கடற்கரும்புலி கப்டன் வினோத்

நீங்காத நினைவுகள் கடற்கரும்புலி கப்டன் வினோத்
1988 ஆம் ஆண்டுக் காலப்பகுதி……
வினோத்தின் வீட்டை இந்தியப் படைகள் அடிக்கடி சுற்றிவளைத்தனர். அவனைத் தேடி இந்தியச் சிப்பாய்கள் அங்கு பாய்வது வழமையாகி விட்டது. அந்த ஆபத்தான பொழுதுகளில், வீட்டுக் கூரைக்குள் ஏற்றி பெற்றோரால் அவன் மறைத்துக் காக்கப்படுவான்.
மேலேயிருந்து “சயனைட்” குப்பியை பற்களுக்கிடையில் செருகிக்கொண்டு, எதனையும் எதிர்பார்த்து நொடிகளை எண்ணிக்கொண்டிருப்பான் வினோத்.
வினோத்தின் அக்கா சொல்கிறாள்.
“அந்த நேரத்தில் சின்னச்சின்ன ‘கானு’களுக்குள்ள (கொள்கலன்) என்னவோ கொண்டுவந்து, வீட்டு மூலையளுக்குள்ள வைப்பான்.
‘என்னடா உது’ என்று கேட்டால், ‘அதுக்குள்ள தண்ணியக்கா……’ எண்டிட்டுப் போயிடுவான்.
அவன் போனதுக்குப் பிறகு தூக்கிப் பார்த்தா, அது தண்ணியில்லை – இறுக்கமாக, பாரமாகக் கனக்கும்…… எங்களுக்கும் அது என்னெண்டு தெரியேல்லை.”
யாரும் எதிர்பாராத ஓர் அதிகாலைப்பொழுதில் – திடீரென வீட்டிற்குள் நுழைந்த இந்தியர்களிடம், வினோத் சந்தர்ப்ப வசமாகச் சிக்கிக் கொள்ள நேர்ந்தது. வீட்டில் எல்லோரும் பார்த்து நிற்க துவைத்து எடுத்துவிட்டு, அவர்கள் அவனை இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
வினோத்தின் அப்பா சொல்கிறார்;
“அவனொரு பயங்கரச் சுழியனடா தம்பி… அவனை இந்தியன் புடிச்சுக் கொண்டு போய் காம்பில வைச்சிருக்கேக்க ஒரு நாள்… வீட்டு விறாந்தையில கிடந்த வாங்கில படுத்திருந்தனான் – தற்செயலா மேல பார்த்தன், சிவரோட சேத்துப் பூட்டியிருக்கிற லைற்றின்ர கோப்பைக்கு மேலால, சாதுவா, கறுப்பா என்னவோ தெரிஞ்சுது… கதிரையைக் கொண்டு போய் வைச்சிட்டு ஏறி எடுத்தனடாமோனை – அது ஒரு கிறனைட். அப்படியே நிண்டு எட்டிப் பாத்தன் பக்கத்தை பக்கத்தை இருக்கிற நாலு லைற்றுக்கையும் கிறனைட் வைச்சிட்டுப் போயிருக்கிறான்……”
இயல்பாகவே மற்றவர்களோடு நெருங்கிப் பழகி – அவர்களை மகிழ்வில் ஆழ்த்தக்கூடிய சுபாவம் கொண்டிருந்த வினோத்தின் அப்பா தன் பிள்ளைபற்றி பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.
“இந்தியனிட்டை புடிபட்டு காங்கேசன்துறை காம்பில இருக்கேக்க – நாங்கள் அவனைப் பார்க்கப் போறனாங்கள். அங்கபோற நேரமெல்லாம், வீட்டில தான் வைச்சிட்டுப்போன சாமான்களைப்பற்றித்தான் தம்பி சொல்லுவான்… எங்களைப்பற்றி இல்லை. அதுகளை பத்திரமா எடுத்து பெடியளிட்டை குடுத்துவிடோணும் எண்டுறதிலதான் அவன்ர கவனமெல்லாம் இருக்கும்”
இந்தியப்படை இங்கிருந்து வெளியேற்றப்பட்டபோது, ஏனையவர்களுடன் வினோத்தும் விடுவிக்கப்பட்டான்.
‘தம்பி வந்திட்டான்’ என எல்லோரும் மகிழ்ச்சியடைந்திருந்த போது – 22 ஆம் நாள் வினோத்திரும்பவும் காணாமல் போய்விட்டான். அதன் பின் அவன் இடைக்கிடை வீட்டுக்கு வந்து போவான்.
திரும்பவும் சிங்களப் படையினருடன் சண்டை ஆரம்பித்து சில நாட்களே நகர்ந்திருந்தன – ஒரு நாள் வினோத் வீட்டிற்கு வந்தான்.
வரிப்புலிச் சீருடையில், ‘மிலிற்றறி’ சப்பாத்துப்போட்டு ஒரு கையில் துப்பாக்கியுடன், மறுகையில் புகைப்படக்கருவி ஒன்றையும் கொண்டு வந்தான். வீட்டில் எல்லோருடனும் சேர்ந்து படம் எடுத்தான். அக்காமாரைக் கட்டிப்பிடித்தபடி… அக்காமாரின் குழந்தைகளை தோளில் வைத்தபடி… ஆச்சியோடு நின்று… எல்லாவிதமாகவும் படமெடுத்தான்.
“என்னடா புதினமாக இண்டைக்கு எல்லோரோடையும் படம் எடுக்கிறாய்?” அக்கா கேட்டாள்.
“ஒண்டுமில்லையக்கா… நானொரு வேலையாய் தூர இடத்திற்குப் போறன்… திரும்பி வரமாட்டன்…” சிரித்துக்கொண்டு சொன்னான்.
அண்ணனின் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு, “உன்ர சித்தப்பா இனி வரமாட்டன்… இறுக்கிக் கொஞ்சிவிடு…” என்று சொல்லிக் கொஞ்சினான்.
“எங்களுக்கு அது அப்போது அவ்வளவு விளங்கேல்லை.”
வல்வெட்டித்துறையில் கடற்கரையோரமாக அவர்களுடைய வீடு இருந்தது. அங்கு பீரங்கிக் கப்பல்களின் தொடர்ச்சியான தாக்குதல்கள் நிகழும். இதன் காரணமாக, கொடிகாமம் சென்று அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த அம்மா அப்பாவையும் வினோத் சென்று பார்த்தான்.
கட்டி அணைத்துக்கொண்டு படம் எடுத்தான்.
அம்மா கேட்டபோது; அக்காவுக்குச் சொன்ன அதே காரணத்தை இங்கேயும் சொன்னான். அவர்களாலும் வித்தியாசமாக எதையும் உணர முடியவில்லை.
“நேவி அடிக்கிறானெண்டு அலைஞ்சு திரியாதையுங்கோ அம்மா… ஊரிலபோய் இருங்கோ… ஒரு நாளைக்கு… எங்கட கடல் எங்களிட்டை வரும்” என்றும் சொல்லிவிட்டுப்போனான்.
அதன் பிறகு ஒருநாள் கூட தங்களுடைய செல்வத்தை அவர்கள் காணவில்லை; இனிமேல் காணவும் மாட்டார்கள்.
இப்போதும் வினோத்தின் அம்மா, அவனைத் துயரத்தோடு நினைவுகூறுகிறார்.
“சின்னவனாய் இருக்கேக்க, என்னைவந்து கட்டிப்பிடிச்சுக் கொண்டு ‘அண்ணை அக்காமார் எல்லோரும் கலியாணம் செய்து போனதுக்குப்பிறகு, அம்மாவையும் அப்பாவையும் நான்தான் பார்ப்பன்’ எண்டு சொல்லுவானடா தம்பி……”
நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (ஆனி, 1993).
