கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்

நாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக்கூடாது: கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்.
இவன் பிறந்து வளர்ந்தது மன்னார் மாவட்டத்தின் நறுவிலிக்குளம் என்னும் கிராமத்தில். இவனது பெற்றோர் இன்று ஏதிலிகளாய் இருப்பது, இதற்கு அப்பாலுள்ள பண்டிவிரிச்சான் கிராமத்தில். ஆனால் இவன் எங்கே?
இவர்களுக்கே தெரியும், இவன் கரும்புலியாகி வீரம் விளைந்த வடகடலின் நீரிலும், காற்றிலும் இன்று கலந்து வாழ்கிறான் என்பது. எனவேதான் இவனது தாய்தன் துயரைத் துடைக்க பேரக் குழந்தைகளுக்கு (மூத்த மகளின் மகனுக்கு) ‘கொலின்ஸ்’ என்று பெயரிட்டு அழைக்கிறாள். அந்த அழியாத பெயர் இவர்களுக்கு ஓர் ஆறுதலையும், துணிவின் உறுதிப்பாட்டையும் தந்து நிற்பதை அந்த வீட்டாருடன் உரையாடக் கிடைத்த போது உணர முடிந்தது.
அந்தச் சூழலில் அவனது வயோதிபத் தந்தை கூறினார்.
“இவன் தம்பி, வலு கெட்டிக்காரன். நல்லாப் படிப்பான். அவன் படிச்சுக்கொண்டிருக்கேக்க எங்க ஊரிலையும் சிங்கள ஆமிக்காரங்கள் சுத்தி வளைச்சு கனபேரை பிடிச்சுக் கொண்டு போனாங்கள். அதனால் நாங்கள் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தம். இது இவனுக்கு சரியான கவலை. அவன் தம்பி, ‘ஆமியின்ர கையில பிடிபட்டுச் சாவதைவிட ஒரு ஆமிக்காரனைத் தானும் சுட்டுட்டுச் சாகலாம்’ என்று சொல்லுவான்.”
“இவன் வெளிநாடு செல்ல விரும்பவில்லை. சொன்னபடி இயக்கத்திலதான் சேர்ந்தான்” – இது அங்கிருந்த தாயாரின் வார்த்தை. இதைத் தொடர்ந்து மீண்டும் அந்தத் தந்தையார் கூறத்தொடங்கினார்.
“தம்பி இவன் லீவு முடிஞ்சு போறதுக்கு முதல் நாள் தாயைப் பார்த்து ‘அம்மா, நான் இயக்க வேலையா ஒரு இடத்துக்குப் போக இருக்கிறன். இது முக்கியமான வேலை. இந்த வேலையின் உழைப்பு வீட்டுக்கு வராது – அது நாட்டுக்கு மட்டும்தான்’ என்று சொன்னான் – நாங்கள் அதை அப்ப பெரிசா எடுக்கேல்லை.”
ஆனால் கொலின்ஸ் அம்முறை ஊருக்கு வந்தபோது அவனுக்கு தனது மரணம்… அதன் திகதி கூடத் தெரிந்திருந்தது. வந்தவன் தான் படித்த பாடசாலை பழகிய இடங்கள் எங்கும் சென்றான். கூடித்திரிந்த நண்பர்களுடன் பாசத்தோடு கதைத்தான்.
இவனோடு படித்து கூடித்திரிந்த நண்பன் இவனைப்பற்றிச் சொல்லும் போது; “அண்ணை நாங்கள் ஒரு நாள் பொழுது படுகிற நேரம் சந்தி மதவடியில கதைச்சுக்கொண்டு நிண்டனாங்கள். அப்ப கொலின்ஸ் எங்களைக் கண்டிட்டு வந்து மதவடியில இருந்து எங்களோட கதைச்சுக்கொண்டிருந்தான். ‘சாக ஒருக்காலும் பயப்படக்கூடாது என்ற கொலின்ஸின் வார்த்தை இப்பதான் எனக்கு விளங்குது” என்றான்.
இந்த 21 வயது இளைஞன் ‘கரும்புலி கொலின்ஸ்’ தன் சாவினால் இனத்திற்குச் சாதித்தது என்ன என்பதை சரியாக உணர வேண்டின் அவன் தன்னைத்தானே தற்கொடையாக்கிய 10-07-1990 க்கு சற்று முன்னைய நாட்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அங்கு – வடமராட்சியைச் சார்ந்த பகுதிகளில் தன்கூரிய பார்வையைச் செலுத்திய படி எதிரியின் பாரிய கப்பல் ஒன்று நிலை கொண்டு நிற்கிறது. அதன் ஆதிக்கக் கண்ணோட்டம் எங்கும் செல்லும். அது கடற்படைப் படகுகளுக்கு வேவு பார்க்கும். ‘எமது படகுகள், படகோட்டிகள், ஊர்மனைகளை அழிக்கவும் அடக்கவும் அது உதவி செய்யும்.’ இதை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறுதிப்பாட்டுடன் மீண்டும் வடபகுதிக் கடற்கரைக்கு வருவோம்.
அங்கு “பொடியள் கரும்புலியா கப்பலை அடிக்கப் போறாங்களாம்” என கதை பரவுகிறது.
கரையில் வரிப்புலிச் சீருடைகளுக்கு நடுவில் கரியநிற சீருடை தரித்த மூவர். அச்சீருடையுடன் நின்றவர்களில் கொலின்ஸ் ஒருவன். கடலலை இந்த மூன்று கரும்புலிகளின் பாதங்களைத் தொட்டுச் செல்கின்றன.
அக்கரிய இருளில் கையசைத்து கூடியிருந்தவர்களிடமிருந்து விடை பெறுவது தெரிகிறது.
படகு புறப்பட்டு…… பின் மறைகிறது.
கண்கள் கடலை ஊடுருவுகின்றன.
சிறிது நேரத்தில் கடலில் பெரிய ஒளிப்பிளம்பு. அதோடு அதிரும்வெடி ஒலி. அந்த உப்புக் காற்று அவர்களை அணைத்துக்கொண்டது.
நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (ஆனி, 1993).
