கடற்கரும்புலி கப்டன் பாலன் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி கப்டன் பாலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வன்னிப் பகுதிக்கு (முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை பகுதிக்கு) போராளிகளையும், ஆயுத தளபாடங்களையும் கொண்டுவரும் கடல் வழியான வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளையில் திருகோணமலை கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தைத் தொடர்ந்து நீந்தி கரையடைந்த நிலையில் துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு சிறிலங்கா படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைத்திருந்தவேளை தனது நாவினை பற்களால் தறித்து மயக்கமுற்ற நிலையில் திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்த கட்டிலின் சட்டத்துடன் தனது தலையினை தொடர்ச்சியாக மோதி 28.06.1997 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் பாலன் அவர்களின் 27ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கடற்கரும்புலி கப்டன் பாலன் தென்தமிழீழத்தின் அம்பாறை மண்ணில் பிறந்தவன். சிறிலங்கா விசேட அதிரடிப் படையினரின் கொரவெறித்த தாண்டவம் இவனது சிறுவயதில் அழியாத வடுக்களை ஏற்படுத்தியிருந்தது. அந்த வெறித் தாண்டவத்திற்கு இவனது குடும்பம் கண்முன்னே பலிக்கடாக்கள் ஆனதை இவன் என்றும் மறந்ததே இல்லை; காலம் கனிய தமிழீழ விடுதலைப் போரில் தன்னை இணைத்துக்கொண்டு கரும்புலிகள் அணியில் இணைய விடாமுயற்சியுடன் செயற்படுகின்றான். அவனது விடாமுயற்சியாலும், ஓர்மத்தினாலும் கடற்கரும்புலிகள் அணியில் இணைவதற்கு அனுமதி கிடைக்கின்றது. கடற்புலிகள் அணிக்கு வந்து இவனது செயற்பாடு விவேகம், பொறுப்புணர்வு யாவுவே கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் மெய்ப்பாதுகாவலராக மாற்றிக்கொள்கின்றது.
இந்தநேரம் அவன் நீண்டகாலம் ஆவலுடன் எதிர்பார்த்த இலக்கிற்கான சர்ந்தர்ப்பம் கிடைக்கின்றது. நீண்ட காலத்தின் பின் தன் உறவுகளிடம் விடுமுறையில் சென்று வருவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படுகிறது; விடுமுறையில் அம்பாறை மண்ணிற்கு சென்றுவன் விடுமுறை முடித்துவிட்டு மீண்டும் பணி தொடர வன்னி மண் நோக்கி நோக்கி விரைந்துகொண்டிருந்தவேளை…
மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியிலிருந்து இரண்டு சிறிய ரக வழங்கல் படகுகளும் அதற்கு துணையாக ஒரு கரும்புலிப் படகுமாக இரவு 6:50 மணிக்கு புறப்பட்டு செம்மலையை வந்தடைய வேண்டும். அன்றைய நாள் புறப்பட்ட எமது (கடற்புலிகளின்) படகுகளை திருகோணமலைத் துறைமுக கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை வழிமறித்தனர்; ஆயினும் படகுகள் கடக்கவேண்டிய திருகோணமலைத் துறைமுகப் பகுதியைக் கடந்து புறாமலைக்கு வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எமது வழங்கல் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் ஒரு படகு பாரிய சேதத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் இரண்டு படகுகளில் இருந்த போராளிகளும். கொண்டுவந்து சேர்க்கப்பட வேண்டிய பொருட்களையும் ஒரு படகு சுமந்துகொண்டு செம்மலைக்கு கரைக்கு சென்றடைந்தது. அதேநேரம் கரும்புலிப்படகு சேதத்திற்கு உள்ளான வழங்கல் படகை கட்டி இழுத்துக்கொண்டு வரும் பணி ஒருபுறத்தில் நடந்துகொண்டிருந்தது.
இழுத்துக்கொண்டு வரப்பட்ட வழங்கல் படகில் கடல் தண்ணீர் ஏறிக்கொண்டிருந்ததால் கடற்கரும்புலி கப்டன் பாலனும், இன்னுமொரு போராளியும் தண்ணீரை அள்ளி ஊற்றிக்கொண்டு படகை இழுத்துக்கொண்டு கும்புறுப்பிட்டிக்கு அருகாமையில் வந்தபோது மீண்டும் டோறா தாக்குதலை தொடுத்ததால் இணைக்கப்பட்டிருந்த கயிறு அறுந்து சேதத்திற்கு உள்ளான வழங்கல் படகு மூழ்கியது. கரும்புலிப் படகு தளம் திரும்பிவிட்டது. பாலன் கரையை நோக்கி நீந்தத் தொடங்குகினார். நீந்தி கும்புறுப்பிட்டி கரையை அடைந்தபோது அங்கு சில துரோகிகளினால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிறிலங்கா படையினர் அவரை கைது செய்தனர்.
சிறிலங்கா படையினர் கைதுசெய்து வைத்திருந்த வேளையில் தான் வகித்த பொறுப்பும், தன்னுடைய நிலையையும் கருத்தில் கொண்டு கணிசமாக கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் மேற்பாதுகாப்பில் இருந்தமையால் கடற்புலிகளின் ஏனைய செயற்பாடுகள் எல்லாமே அறிந்திருந்தமையால் இப்போது எதிரியிடம் உயிரோடு பிடிபட்டதனால் படையணிகள் சார்ந்த ஏனைய விடையங்களை மறைத்து இரகசியம் காக்கும் நோக்கத்தோடு தன்னுடைய நாக்கை வாயால் கடித்து தறித்தார். அப்போது மேலதிகமாக இரத்தம் வெளியேறி மயக்கமுற்றமையால் அவரைக் கொண்டுபோய் திருகோணமலை மருத்துவமனையில் கைக்கு கைவிலங்கு இடப்பட்ட நிலையில் அனுமதித்தனர். மேலதிகமாக படையினர் காவலுக்கு நின்றனர் மருத்துவமனையில். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த நிலையில் மீண்டும் மருத்துவமனை கட்டில் சட்டத்தோடு தன்னுடைய தலையை தொடர்ச்சியாக மோதி அந்த சம்பவத்தில் அவர் வீரச்சாவைத் தழுவிக்கொள்கிறார்.
காலப்பதிவு இவனது ஈகம் கண்டு மெய்சிலிர்த்துக் கொண்டது.
விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயும்.
வன்னி நோக்கி கடல் வழியான வழங்கல் நடவடிக்கை சம்பவத்தில் கடலிலே காவியமான…
கப்டன் தும்பன் (இளையதம்பி லிங்கேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் மேனகன் (குலவீரசுந்தரம் குலசேகரம் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் உத்தமன் (பொன்னுத்துரை அருமைத்துரை – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சுந்தரவதனி (கதிர்காமர் ஜெயவதனி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் ஆதனா (செல்வரத்தினம் சந்திரமலர் – ஜெயபுரம், கிளிநொச்சி)
வீரவேங்கை ஆபனா (தேவரத்தினம் சந்திரமலர் – ஜெயபுரம் கிளிநொச்சி)
நீளும் நினைவுகளாகி….
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
