கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம்

‘நான் போறன் அண்ணை’… கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம்.
சிதம்பரம்; நிறையப் படிக்க வேண்டும் என்று அவன் சின்னவனாக இருக்கும் போது ஆசைப்படுவான். ஆனால், குடும்பத்தின் கஸ்டநிலை அவனது கனவுகளைச் சிதைத்தது. நான்காம் வகுப்புக்குப் பிறகு அவன் புத்தகங்களைத் தூக்கியதில்லை. அவர்கள் குடியிருந்த வீட்டில்தான் ஏழ்மையும் குடியிருந்தது.
வீட்டில் அம்மாவும் அக்காமாரும் செய்கின்ற எள்ளுப்பாகுவையும், பலகாரங்களையும் தோளில் வைத்துக்கொண்டு அவன் தெருவில் இறங்குவான். திரும்பி வந்த பிறகுதான் அவர்கள் வீட்டில் அடுப்பெரியும்.
வளர்ந்தபின் ‘றோளரில்’ கடலில் மீன்பிடிக்கச் செல்வான்; மீன் கிடைக்காது போனால், வாட்டத்தோடு திரும்பி வருவான்.
முற்றத்தில் நிற்கும் வேப்ப மரத்தில் ஏறி பூ கொய்து கொண்டு வந்து கொடுத்து; “இதிலை ஏதாவது செய்யணை… சாப்பிடுவம்” என்று சொல்வான்.
சிதம்பரம் ஏற்கெனவே கலகலப்பானவன். துன்பம் வாட்டுகிறபொழுது, அவனது முகத்தில் அதைக் கண்டுகொள்ள முடியாது. எல்லோரையும் சிரிக்க வைத்து தானும் சிரிப்பான்.
சந்திரனாக இருந்தவன் தான்; 1989 இன் இறுதிக் காலத்தில் சிதம்பரமானான்.
ஆரம்ப நாட்களில் பலாலியில் சிங்கள முப்படைகளின் கூட்டுத்தளத்திற்கு எதிரில், ஒரு பிறண் எல்.எம்.ஜி உடன் காவலிருந்த சிதம்பரத்தின் பணி, பிற்காலத்தில் ஒரு கடற்புலி வீரனாக தமிழீழ அலைகளின் மீது தொடர்ந்தது.
இப்போது; சிங்களப் படையின் பீரங்கிக் குண்டினால் அரைவாசி இடிந்து நொருங்கிய அவர்களுக்குச் சொந்தமில்லாத வீடொன்றின் ஒரு பக்க மூலையில் கொடிய நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு இருகால்களும் இயலாத நிலையில், கட்டிலில் இருந்து கொண்டு சிதம்பரத்தின் ஏழைத்தாய் தன் வீரமைந்தனை நினைவுகூருகின்றாள்……
…அவனொரு இருட்டுக்குப் பயந்த பெடியன் மோனை… சின்னவயதில அவன் மீன்பிடிக்க போகேக்க, நான்தான் அவனை படகுவரை கூட்டிக்கொண்டு போய்விடவேணும்… அப்பதான் போவான்… அவனுக்கு அவ்வளவு பயம்… … அந்தமாதிரி பயந்து கொண்டு இருந்தவன்தான் தம்பி இயக்கத்துக்குப் போய் போராடி, அதே கடலில்… இப்ப இவ்வளவு வீரனாய்…” அந்தத் தாய் கண்ணீரோடு பெருமைப்படுகிறாள்.
தளபதி சூசை அவர்கள், தனது கண்களுக்குள் நிழலாடும் அந்த இறுதி நாட்களைப்பற்றிச் சொல்கிறார்.
“நடுக்கடலில் நிண்டுகொண்டு எங்களுக்கு சவாலாக இருந்த, சிங்களக் கடற்படையின் ‘அபித்தா’ என்ற கட்டளைக் கப்பலின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டோம்.
அதற்காக இரண்டு கரும்புலிகள் தயார் செய்யப்பட்டனர். அதில் ஒன்று ஜெயந்தன், மற்றது இன்னொரு போராளி.
கடைசி நேரத்தில், அந்தப் போராளியை தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் அனுப்ப முடியாமல் போய்விட்டது. என்ன செய்யலாமென நாங்கள் யோசித்துக் கொண்டிருந்த போது, அருகில் நின்று நிலைமையைப் புரிந்துகொண்ட சிதம்பரம் தானே முன்வந்து, ‘நான் போறன் அண்ணை’ என்று சொன்னான்.
சிதம்பரம் ஏற்கனவே தன்னை கரும்புலிகள் அணியில் இணைத்திருந்தான்.
ஆனாலும் திடீரென ஒரு தேவை ஏற்பட்ட போது தானே விரும்பி முன்வந்து கரும்புலித் தாக்குதலில் இறங்கியதை என்னால் மறக்க முடியாது.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
நன்றிகள்: உயிராயுதம்: பாகம் 01, விடுதலைப்புலிகள் இதழ் (ஆனி 1993).
