் எம் தேசம். அங்கே உமக்கும் ஓர் இடமுண்டும் அன்று தேசத்தின் விடியலுக்காய் நீங்கள் உழைத்த பயனை நாமும், வருங்கால சந்ததியினரும் மகிழும் எம் தாய்மண்ணில்…
எத்தனை வருடம் சென்றாலும் ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவர் நம் கணேஷ் மாமா. தமிழீழ காற்றில் கலந்து எம் நெஞ்சமதில் நீங்காத நினைவுகளாய் என்றும் தொடர்வீர்.
கணேஸ் மாமா மண்ணினதும், மக்களினதும் விடிவிற்காக உழைத்தவர்கள் ஏராளம், அவரின்நினைவுகள் இங்கே முழுமை பெறவில்லை, ஆயினும் ஓர் வரலாற்று தேவைக்கும், ஆவணத்திற்காகவும் இங்கே இந்த சிறு தொகுப்பை சமர்ப்பிக்கின்றோம்.
நன்றிகள் – யாழ். கருத்துக்கள உறவுகள்.
