கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன்
கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன்
கரும்புலிகளின் உயிரீகம் எத்தனையோ காவியங்களை எம்மண்ணில் வரைந்துசென்றபோதும் கடற்கரும்புலிகள் அணியில் கடற்கரும்புலி மேஜர் புகழரசன் படையணியில் இவனது வீரச்சாவு சற்றும் வித்தியாசமானதே.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் காலத்தில் விடுதலை போராட்டம் விருட்சமாக வளர்ந்து பல வரலாறுகள் நிகழ்வுகளையும், தடங்களையும் பதிந்து நகர்ந்த வேளையில், தொடர்ந்தும் பல இடைவெளிக்கு பின்பு புலிகள் சேனையில் இணைந்து எமக்கு முன்னர் போராட்ட வரலாற்றில் விதையாக விழ்ந்தவர்கள் வழித்தடங்களில் கிட்டண்ணா முதல் மூத்த தளபதிகள், பல போராளிகள் கடலில் உலாவந்து உரிமைப்போரின் விடிவிற்காக பலம் சேர்த்திட சுற்றிய கடலில் நானும் சூற்றுகின்றேன் ஈழக் கனவுடன்… இது இயல்வளவன் உதிர்க்கும் வார்த்தைகள், வார்த்தைகள் போன்று செயலிலும் விடுதலை உரம் இவன் மனதில் நிறைந்திருந்தது; ஆயினும் அவனது இறுதி மூச்சு தணிந்தவேளை ஒரு பூ மலர்ந்த இடத்திலே ஒவ்வொரு பூவின் இதழும் உதிர உதிர வாசனை இழந்து வாடிப்போவது போன்று அன்று தமிழீழத்தின் மண்ணிலும், கடலிலும் நின்று இவர்கள் நினைவில் விம்மி விம்மி மனம் குமுறி விழி கரைந்த சக தோழ – தோழியர் ஆயிரம். அன்றைய சமகால சூழ்நிலை எங்கள் கைகளை கட்டியபோதும் துரோகத்தின் ஆதிக்கம் அந்த மாங்கேணி மண்ணை போராளின் குருதியில் நனைத்தபடி தலைதெறித்தாடியது…
நாம் ஒருவர் மீது அதிகம் அன்பு வைக்கும்போதும் அல்லது நட்புடன் உறவாடும் போதும் சுற்றிய சூழலும், காலத்தின் தருணமும் அவைகள் நிலைத்து செல்லவிடுவதில்லை. ஏதோ ஓர் கனவை சுமந்து திசைக்கு ஒவ்வோன்றாய் பிரிந்து சென்று பல காவியப் பக்கங்களை விரிக்கிறது; ஆனால், அதில் ஓர் புனிதத்தின் எல்லையைக் கடந்து உயர்ந்த மனங்களாக காட்சிதருவர் மாவீரர்கள்.
இது எங்களின் வாழ்வில் தினம் தினம் காண்பவைகள் அப்படியாக கடற்கரும்புலி கப்டன் இயல்வளவனும் எம்மிடையே பிரிவை எகிச்சென்றான். என்னதான் செய்யமுடியும்? அவனது உயர்வான இலட்சியத்தைத் தேடி அவன் விரைந்தான்; எதோ ஓர் திசையில் கடமை அவனை அழைத்துச் சென்றது……
2006ம் ஆண்டு ஆவணி மாதம் மட்டக்களப்பு மாவட்டம் மாங்கேணியில் சூரியன் மெல்ல மெல்ல மறைந்து தன் இயற்கை நிறைந்த மாலைக்காட்சியை படரவிட்டுக்கொண்டிருந்தது. அந்த மாலைநேர சூரியக் கதிர்கள் கடலில் ஓர் மீன்பிடி இழுவைப்படகில் (றோலர்) சில உருவங்களைச் சுமந்து வண்ணம் அந்த அலையின் இசைவிற்கு ஏற்றால்போல் மிதந்தவண்ணம் இருந்தது.
(எதிரியின் கட்டுப்பாட்டுத் பிரதேசம் கடந்துசென்று விடுதலைக்கான வழங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அந்த படகில் தென்னிந்திய திரைப்பாடல் கேட்கும்வகையில் ஒழுங்கும் செய்யப்பட்டிருந்தது. இதற்கான அனுமதி அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. ஆதலால் அதற்கான காரணம் ஏன் என நீங்களே நேயர்கள் புரிந்து கொள்வீர்கள்)
அப்போது, ஓர் தென்னிந்திய திரைப்பாடல் வரிகளை அந்த உருவங்களில் ஓர் இளைய உருவம் முனுமுனுத்தபடி படகை தாயார்ப்படுத்திக்கொண்டு அப்போது வானொலியில் ஒலித்த பாடலை உள்வாங்கி அந்த வீரன் முணுமுணுக்கத் தொடங்கி தனக்குரிய பாணியில் பாடலை இசைத்தான்.
காற்று மழையில் கலங்குவதில்லை
கட்டுமரங்கள் மூழ்குவதுமில்லை
மூழ்குவதுமில்லை…….
நாம் ஓய்வதுமில்லை…….
கோடையினாலே கடல் காய்வதுமில்லை……
அது அவனுக்கு மிகவும் பிடித்த ஓர் கரையோர மக்களின் தென்னிந்திய திரைப்படப் பாடல்.
அவன் இசைப்பதே கேட்டு மற்றைய உருவங்களும் அந்த நடவடிக்கைக்கான தயார்படுத்தலில் அவர்கள் ஈடுபட்டார்கள்; அதில் கடற்கரும்புலி கப்டன் இயல்வளவனும் ஒருவனாக…. கட்டையான தோற்றம், கருமை நிறைந்தவன். எப்போதுமே சிரித்த முகத்துடன் தோன்றுவான். அவனது போராட்ட வாழ்வில்…….
2004ம் ஆண்டுக்கு முன்னர் வன்னியிலிருந்தும் அனைத்துலக கடற்பரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட சில கடல் சார்ந்த வழங்கல் நடவடிக்கைக்குரிய தளங்கள் பின்னர் மட்டக்களப்பில் இடம்பெற்ற கருணாவின் துரோகத்தால் தற்காலிகமாக பறிபோனது. ஆயினும் சில நாட்களில் சில தளங்கள் மீட்கப்பட்டு இடங்கள் மாற்றியமைக்கப்பட்டு தொடர்கிறது வழங்கல் நடவடிக்கை. அனைத்துலக கடற்பரப்பில் கப்பலில் இருந்து தருவிக்கும் வழங்கலை தமிழீழத்தின் ஏனைய பகுதிக்கும் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை கடற்கரும்புலிகளும், கடற்புலிகளின் சில போர் உதவிப்படையிடரும் மேற்கொள்வது வழமையாக இருந்தது அன்றும் அப்படித்தான்……
ஆரம்பத்தில் வழங்கல் நடவடிக்கை மேற்கொள்ளும்போது எதிரி மட்டுமே இடையூறாக இருந்தான் ஆனால் இப்போது துரோகிகளும் பல் இடையூறுகளை செய்தனர். அப்படித்தான் அன்றும் இவர்களின் நடவடிக்கையை இனங்கண்டு அவர்களை வேட்டையாட குரோதத்துடனும், கொலைவெறியுடன் காத்திருந்தது துரோக நாய்கள்……. ஆம்…,
இன்னும் இருள் நன்றாக படர்ந்தவுடன் படகுடன் இவர்கள் வருவார்கள் என மறுமுனை கரையில் இருந்த வழங்கல் நடவடிக்கை போராளிகள் தங்களைத் தயார்படுத்த படகின் தலைமை கட்டளை அதிகாரியாக இருந்த கடற்புலி லெப்டினன்ட் கேணல் குகன் அவர்களும் எல்லாம் வழமையாக நடைபெறுவதுபோன்று நடைபெறும் என அன்றைய பொழுதையும் எண்ணியபடி இருக்குவேளை இயலின் கடந்த நினைவுகளுக்கு சற்று செல்வோம்…….
தமிழீழத்தின் தலைநகர் திருகோணமலை மாவட்டம் மூதூரில் 1987ம் ஆண்டு பிறந்தான். அங்கு இடம்பெற்ற தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இனவெறித் தாக்குதலினால் உருக்குலைந்த தலைநகரில் அகதி வாழ்வு சூழ்ந்த மக்களில் இவனது குடும்பமும் உள்ளாக்கப்பட்டது வன்னி நோக்கி இடம்பெயர்ந்தது. பின்னர் தன் குடும்பத்தின் வறுமை காரணமாக குடும்ப சுமையை சிறிய பிராயத்தில் தன்தோளில் சுமந்தவன் அன்றாடம் தான் கூலி வேலைக்கு செல்லும்பொது ஏற்பட்ட போராளிகளின் தொடர்புகளால் போராட்டத்துக்கு உறுதுணையான பல உதவிகளை போராளிகளுக்கு செய்தான். இவனது குடும்பம் போராட்டத்துக்கு ஆதரவாக எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையிலும் மிகப்பெரும் உதவிகளை செய்துள்ளது, அந்த வேளைகளில் கூட தன்னை முழுநேர போராட்ட பங்காளனாக மாற்றிக்கொள்ள முயற்சித்தான். ஆயினும் இவனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டும், போராட்டத்துக்கு இவனது குடும்பம் வழங்கும் ஒத்துழைப்பினாலும் இவனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு சென்றது பல போராளிகளினால்.
ஆயினும் புலிகள் அமைப்பில் தான் வசிக்கும் ஊரிலிருந்து இணையமுடியாது என்பதை கருத்தில்கொண்டு விடுதலை மீது கொண்ட அவாவினால் வேறு இடத்தில் வேறு காரணத்தை கூறி போராட்டத்தில் இணைய முற்றப்பட்ட இயலை (இயல்வளவன்) பொறுப்பாளர் இனங்கண்டு வயது நிலையை காரணம்கூறி வீட்டுக்கு செல்லும்படி கூறினார்; ஆயினும் அவன் வீட்டிற்கு செல்ல மறுத்தான். பின்னர் முத்தையன்கட்டில் கரும்புலி லெப்டினன்ட் கேணல் சுபேசன் அவர்களின் நினைவாகவும் மற்றும் லெப்டினன்ட் கேணல் மணிவண்ணன் அவர்களின் நினைவாகவும் இயங்கிய பாசறைகளுக்கு இன்னும் சில இயலைப் போன்ற வயதுடையவர்களையும் அனுப்பிவைக்கின்றார்கள். அங்கே அவர்கள் விரும்பி சில வேலைகளை செய்தார்கள் போராளிகளுக்கு உதவியாக அதிலே பாசறைகளை விரிவுபடுத்தி கரும்புலி மேஜர் யாழினி மகளீர் பாசறையும் விரிவுபடுத்தும் பணியில் இயலும் உதவினான்.
முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை – சிலாவத்தை பகுதியில் 2001ம் ஆண்டு கடற்புலிகள் துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் இரும்பொறை மாஸ்ரர் அவர்களின் நினைவான கடற்புலிகளின் அடிப்படை பயிற்சிப் பாசறை ஆரம்பிக்கப்பட்டது. தென்னம் சோலைகளாலும், மாமரங்களாலும் நிறைந்த அந்த மணல்வெளி அடங்கிய பயிச்சிப் பாசறை தன் இரண்டாவது மீளுருவாக்கத்துக்கு தயாரானது. அப்போது கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பகுதியில் இயங்கிய அன்பு (இது ஆரம்பத்தில் மன்னார் மாவட்டம் உயிலங்குளத்தில் இயங்கியது) அடிப்படை முகாமிலிருந்து இயக்கத்திற்கு புதிதாக இணைந்த சிறு தொகையினர் முல்லைத்தீவு “இரும்பொறை” பாசறைக்கு அழைத்துவரப்பட்டார்கள். ஆயினும் மேலதிகமாக சில படையணிகளில் பொதுமகனாக இயங்கியவர்களும் பின்னர் முத்தையன்கட்டு பகுதியில் “சுபேசன்” மற்றும் “மணிவண்ணன்” பாசறைகளில் இருந்து அடிப்படை பயிற்சிக்காக காத்திருந்த சிலரும் ‘இரும்பொறை 02’ல் உள்வாங்கப்பட்டார்கள்; அதில் ஒருவனாக இயல்வளவன் இருந்தான். சில நாட்களின் இடைவெளியில் எல்லோரையும் ஒன்றாக்கி 20 அணிகளாக பிரித்து கடற்புலி அனந்தன் மாஸ்ரரின் தலைமையில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு பலர் புலிவீரர்களாக உருவாக்கி பின்னர் கடலிலும் – தமிழீழத் திசையாவிலும் பல தடங்களை பதித்து காவிய நாயகர்களாக நிமிர்ந்தது ஒரு தனி வரலாறு. அந்த பாசறையில் புலிவீரனாக உருவாகிய இயல்வளவனும் கடற்புலியாகி – கடற்கரும்புலியாக நிமிர்தான். கடற்கரும்புலி தாகத்தை தன்னுள் வரித்துக்கொள்ள அவன் உள்வாங்கிய கடினமான பயிற்சிகள் ஏராளம், கடந்த பாதைகளில் தாங்கிய துன்பங்களும் ஏராளம், யாவற்றையும் கடந்து தன் இலடசியத்தை வென்றெடுத்தான்.
பாசறையில் பயிற்சியின்போது இவனுள் இருந்த தனித்துவமான சில சிறப்பியல்புகளால் பாசறையில் இவன் 12 போராளிகள் அடங்கிய அணிக்கு அணித்தலைவனாக நியமிக்கப்பட்டான்; தமிழீழத்தின் தலைநகரின் பாரம்பரிய தமிழ் இலக்கிய கலை இயைபுகள் இவனிலும் கூடிக்கொண்டிருந்தன. பாசறையில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் இவனது ஒரு கலைநிகழ்ச்சியும் அரங்கேறும். நகைச்சுவை இயல்புடையவன் மற்றவர்களை எந்நேரமும் சிரிக்கவைக்கும் ஓர் நகைச்சுவையாளன். மாவீரர்கள் மீதும், தேசியத் தலைவர் மீதும், மக்கள் மீதும் அதீத அன்பும் பற்றுக்கொண்டிருந்த இந்த புலிமறவன் பாசறையில் வைத்தே தான் கரும்புலியாக வேண்டி ஓர் கடிதம் வரைகின்றான் தேசியத் தலைவருக்கு அதன் பதில் சற்று காலம் தாழ்த்தியே வந்து கிடைக்கின்றது. இவனின் ஆழ்மனதில் பெரும் சோகம் புதைந்து கிடக்க யாவற்றையும் மறைத்து சோகத்தை மிறிய அந்தப் புன்சிரிப்பை போராளிகள் மத்தியில் மலரவைப்பான்.
‘இரும்பொறை 02’ பயிற்சிப் பாசறையில் நிறைவு நாளுக்கு இன்னும் சில வாரம் இருந்த நிலையில் கடற்புலிகளின் சிலோஜன் நீரடி நீச்சல்ப் பிரிவுக்கு 20 பேர் கொண்ட போராளிகள் தெரிவுசெய்யப்பட்டு செம்மலை நோக்கி மேலதிக பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள்; அவர்களின் இயலின் இணைபிரியா நண்பர்கள் பலர் பின்னைய நாட்களில் சவாலான கடற்சமரிலும் எதிரியின் கோட்டையின் வாசலுக்கே சென்று வரலாற்றைப் படைத்த கடற்கரும்புலி மேஜர் தீக்கதிர், கடற்கரும்புலி கப்டன் முறையமுதன், கடற்கரும்புலி கப்டன் சோழமைந்தன் போன்ற பல போராளிகள்……
அந்த அணி தெரிவாகி சென்று சில நாட்களின் பின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அண்ணா வந்து பன்னிரண்டு போராளிகளை தெரிவுசெய்து கடற்புலி லெப்டினட் கேணல் கடாபி அண்ணா அவர்களின் பொறுப்பில் ஒப்படைத்தார். இரவு நேரம் அந்த 12பேர் கொண்ட போராளிகளை ஏற்றிக்கொண்டு ஊர்தி தேவிபுரம் நோக்கி விரைந்தது……., இதன்போது நாம் எதற்காக தெரிவு செய்யப்பட்டோம்? எங்கு அழைத்துச் செல்லப்படுகின்றோம் என மேலதிக விடயங்கள் யாருக்கும் தெரிவிக்கபபடவில்லை. அனைவர் மனதில் பல கேள்விகளை சித்தித்தபடி இருந்தது, ஆயினும் அவர்களின் மனம் பூரிப்பில் மகிழ்வில் திளைத்தது காரணம் தங்களை கடமை அழைக்கிறது என ….. கடாபி அண்ணா செலுத்திய ஊர்தி தேவிபுரம் காட்டில் அரைகுறை வேலைப்பாட்டுடன் புதிதாக எழுந்துநின்ற கடற்புலி ‘லெப்டினன்ட் கேணல் சதீஸ் இயந்திரவியல் கல்லூரி பாசறை’யில் வந்து நின்றது. அன்றிலிருந்து கடற்புலிகளின் உள்ளிணைப்பு, வெளியின்னப்பு இயந்திரவியல் அணி (டோறா அணியாகவும்) அந்த பயிற்சிக் கல்லூரியில் சிறந்த முறையில் வளர்த்தெடுக்கப்பட்டார்கள்.
ஆரம்பத்தில் கடற்புலிகளின் உள்ளக படைத்துறைசார் பிரிவுகள் பல வளர்ச்சிகள் அடைந்திருந்தபோதும் நாளடைவில் கடல்சார் உள்ளிணைப்பு – வெளியிணைப்பு (Inboard and Outboard Engine) இயந்திரத்துறையிலும் ஓர் தனித்துவமான அணி ஒன்றின் உருவாக்கம் தேவையாக இருந்தது. தேசியத் தலைவர் அவர்களின் ஆலாசனைக்கு அமைவாக சிறப்புத்தளபதி அவர்களின் மேற்பார்வையில் கடற்புலி லெப்டினன்ட் கேணல் கடாபி, கடற்புலி லெப்டினன்ட் கேணல் தமிழ்முரசு, கடற்புலி லெப்டினன்ட் கேணல் குகன் ஆகியோர் வழிகாட்டிகளாக அமைந்து தேசியத் தலைவரின் எண்ணத்திற்கு அமைவாக போராளிகளை உருவாகி செயல்வடிவம் கொடுத்து வரலாறாகினர்.
இந்த அணியின் உருவாக்கத்தின் பின்னணி 2000ம் ஆண்டு ‘ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின்போது வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் ஏற்பட்ட கடற்சமரில் சேதமடைந்த சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறா கலத்திலிருந்து எடுக்கபப்ட்ட அதேவேக இயந்திரத்தை கொண்டு கடற்புலிகளின் வளர்ச்சியை அதிகரிக்கவும் மற்றும் டோறா இயந்திரத்தின் (MTU Aero Engines – MTU) தொழில்நுட்பம் மற்றும் அதன் பரிமாணம் முற்றும் மாறுபட்டதனாலும் அவற்றில் முழுமையான தரவுகளுடன் அதை கையாளும் முறையில் அதன் தொழில்நூட்ப அறிவியலுடன் பல போராளிகளை வளர்க்க வேண்டும் அவற்றைப் பராமரித்து எம் விடுதலைக்கான வளங்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த டோறாவிலிருந்து இயந்திரத்தை தருவித்து பின்னர் தமிழீழக் கடற்பரப்பில் 02.11.2000 அன்று வழங்கல் நடவடிக்கையின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி லெப்டினன்ட் கேணல் சதீஸ் நினைவாக உருவாக்கப்பட்டது இந்த பயிற்சிக் கல்லூரி.
இங்கே புதிதாக இணைந்த கடற்புலிப் போராளிகளுடன் கடற்புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கடற்புலி லெப்டினன்ட் கேணல் கடாபி அண்ணா, குபேரன் அண்ணா, ரோமியோ அண்ணா, செமாலை அண்ணா, சின்னக்கண்ணன் அண்ணா, பாபு அண்ணா, கடற்புலி லெப்டினன்ட் கேணல் தமிழ்முரசு, கடற்புலி லெப்டினன்ட் கேணல் குகன் என போராளிகளையும் உள்ளடக்கி இவர்களுக்கும் (MTU Aero Engines) இயந்திரம் பற்றி மற்றும் அடிப்படை இயந்திரங்கள் பற்றி கற்றுக்கொடுக்கப்பட்டு பயிற்சியும் வேறு ஒரு நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட தமிழரால் நடத்தப்பட்டு அந்த நாட்டு மொழியும் கற்றுக்கொடுக்கப்பட்டது.
டோறா இயந்திரத்தை உருவாக்கிய நாட்டின் மொழியில் இயந்திரம் பற்றிய தரவுகள் பதியப்பட்டிருந்ததால் தமிழில் மொழிபெயர்த்தும் (மற்றைய மொழியையும் பிரத்தியேகமாக கற்று) பல மாதங்கள் கடந்து இயந்திரம் பற்றிய அறிவியலை அனைவருடனும் இயல்வளவன் கற்றுத்தேறினான். அன்றைய சமகால சூழ்நிலை மாற்றங்களினால் எமது விடுதலைக்கான பலங்களை, வளங்களை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்ததினால் இப்போது பழைய உறுப்பினர்களும் புதிய போராளிகளுக்கு விடையளித்து ஊர் விட்டு ஊர், மாவட்டம் விட்டு மாவட்டம் என அவர்களின் பழைய கடமை அழைத்து சென்றார்கள்.
கரைந்தோடிய காலத்தில் இப்போது இவர்கள்தான் யாவுமாகி…………… சதீஸ் இயந்திரவியல் எங்கும் பேசப்பட்டார்கள் ஆயினும் அவர்களின் அடையாளம் கடாபியின் பெடியல்கள்……………. ஆனால் இந்த அணியின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் பெரிதும் பாடுபட்டவர்கள் கடற்புலி லெப்டினன்ட் கேணல் கடாபி மற்றும் கடற்புலி லெப்டினன்ட் கேணல் தமிழ்முரசு ஆகியோர்.
இப்போது கடற்புலிகளின் உள்ளக துறைசார் படையணிகளுக்குள் தொகுதிப் படகுகளின் இயந்திரம் புதிதாக இணைப்பது முதல் பிழைகளை திருத்தம் செய்வது மற்றும் வழங்கல் நடவடிக்கைக்கான இழுவைப் படகுகளில் இயந்திரம் புதிதாக இணைப்பது போன்ற எல்லாப்பணியிலும் ஏனைய போராளிகளுடன் இயல்வளவனின் பங்கும் பெரிதும் இருந்தது. நாளடைவில் சதீஸ் இயந்திரவியல் போராளிகளுடன் கடற்கரும்புலி – கடற்புலி மகளீர் அணியும் பின்தளத்தில் இருந்து அனைத்து வகையான கடல்சார் நடவடிக்கைக்கும் நீண்ட தூர பயணத்திற்கும், சண்டைகளின் அதிவேகம் கொண்ட இயந்திரங்களை இயக்கும் கரங்களாக இரவு பகலாக மாவீரர்களையும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களையும், மக்களையும் நெஞ்சிருத்தி உழைத்தார்கள்.
2003 அன்று கடற்புலிகளின் கடலோடிகள் நினைவில் கலை நிகழ்வு “அலைபாடும் பரணி” இசைத்தட்டு வெளியீடு மாலைவேளை முல்லைத்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெறவிருந்தது. ஆனால் காலை நினைவு வணக்கவும், கலை நிகழ்ச்சிகளும் கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்டினன்ட் கேணல் நிறோஜன் நினைவு மண்டபம் அமைந்திருக்கும் வட்டுவாகல் கடற்புலிகளின் பிரத்தியேக தளத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் சிறப்புத் தளபதி, தளபதிகள் மற்றும் கடற்புலிகளின் உள்ளக கட்டமைப்பின் அனைத்து மாவட்டத்திலிருந்தும் போராளிகளும் கலந்து கொண்டிருந்தார்கள் அதில் கடற்புலிகளின் மகளீர் மற்றும் மங்கை படகு கட்டுமானப் போராளிகளின் கலைநிகழ்வு அரங்கேறிய தருணம் அந்த நிகழ்வில் வைத்து சிறப்புத் தளபதி சூசை அண்ணா அவர்களிடமும் மூன்றாவது முறையாக கடற்கரும்புலிக்கான இணைவுபற்றி வேண்டி தேசியத் தலைவருக்கு எழுதிய கடிதத்தை கொடுத்தான். கரும்புலிக்கான இணைவிக்கிற்காக கடிதத்தை எழுத முதல் நண்பன் உதவினான் இரண்டாவது கடிதத்தை கடற்கரும்புலி மேஜர் கலைமாறன் (2006ம் ஆண்டு அனைத்துலக கடற்பரப்பில் வீரச்சாவு) அவர்களும் மூன்றாவது கடித்தை எழுது கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் கவியழகி அக்கா உதவினார்கள். காரணம் இவன் படிப்பை சிறுவயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக திறவந்தவன் மற்றும் கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் கவியழகி அக்கா சதீஸ் இயந்திரவியல் பாசறைக்கு இயந்திரங்கள் தொடர்பான கடமைநிமிர்த்தம் வருகைதரும்போது அக்காவிற்கு நச்சரிப்பு கொடுத்து எழுதவைப்பான் என்பது குறிப்பிடத்தக்கது. தேசியத் தலைவரிடமிருந்து நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின்னர் பதில் கிடைத்தது. அவன் உள்ளம் அடைந்த ஆனந்தம் யார்தான் உரைப்பார்? யாரிடமும் கூறும் விடயமும் இல்லை தனக்குள் சந்தோசத்தை அடக்கிக்கொண்டான். ஆயினும் சதீஸ் இயந்திரவியல் பாசறையில் அவன் சிறிது காலந்தான் வாழ்வான் என அப்போது அவனின் சில செயற்பாடுகள் அனைவருக்கும் தெரிந்திருந்தது.
இயல்வளவன் பங்குபற்றிய கடற்சண்டைகள் மிக மிக குறைவு, ஆனால் விடுதலைக்கு பலம் சேர்க்கும் நடவடிக்கைக்கு இரவு பகலாக ஓய்வின்றி உறக்கமின்றி உழைத்தான். அந்த உழைப்பிற்காக தமிழீழத்தையும் – சிங்கள தேசத்தையும் சுற்றி கடலை அளந்தவர்களில் இவனும் ஒருவன். அந்த உழைப்பினால் நாமும் எங்கள் தேசமும் கண்ட வெகுமதிகள் அதிகம். நிலத்திலும் – கடலிலும் எதிரியானவன் சமர்முனைகளை திறக்கும் வேளையில் கடமை நிமிர்த்தம் வேறு இடத்தில் அல்லது ஒரு முக்கியமான கடமையை சுமந்து கொண்டிருந்தான். தொட்டதெல்லாம் பொன்னாகும் போல் இவன் கைவண்ணம் பட்ட இயந்திரத்தை அனைத்துலக கடற்பரப்பின் எல்லைவரை கொண்டுசென்று வளம் ஏற்றி வருவார்கள் எங்கள் கடற்கரும்புலி – கடற்புலிப் போராளிகள்; அப்படியான தூரித அறிவுக்கு கூர்மையான செயற்பாட்டடையும் போராளிகளின் உயிர்களையும், வளங்களின் தேவையையும் உணர்ந்து தன் உழைப்பை அதில் செலுத்தியிருப்பான்.
களமுனைக்குரிய அனுமதி இவனுக்கு கிடைக்காததற்கு முக்கியமான காரணம் இவர்கள் பங்குபற்றிய வழங்கல் நடவடிக்கை.
போராளிகள் மத்தியில் ஓர் கலந்துரையாடலில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள், சிறப்புத் தளபதி, பொறுப்பாளர்கள் மற்றும் கடற்புலிகளின் தாக்குதல் அணிகள், வழங்கல் நடவடிக்கை அணிகள் என அனைவரும் கூடியிருந்தவேளை…
அப்போது தேசியத் தலைவர் அவர்கள் அனைவரின் தேவைகள் நலன்கள் விசாரித்தார்; அப்போது வழங்கல் அணியினர் ஒருமித்து ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள் “நாங்கள் எப்போது அண்ணா சண்டைக்கு செல்வது? எமக்கு ஒரு சிங்கள கடற்படைக் கலம் அழிக்கும் சர்ந்தப்பம் வழங்கப்பட வேண்டும் என்று…..”
அப்போது தேசியத் தலைவர் அவர்கள் கூறினார்.
நிச்சயமாக உங்கள் அனைவருக்கும் நிறைய சர்ந்தப்பம் வழங்கப்படும். ஆனால், நீங்கள் இப்போது செய்யும் வழங்கல் பணி உயர்வானதும், அதி உன்னதமானதுமாகும். ஓர் சண்டைக்கு நிகரான பணிதான் ஆகையால் இந்தப் பணியை திறம்படச் செய்யுங்கள் என வாழ்த்துக்களையும் கூறி, ஆசிகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
தலைவரின் இந்தப் பதிலால் அனைவரது மனங்களும் நிறைந்து; தங்களுக்கு வழங்கப்பட்ட பணியில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டார்கள். ஆகையினால் சண்டைக்கு செல்லும் சர்ந்தப்பம் இயல்வளவன் இருந்த பணிச்சூழலால் அவனுக்கு எட்டப்படவில்லை.
2009ம் ஆண்டின் பின் தேவிபுரத்தில் சிங்கள இனவெறிப் படைகள் கண்டுபிடித்த நீச்சல் தடாகத்தை வைத்து எம் தலைமை மீது பொய்யான பிரச்சாரம் மேற்கொண்டது. அது தேசியத் தலைவரின் உல்லாச வாழ்க்கைக்கு கட்டப்பட்டது. உலாசமகா இருந்தார் என அது உண்மை இல்லை.
அந்த நீச்சல் தடாகம் 2004ம் ஆண்டு கட்டப்பட்டது போராளிகளின் பாவனைக்கும் மற்றும் போராளிகளின் சில பயிற்சிக்காகவும் அது கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் சிலம்பரசன் / றஞ்சன் அவர்களின் நினைவாக கட்டப்பட்டது. அந்த நீச்சல் தடாகத்தை பராமரிக்கும் பொறுப்பு கடற்புலி சுதா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது . ஆனாலும் சதீஸ் இயந்திரவியல் கல்லூரி போராளிகளையும் சார்ந்து இருந்தது. நீச்சல் தடாகம் அமைந்துள்ள வளாகத்தின் மறுமுனையில் தான் சதீஸ் இயந்திரவியல் கல்லூரி பாசறை அமைந்திருந்தது. நீச்சல் தடாகத்தின் சில உள்ளக வேலைகளுக்கும் – தேவைகளுக்கு சில போராளிகளை சிறப்புத் தளபதியின் ஆலோசனைக்கு அமைவாக லெப்டினன்ட் கேணல் கடாபி அவர்கள் நியமித்தார் அதில் இயல்வளவன் ஒருவனாக இருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2004ம் ஆண்டு அனைத்துலக தேசத்தின் சிலவற்றை தாக்கிய ஆழிப்பேரலை அனர்த்தம் ஈழத்தின் கரையோரங்களையும் தாக்கி பல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான வயது வேறுபாடுகள் இன்றி பல உயிர்களை காவுகொண்டு சோகத்தில் மூழ்கியிருந்தது. அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து வகையான படையணிகளும் தூரிதமாக மீட்புப்பணியில் ஈடுபட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதல் கடற்புலிகளின் ஏனைய உள்ளக பிரிவுகளின் எங்களின் அணியும் சென்று மீட்புப்பணியை மேற்கொண்டோம் அதில் இயல்வளவனும் ஒருவனாக இருந்தான்.
ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மீள்கட்டுமானம் செய்து மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்ய தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் ஆலோசனைக்கு அமைவாக ஒவ்வொரு படையணிகளுக்கும், நிர்வாகத்திற்கும் பாரிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டன.
அதில் விசேடமாக் சதீஸ் இயந்திரவியல் கல்லூரிப் போராளிகளுக்கும், மங்கை படகு கட்டுமானப் போராளிகளுக்கும் சில முக்கிய பொறுப்புக்களான மீனவர்களின் பாதிக்கப்பட்ட மீன்பீடி உபகரணங்களான படகுகள் – இயந்திரங்களை சீரமைத்து விபரங்கள் திரட்டும் பணி போராளிகளுக்கு வழங்கப்பட்டன.
லெப்டினன் கேணல் கடாபி அவர்களின் தலைமையில் பன்னிரண்டு இயந்திரவியல் போராளிகள் உள்ளடக்கி வடமராட்சி கிழக்கு மீனவ சங்களுக்கானவை வெற்றிலைக்கேணி பகுதியிலும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கான மீனவ சங்களுக்கானவை முள்ளியவளை பகுதியிலும் என மாறி மாறி மக்களின் பாதிக்கப்பட்ட மீனவர்கள் இயந்திரங்களை சீரமைத்து சரிசெய்யும் பணியில் ஏனையோருடன் இயல்வளவனும் ஒருவனாக திறம்பட மேற்கொண்டான். அதேபோன்று மங்கை படகு கட்டுமானப் போராளிகளும் தங்கள் பணியை திறம்பட செய்து தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் பாராட்டுதல்களையும் பெற்றனர்.
வட்டுவாகல் பகுதியில் ஒருமுறை கடற்புலிகளின் மகனார் – மகளீர் படையணிகள் எல்லோரையும் ஒருங்கிணைத்து வங்கக்கடலில் மற்றும் அனைத்துலகக் கடற்பரப்பில் வரலாறாகிய போராளிகள் பயணித்த எம்.வி.அகத், எம்.ரி.கொய், எம்.ரி.சொய் ஆகிய கப்பல்களின் பெயர்களின் அணிகள் பிரிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாக விளையாட்டுப் போட்டி படையணி சார்ந்து நடைபெற்றது. இறுதி விளையாட்டுப்போட்டி அன்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவும் இருந்தார். (விளையாட்டுப் போட்டியின் இறுதிநாளில் கலந்தும் கொண்டார்)
அன்றைய நாட்களில் சமாதான மேகம் எம் தேசத்தில் சூழ்ந்திருந்தாலும் விடுதலைகான பணியை எல்லைகளிலும், கடலிலும், எங்கள் தேசத்திற்கு வெளியிலும் பல படையணிகள் மேற்கொண்ட வண்ணம்தான் இருந்தனர். கடற்புலிகளின் இந்த அணிகளுக்கு நீண்ட காலத்தின் பின் விளையாட்டு மற்றும் கலைநிகழ்வில் எல்லோரும் ஓரிடத்தில் கூடினோம் அன்று….
ஆனால் விளையாட்டுப் போட்டியில் இரண்டு நாட்கள் தெரிவு செய்யப்பட்ட அணிகள் சார்பில் விளையாட்டுக்கான முன்னோட்ட பயிற்சி செய்துகொண்டிருந்தான் இயல்வளவன். அப்போது மன்னார் மாவட்டத்துக்கு வழங்கல் நடவடிக்கைக்கு தேவையான படகின் இயந்திரம் பழுதடைந்து இருந்தது. அதை அங்கிருந்த சரி செய்து கிராச்சிக்கு கொண்டுவர வேண்டும். கடாபி அண்ணாவின் தெரிவு செய்த இரண்டு போராளிகளில் இயல்வளவனும் ஒருவனாக இருந்தான். மன்னார் சென்று நடவடிக்கைக்கு ஏற்றவாறு சரிசெய்துவிட்டு மீண்டு சில நாட்களின் இடைவெளியில் முல்லைத்தீவு தளம் திரும்பினோம். ஒருமுறை இப்படி மன்னாரில் வழங்கல் நடவடிக்கைக்கான படகு ஒழுங்கு செய்யவேண்டும் இரவு ஒரு மணிக்கு சொல்லமுடியுமா என்று கடாபி அண்ணா இன்னும் சில போராளிகளுடன் விசுவமடுவில் இருந்த எமது கடற்புலிகளின் தளத்திலிருந்து மன்னாருக்கு படகை கொண்டு சென்றோம். எந்த சூழ்நிலையிலும் கடமை என்றாலும் சலிக்காமல் செய்து முடிக்கக்கூடியவன்தான் இயல்வளவன்.
மன்னார் மாவட்டம் இலுப்பைக்கடவையில் செங்கதிர் எனும் போராளியுடன் இணைந்து இயந்திரங்களையும் பராமரிக்கும் பொறுப்பினை செய்வதற்கு கடற்புலி லெப்டினன்ட் கேணல் எழில்கண்ணன் அவர்களிடம் அனுப்பிவைத்தார் லெப்டினன்ட் கேணல் கடாபி அண்ணா. அங்கிருந்து வழங்கல் நடவடிக்கையிக்கு தன்னால் முடிந்த உழைத்து செலுத்தி உறுதுணையாக இருந்தான். சில நாட்களில் அப்படியே ஆழ்கடல் வழங்கல் நடவடிக்கையில் ஏனைய கடற்கரும்புலி வீரர்களுடன் இணைந்து செயற்படுகிறான்.
இவனது தேசத்திற்கான பணி நீண்டகாலம் வழங்கல் நடவடிக்கை முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு என பரந்துபட்டு விரிந்ததால் நீண்ட காலம் கடலோடு கிடந்தது தேசத்திற்கான வளங்களை சேர்த்தான்.
சில வழங்கல் நடவடிக்கையின்போது எதிரியுடன் எதிர்பாராமல் முட்டுப்படும் சர்ந்தப்பத்தில் பல கடற்கரும்புலிகள், கடற்புலிகள், போருதவிப் படையினர் என உயிர்கள் அந்த கடலிடை காவியமாக இவனது நெஞ்சமும் அந்த அலைகளோடு மௌனித்தே குமுறிக்கொண்டே இருக்கும்.
வெடியாய் அதிரும் ஒவ்வொரு வெடிக்கும்
வரலாறு இருக்கிறது – கடல் மடியினில்
புதிய காவியம் படைத்தே வீரச்சாவு திகழ்கின்றது
வெளியினில் சொல்ல முடிவதில்லை
வீரச்சாவுகள் முழுதும் தெரிவதில்லை
இப்படியாக நீண்ட இவனது தேசத்திற்கு உழைப்பு இன்னோர் தடத்தையும் பதிவு செய்தது.
விடுதலைக்கு பலமாக கனரக ஆயுதங்கள், பீரங்கி ஆட்லறிகளை அனைத்துலக கடற்பரப்பிலிருந்து தாயகத்திற்கு தருவித்து என்பது இலகுவான காரியம் இல்லை; எல்லாவற்றையும் கடந்து எங்கள் கடலோடிகள் வெற்றி கண்டார்கள். ஆட்லறி பீரங்கியின் அளவு, அதன் கனவளவு அறிந்து அதைத் தாங்கும் அளவில் புதிய வடிவில் பல போராளியின் ஆலோசனைக்கு அமைவாக படகு கட்டுமானப் பிரிவினரால் படகு வடிவமைக்கப்பட்டு வலுக்கூடிய முறையிலான டிசல் இயந்திரமும் இணைக்கப்பட்டு கடற்கடற்புலி லெப்டினன்ட் கேணல் புரட்சிநிலவன் போன்ற மற்றும் ஏனைய சக தோழர்களினால் ஆட்லறி பீரங்கிகள் வன்னிக்கு மன்னார் ஊடாகவும், தென் தமிழீழ பகுதிக்கு மட்டக்களப்பு ஊடாகவும் தரவிறக்கப்படுகின்றது ஏனைய கடற்கரும்புலிகள் மற்றும் கடற்புலி மாவீரர்களுடன் இயல்வளவனின் தேசத்திற்கான உழைப்பும் உள்ளமையால் ஓர் நாள் வெளித் தெரியலாம் என்ற நம்பிக்கையில் இங்கே தவிர்க்கின்றேன்.
பீரங்கி மோட்டர்கள் பேசிடும் பொழுதினில்
இவர்களின் ஈகங்கள் தெரிந்திடும் – அதை
தூரங்கள் தாண்டியே கடலில் தந்தவர்
தோழமை உணர்வுகள் புரிந்திடும்.
உதிரிப்பூக்கள் எல்லாம் மாலையான பின்னே உள்ளே இருக்கும் நாரை கண்கள் அறிவதில்லையே இப்படியாக இவனது உழைப்பு பயன்பட்ட போது அன்றும் விடுதலைக்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையின் பயணம் தொடர்ந்தது.
ஆனால், போராட்ட வாழ்வில் போராளியாய் இயல்வளவன் தன்னை தடம்பதித்து பயணித்தது குறுகிய காலம்தான்; ஆனால் அவன் சிறிது காலத்தில் அவன் வகித்த பணியில் விடுதலைப்புலிகளின் பலத்திற்கு வளங்களை சேர்த்தும், கடற்புலிகளின் படைத்துறை மற்றும் நிர்வாகத்தின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் உழைத்தவர்களில் இயல்வளவனும் ஒருவன் அதற்கு இன்று உள்ளவர்கள் சான்று பகிர்வார்கள். சிறிய வயது ஆனால் அவனின் விடுதலைக்கான காரியம் பெரிது.
இப்படியே நீண்ட இவனது போராட் ட வாழ்வில் மெல்ல மெல்ல எம் தேசத்தில் சமாதான மேகம் களைய போர்மேகம் சூழ்ந்தவேளை எம் வழங்கல் நடவடிக்கை சற்று மாற்றம்பெற்று இப்போது எதிரிக்கும் – தூரோகிகளுக்கும் மத்தியில் நின்று எங்கள் நடவடிக்கை தொடர்கிறது………
அப்படித்தான் அன்று மட்டக்களப்பு மண்ணில்…….
அனைத்துலக கடற்பரப்பில் இருந்து வன்னிக்கு விடுமுறையில் சென்று மீண்டும் கப்பலுக்கு ஒரு படகை தருவித்துக்கொண்டு தாயகம் கொண்டுவருவதற்காக இருந்த கடற்புலி லெப்டினன்ட் கேணல் ஸ்ரிபன் தலைமையிலான நடவடிக்கைப் போராளிகள் படகின் வரவை எதிர்பார்த்து மறுமுனையில் காத்திருந்தார்கள். (இதே நேரம் இவர்கள் வன்னியிலிருந்து நடந்தே மட்டக்களப்பிற்கு வந்திருந்தார்கள் என்பது குறிப்படித்தக்கது; பின்னர் அனைத்துலக கடற்பரப்பிலிருந்து படகு கொண்டுவரும்போது அம்பாறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்காவின் வான்படையினரின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.)
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏனைய நடவடிக்கைகளை, நகர்வுகளை 2004ம் ஆண்டிற்கு பின்னர் சிறிலங்கா அரசுகளுடன் இணைந்து தேசவிரோத சக்திகள் (துரோகி கருணா குழு) தடுத்து பாரிய இழப்புகளை ஏற்படுத்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல துரோக சக்திகள் அன்று கடற்புலிகளின் போராட்ட வரலாற்றில் மாபெரும் துரோகத்தை விதைத்து பல விழுதின் வேர்களை அந்த கரை மணலில் சாய்த்தார்கள் தூரோகிரகள்.
இவர்கள் நடவடிக்கைக்கான தயார்படுத்தலை செய்தபோது இவர்கள் எதிர்பாராத சார்ந்தப்பத்தில் துரோகி கருணா குழு அந்த போராளிகளின் படகை சூழ்ந்துகொள்ள உடனே போராளிகளால் படகை வெடிக்க வைக்க முடியும் ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை காரணம் சுற்றி இணைக்கப்பட்டிருந்த மீனவ படகுகளும், மீனவர்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக… போராளிகளை நிராயுத பாணிகளாக துரோகிகள் கைது செய்து கரையில் கொண்டு சென்றார்கள்; அதிலும் ஆரம்ப நாட்களில் ஒன்றாக படுத்துறங்கி, ஒன்றாய் ஒரு தட்டில் உணவுண்ட முகங்கள் அங்கு துரோக சக்தியாக மாறி நிற்க மனம் தாங்குமா? ஆயினும் அனைத்தையும் கடந்து அவர்கள் துரோகிகள் எம் விடுதலைக்கு எதிராகவே அவர்கள் கரங்களில் ஆயுதங்கள் ஆயினும் போராளிகள் அடிபணிவதாக இல்லை. அப்போது மறு திசையில் இவர்களின் வரவை எதிர்பாத்து காத்திருந்த குரல்கள் தொலைத்தொடர்பில் இவர்களின் தொலைத்தொடர்பில் கூவிய வண்ணம் இருந்தது.
இங்கே துரோகிகள் புடைசூழ போராளிகளின் கைகள், கால்கள் கட்டபப்ட்டு விசாரணை ஆரம்பமாகியது.
எங்கிருந்து வருகின்றீர்கள்?
எங்கே செல்கின்றீர்கள்?
எங்கே எத்தனைபேர் என்ன என்ன என்ன திட்டங்கள் மாற்றங்கள் விபரங்கள் போன்றவற்றை அறியும் முனைப்புடன் விசாரணை மேற்கொண்டனர்; ஆயினும் போராளிகளின் வாய்கள் மௌனம் காத்தன.
பொறுமையிழந்த துரோகிகள் கோழைத்தனமான சித்திரவதை படலத்தை ஆரம்பித்தார்கள். (அதை இங்கே எழுத்துருவில் வடிக்கும்போது என் கண்களே பனிக்கின்றது) குருதி தொய்ந்து வலிகள் தொடர்ந்தாலும்…., முன்னைய காலத்தில் ஒன்றாக ஓர் அணியில் இருந்து ஓர் தட்டில் உணவுண்டு பழகிய நட்புகள் இளைத்த துரோகம் இன்னும் வேதனையை கூட்டியது அப்போது….
தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை மற்றவர்கள் உயிர் காக்கப்பட வேண்டும் அவர்கள் மூலம் தொடர்ந்து தங்களின் பணி தொடரவேண்டும் என்ற மனநிலையில் அங்கும் அவர்கள் போராட்ட மரபைக் கடைப்பிடித்து மெல்ல மெல்ல உயிரும் விட்டு பிரியும் நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது….
ஒரு தட்டில் உண்டு மகிழ்ந்த சக தோழர்கள் – சகோதரன் சாவதைப் பார்ப்பது எவ்வளவு கொடுமை அதுவே அங்கே…. துரோகியால் கட்டையால் அடித்து அடித்தே ஓர் வீரனை மண்ணில் சாய்தனர். அவனது உயிரும் அந்த அலைவந்து தாலாட்டும் கரை மண்ணில் கடலைப் பார்த்தவண்ணம் உயிர் பிரிந்து அவன் சாய்த்து சருகாகி விழுந்து போனான். எந்த ஒரு வைர நெஞ்சமும் கலங்கும் படி அங்கே நடந்த சம்பவம் ஏனையவன் மேல் துரோகிகளின் கோழைத்தனம் பாய்வதற்கு கைது செய்யப்பட்ட போராளிகளின் படகின் கட்டளை அதிகாரியின் முன் தொலைத்தொடர்பை வைத்து யாரையாவது இங்கு அழை என கூறினார்கள்.
அப்போது மறுமுனையில் இருந்தவர்களுக்கு உரிய நேரத்தை கடந்து தாமதமாவதனால் சந்தேகம் வலுக்கிறது எதோ நடந்துவிட்டது என அவர்களின் உள்ளூர்ணவு கூற ஒரு மீனவ சிறு படகைபோல் மாற்றிஅமைக்கபப்ட்ட கரும்புலி படகு விரைந்தது அவர்களைத் தேடி………..
கரும்புலிப் படகு இவர்களின் படகு குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருப்பதை கண்டுவிட்டார்கள்; படகிற்கு அண்மையாக கரைநோக்கி தொலைத்தொடர்பில் அறிவித்த படி மெல்ல மெல்ல நகர்ந்தார்கள். ஆயினும் படகின் அமைதியான சூழ்நிலை சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது. துரோகிகள் தங்கள் கைவரிசையைக் காட்ட தயாரானார்கள்; அந்தவேளை ஒரு பற்றையின் மறைவில் இருந்து கரும்புலிப் படகை நோக்கி R.P.G ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி கூவிவந்தது. உடனே லாபகமாக திருப்பி நிலையை உடனே உணர்ந்து வேகம் கூட்டியது கரும்புலிப் படகு. ஆயினும் கரும்புலிப்படகில் இருந்தவர்களின் விழிகள் அங்கே துரோகத்தால் எம் வீரர்களின் உடல்கள் சாய்க்கபப்ட்டு கிடப்பதை அவதானித்து நிலைமையை உடனே அறிவித்தார்கள். அப்போது துரோகிகளும் படகுகளும் கடலில் வர கரும்புலி படகு நீரைகிழித்து உயர சென்றது…….
அப்போது கரும்புலிப் படகில் இருந்து அறிவிக்கப்பட்டது….
நாங்க…… நாங்கள் உயர நல்லா இழுக்கிறோம்…..
இழுக்கிறோம் ஆக்களை நீங்க….. வந்தால் சாத்தலாம்……
உடனே துரோகிகளின் சில படகுகள் அவர்களை தொடர்ந்தது அப்போது…. கரும்புலிகள் இவர்களை உயர இழுத்து நல்ல அடிகொடுக்கும் எண்ணத்துடன் இருக்க…. மறுமுனையிலிருந்து வந்தது….
இல்லை…… இல்லை….. இப்ப வேண்டாம்………
நிலைமை சரியில்லை…….. நிலைமை……..
சண்டைக்கு ஓர் அனுமதியும், ஓர் கடற்சமரை திறக்கவும் உத்தரவை வேண்டிக் காத்திருந்தார்கள் கரும்புலி படகு…
ஆனால் அது எமக்கு சாதகமற்ற சூழ்நிலையும், இடமும் அந்நேரம் என்னதான் செய்வது………?
துரோக சக்திகளால் வீழ்த்தபப்ட்டவர்களின் இறுதித் தருணத்தில் கூட பதில் கூற முடியாதவர்களாய் நாங்கள் அன்று இருந்தோம். அன்றைய சமகால சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு….
பின்பு கரும்புலிப்படகு திசைமாற்றி அவர்களின் கண்ணில் இருந்து மறைந்து சில மணிநேரத்தில் தளம் திரும்பியது.
அந்த மாங்கேணி மணலில் துரோகிகள் தாக்குதலில் இதுநாள் வரையில் எம்மோடு அருகாய் இருந்த எங்கள் கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன், கடற்புலி லெப்டினன்ட் கேணல் குகன் ஆகிய விலைமதிப்பற்ற செல்வங்கள் ஆயிரம் கனவுகளுடன் பூவின் வாழ்வுபோல் உதிர்ந்து போனார்கள்.
இன்னலுறும் ஈழத்தமிழர்களின் வாழ்விற்காய் நீ வரித்துக்கொண்ட கறுத்த வரியின் வாழ்வை தினம் தினம் காதலித்த தேசியத் தலைவனை, தமிழீழ மண்ணையும் – மக்களையும், சக தோழ தோழியரை சோகத்தில் தகிக்கவிட்டு எட்டாத உயரத்துக்கு சென்றாய்.
வெடி சுமந்து பகை களம் அழைக்கும்
ஆசைக் கனவை மலர வைப்பதற்காய் – மாங்கேணி
வெண்மணல் மேனியை – உன்
உதிரத்தால் சிவப்பாக்கி சென்ற
துரோகங்கள் இன்று நீ நேசித்த மண்ணில்
இது நீள்வதில்லை என் ஆருயிர் தோழனே!!!
தினமும் உதயமாகும் அந்த செங்கதிர் உருவத்தில் எங்களின் கடலன்னை மடியிலிருந்து பிரசவமாகும் பல ஆயிரம் மாவீரர்களின் ஈகங்களும், தியாகங்களுடன் நீயும் கலந்திருந்து என்றும் எம்மை வழினடத்துவாய் தோழனே!!!!
அலைகடல் மணலில் நீ – நடந்த
ஈரம் காயவில்லை
வாழ்வில் நீ காட்டிய – நட்பின்
உருவும் இன்னும் மாறவில்லை.
உன் இழப்பின் வலியோ – நெஞ்சில்
கனமாக இன்றும் வலிக்கிறது
உன்னை அழித்த துரோகத்தை – இன்னும்
நாம் அழிக்கவும் இல்லை.
உன் போன்ற வீரனைப் பெற்ற அந்த வீரத்தாயவள் நிச்சயம் அறிந்திருப்பாள்; உன் மரணத்தை என்னதான் செய்வோம்? கையில் ஓர் முள்ளுக் குத்தினால் துவண்டு துடித்துப்போகும் தாய் மற்றும் உறவுகள் என்பாயே…. உன்னை கட்டையால் அடித்தே குற்றுயிராக போட்டார்கள் துரோகிகள் என்றால் என்ன பதைபதைக்கும் அந்த தாயின் உள்ளம்?
ஐயோ! எம்மால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை; உன் தாய்க்கு ஆறுதல் கூறும் நிலை எமக்கு இல்லை. தோழர்கள் நாம் என்ன செய்வோம். எம்மை மறுகணம் மறுதிசையில் கடமை அழைக்கிறது சென்றோம். ஈரக்காற்றின் அலை அவனது மேனி தடவி உன் நினைவுகளை மீட்டிச் செல்ல நீ விட்ட பணி முடிப்பதற்கு விரைகின்றோம்.
அன்னை மண்ணிலும், அன்னை மண் கடந்தும் நீளும் கடற்கரும்புலிகள் காவியத்தில் கடற்கரும்புலி மேஜர் புகழரசன் கடற்கரும்புலிகள் அணிக்குள் கடற்கரும்புலி கப்டன் இயல்வளவனாகிய உனது காவியமும்…… சற்று வித்தியாசமானதுதான்…. நாளை எம் தலைமுறை படிக்கும் உன் வரலாற்றை………….
பல உயிராயுதங்களின் உள்ளடக்கத்தில் இவன் நீளும் நினைவுககளாக கடற்கரும்புலிகள் பாகம் 11ம் நீள்கின்றது.
நிச்சயம் உங்கள் கனவை நனவாக்கி ஈழத்தை மீட்க கடலிலே காவியம் தொடர்வோம்!
நினைவுப்பகிர்வு: அகமொழி.
