கடற்கரும்புலி லெப். கேணல் சிலம்பரசன்

உயிர்க் கூட்டிலிருந்து பிரிந்த பறவை…
கப்பல் கப்டன், கடற்கரும்புலி
லெப். கேணல் சிலம்பரசன் / ரஞ்சன்
வேலாயுதம்பிள்ளை ஜெயரஞ்சன்
ஆழியவளை, வடமராட்சிக் கிழக்கு, யாழ்ப்பாணம்.
பிறப்பு: 31.11.1972
வீரச்சாவு: 10.03.2003
“ஜெயரஞ்சன் A/L சோதனையிலை பாஸ் பண்ணிட்டானாம். அவனுக்கு பி.கொம் கிடைச்சிருக்காம்” என்ற செய்தி அப்பாவின் காதுக்கெட்டியது. வீட்டில் எல்லோருக்கும் அவனை நினைக்கப் பெருமிதமாயிருந்தது. அப்பா அந்தச் செய்தியையும் காவிக் கொண்டு ரஞ்சனிடம் போனார். ஆனால் அந்தச் செய்தி அவன் காதுகளுக்கு எட்ட முன்பே அவன் தன் திறமைகளை இந்த தேசத்திற்காக அர்ப்பணிக்கத்தயாராகியிருந்தான். அப்பாவினால் அவன் முன்வைத்த வினாக்களிற்கு பதிலளிக்க முடியவில்லை. ஏனென்றால் அவை மறுக்கப்பட முடியாததாயிருந்தது. அப்போது அவன் பல்கலைக்கழக படிப்பிற்குள் முடங்கிப் போகாமல் அவன் எடுத்த முடிவு எங்கள் கடற்சேனையின் ஒரு கடற்தளபதி என்ற நிலைக்கும் எழுதுகோல்களுக்கும் வழிவகுத்தன.
அந்த வீரனைப் பற்றி இப்போது சொல்லக் கூடியவற்றை மட்டும் சுமந்தபடி அவனின் கடந்தகால வாழ்க்கைக்குள் எண்ணங்கள் நுழைகின்றன.
1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தப் போராட்டத்தின் பால் ஈர்க்கப்பட்டுச் செயற்பட்டவன், 1994 ஆம் ஆண்டளவில் தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக் கொண்டான். அந்த நாட்களில் அவனிற்கு முதலில் கிடைத்தது அரசியற்பணி. இளம் வயதிலேயே ஒரு முதிர்ச்சியாளனுக்கேயுரிய அறிவைக்கொண்டு அரசியற் பணியை சரிவரச் செய்து வந்த அவனுக்கு 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யாழ்குடாநாட்டிலிருந்தான இடப்பெயர்வு பெரும் சவாலாக அமைந்தது.
குறுகிய கால அவகாசத்திற்குள் எமது போராளிகளையும் எமது வளங்களையும் ஒருங்கிணைத்து வன்னிக்கு அனுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்படுகின்றது. குறைந்தளவு வளங்களோடு கூடிய அளவு செயற்திறனைக்காட்ட வேண்டிய நிலை அவனுக்கு, ஆனாலும் துணிவோடு அதைச் சவாலாக ஏற்று குருநகர் ஐந்து மாடிக்கட்டிடத்தில் நின்றபடி கடற்புலிகளின் போராளிகளுக்கு நிதானமானதும் சாதுரியமானதுமான கட்டளைகளை வழங்கி சிக்கலான அந்தப் பணியைச் செய்து முடித்தது. அவன் திறமையின் முதற்சான்றாய் அமைந்தது.
ஒவ்வொருக்கும் ஏதோ ஒரு துறையில் ஈடுபடும் திறமையும் உள்ளதென்பது சாதாரணமான விடயம். ஆயினும் எல்லாத் திறமைகளையும் தன்னகத்தே கொண்டு இயங்குபவர்கள் பலர் இருக்க முடியாது. இந்த சிலம்பரசன் அந்தச் சிலருக்குள் அடங்குகிறான். ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பான எங்களின் கடல் அணியில் இருந்தபடி தான் வாழ்ந்த காலத்தில் கடந்து வந்த கடின பாதையின் எல்லாச் சுமைகளிலும் தோள்கொடுத்துச் சுமந்தவனவன்.
அது 1998 ஆம் ஆண்டின் நாட்கள். யாழ்ப்பாணத்தினை ஆக்கிரமித்துள்ள சிங்களப்படைகள் கடல்வழியை நம்பியே உயிர்வாழ்வதால் அதற்குத் துணைபோகும் கடற்கலங்களை வழிமறித்து தாக்கி அழிக்கத் திட்டம் தீட்டப்படுகின்றது.
சிங்களக் கடற்படையின் கப்பல்கள் பயணம் செய்யும் ஒரு இரவுப்பொழுதில் கடற்புலிகளின் தளத்தில் இருந்த லெப். கேணல் நிரோஜனின் கட்டளையின் கீழ் கடற்சமர்க்களம் புக கடற்புலிகள் தயாராகினர். அங்கே தாக்கப்படப்போகும் கப்பலொன்றை அழிக்கும் பொறுப்பு சிரம்பரசனிடம் வழங்கப்படுகின்றது.
சிலம்பரசன் தன் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் போராளிகளையும் கடற்கலங்களையும் தயாராக்கினான். புறப்படுவதற்கு முன்பாகவே தன் போராளிகளுடன் சேர்ந்துஇ கப்பலை அழிக்காது தளம் திரும்புவதில்லை என்று
உறுதியெடுத்துக்கொள்கிறான். புலிகளின் கடற்கலங்கள் கடலுக்குள் இறக்கப்பட்டு கடற்சமர்க்களம் நோக்கி புறப்படுகின்றன. மூன்று சண்டைப்படகுகளும் இரண்டு கரும்புலிப்படகுகளும் கொண்ட கடற்புலிகளின் தாக்கும் அணி எதிரியின் பாரிய வழங்கல் அணியில் பயணித்த ‘பபதா’, ‘வலம்புரி’ ஆகிய கப்பல்களையும் ஒரு தறையிறங்கு கலத்தையும் அவற்றிற்குப் பாதுகாப்பாகப் பயணித்த அதிவேக டோறாப்படகுகள் ஆறினையும் அவற்றிற்கான துணைப்படகுகள் நான்கினையும் எதிர்கொள்ளப்போகின்றன. படகுகளின் பலம் என்று பார்க்கும் பொழுது கடற்புலிகளின் பலம் எதிரியுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாததாய் இருந்தது. ஆனாலும் துணிச்சல் மிக்க வீரர்களால் அந்தக் கடற்சமர் எதிர்கொள்ளப்படுகின்றது.
முல்லைத்தீவுக்கு நேராக அந்தக் கடற்படையின் கப்பல் அணியை தடுத்துச் சமர் புரிய முனைந்த போதும் அவை தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்றன. ஆனாலும் பருத்தித்துறைக்கு நேரே கடற்புலிகள் கடற்படையின் கப்பல்களை வழிமறித்துச் சமர் புரியத் தொடங்கினர்.
கடற்புலிகள் தலைமையகத்துடன் தொடர்பில்லாது முற்றிலும் சாதகமற்றதும் எதிரியின் எல்லைகளுக்குள்ளும் நின்றபடி கடற்சமரை லெப். கேணல் நிரோஜன் வழிநடத்த அதற்குத் துணையாக சிலம்பரசன் தன் படகை வழிநடத்தி சமர்புரிந்துகொண்டிருந்தான். அந்தக் கப்பற் தொகுதியில் பயணித்த வலம்புரிக்கப்பல் மீது இலக்கு வைத்து சிலம்பரசனின் படகு தாக்குதல் நடாத்தியது. எதிரியின் கப்பல்களை நெருங்கவிடாது டோறாக்கள் நெருப்பு மழை பொழிந்த போதும் துப்பாக்கிச் சன்னங்களிடையே தன்னுடன் வந்த கரும்புலிப்படகிற்குப் பாதை அமைத்துக்கொடுத்து வலம்புரிக் கப்பலை அழிக்கும் நடவடிக்கையில் வெற்றிகண்டான் சிலம்பரசன்.
வலம்புரிக் கப்பலும், பபதாக் கப்பலும் கடலில் மூழ்கிக்கொண்டிருக்க சாதகமற்ற சூழலுக்குள் இருந்து தளம் திரும்பின கடற்புலிகளின் அணிகள்.
கடற்புலிகள் அணியின் பல்துறை சார்ந்த செயற்பாடுகளில் எந்தச் செயற்பாட்டிலும் இறுக்கநிலை வந்து அடுத்த கட்டங்களிற்கு நகருவதற்கு தடை ஏற்படின் அந்தத் தடைகளை உடைக்கும்; முதல்மனிதனாக சிலம்பரசனின் உருவம் கடற்புலிகளின் சிறப்புத்தளபதியின் முன் தோன்றும். அவ்வாறுதான் கடற்புலிகளின் விநியோக அணியானது நெருக்கடி நிலையைச் சந்தித்த போது தமிழீழத் தேசியத் தலைவராலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியாலும் அந்தப் பணிக்கு சிலம்பரசன் நியமிக்கப்பட்டான்.
இயல்பாகவே தனித்துவமான திறமைகளைக் கொண்டிருந்த சிலம்பரசன் கடல்சார்ந்து தான் பெற்றிருந்த கல்வி மூலமும் தனது துணிவும் மதிநுட்பமுமான செயற்றிறன் மூலமும் நெருக்கடிகளைத் தாண்டி கடலில் கடற்புலிகள் விநியோகப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து எமது விடுதலைப் போராட்டங்களில் ஏனைய போராளிகள் களங்களில் புரிந்த பல சாதனைகளுக்கு வெளித்தெரியாமல் உழைத்தவன்.
கடற்புலிகளின் விநியோகப்பணியில் ஈடுபட்ட நாட்களில் தனது விநியோக அணியின் உதவியுடன் சிறிலங்காவின் கடற்கலங்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவன் மனதில் எழுந்தது. தன் எண்ணக்கருவைச் செயல் வடிவமாக்க கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் அனுமதியுடன் திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் உகின கப்பல் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு லெப்.கேணல் பழனி தலைமையில் கடற்புலிகளின் தாக்குதற் படகுகள் கடலிற்குள் இறக்கப்படுகின்றன.
முல்லைத்தீவுக்கு நேரே 50 மைல்களைக் கடந்த தூரத்தில் கப்பலை வழிமறித்துத்துத் தாக்க கடற்புலிப்படகுகள் பயணித்துக்கொண்டிருந்தன. ஆனால் அந்தப் பயணத்தின் போது கடல் ஒத்துழைக்க மறுத்துக் கொண்டிருந்தது. அதிகரித்து வீசிய கடற்காற்றின் வேகம் படகுகளைச் சரியான இலக்கை நோக்கி நகர்த்தத் தடையாய் இருந்தது. ஆனாலும் எடுத்த முயற்சியிலிருந்து பின்வாங்குவதில்லை என்பதற்காய் கடல்கொந்தளித்துக் கொண்டிருந்த இரவுப்பொழுதில் இலக்கிற்காகக் காவலிருந்து தாக்குதலைத் தொடுத்தனர் கடற்புலிகள்.
தாக்குதலின் உச்சகட்டம். கரும்புலிப்படகுகள் கப்பலை மோதித் தகர்க்கப்போகின்றன. அந்த வெடியதிர்வின் பின்னால் நான்கு கடற்கரும்புலிகள் இந்த மண்ணிற்காய் மடியப்போகின்றார்கள். சமர்க்களத்தை நோக்குகிறான் சிலம்பரசன். எதிரியிடமிருந்து கிடைக்கும் எதிர்ப்பு சற்றுத் தணிந்து கொண்டு போகிறது. உடனடியாகவே இரண்டு கடற்கரும்புலிகளைக் கடலுக்குள் குதிக்கும்படி கட்டளை வழங்குகிறான். இரண்டு கடற்கரும்புலிகளுடன் அந்த கரும்புலிப்படகு உகின கப்பலில் மோதி வெடிக்கின்றது. நிலையில்லாது தளம்பிக் கொண்டிருக்கும் ஒரு படகில் நின்றபடி தன் கடல் சார்ந்த அறிவின் மூலம் அந்தக் கடற்சமர்க்களத்தில் அவன் எடுத்த முடிவானது இரண்டு கடற்கரும்புலிகளை அந்தத் தாக்குதலில் இழக்காது அந்தக் கப்பலை அழிப்பதற்காக நாங்கள் செலுத்த வேண்டிய உயர்விலையைக் குறைத்திருந்தது.
அந்த இரு கரும்புலிகளையும் தனது படகில் ஏற்றியபடி தளம் திரும்பினான் சிலம்பரசன்.
இப்படியான அவனின் நிதானித்த செயற்பாடுகள் பல கடினமான பணிகளை நிறைவேற்றக்கூடிய மனிதனாக அவனை இனங்காட்டியது. அதனால்தான் ஓயாதஅலைகள் 3 நடவடிக்கையின் முதற்கட்டத்தில் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்ட பணி சிலம்பரசனின் வழிநடந்ததலில் விடப்படுகின்றது. இதுவரை அவன் எதிர்கொண்ட சமர்களுடன் ஒப்பிடும் போது இது சற்று வித்தியாசமானதாயிருந்தது. இதுவரை கடலிலிருந்து கொண்டு கடலிற்குள் நிற்கும் எதிரியுடன் தான் சமர்புரிந்தார்கள். ஆனால் இங்கே கடலில் நின்றபடி தரையிலிருக்கும் எதிரிக்குத் தாக்குதல் பணி. கடற்புலிகள் இப்படியான சமரைச் சந்திப்பது இதுவே முதற்தடைவ.
சமர்க்களம் தரைப்புலிகளால் தொடக்கிவைக்கப்படுகின்றது. கட்டைக்காடு முன்னரங்க நிலைகளை உடைத்து உள்நுழையும் முயற்சியில் தரைப்புலிகள் ஈடுபட்டனர். சிலம்பரசன் தனது படகுடன் ஏனைய கடற்புலிப்படகுகள் சிலவற்றையும் அழைத்துக் கொண்டு கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி கரையோரமாக உள்ள காவலரண்களைத் துடைத்தழிக்கும்; நடவடிக்கையில் இறங்குகின்றான். தரையில் நிலையாக மூடி அடைக்கப்பட்ட காப்பரணுக்குள் நின்றபடி துப்பாக்கிச் சன்னங்களையும் குண்டு மழையினையும் பொழியும் எதிரி மீது கடலில் நின்றபடி தாக்குவதென்பது இலகுவானதாயிருக்கவில்லை. கடற்புலிகளின் படகுகள் கடலில் நின்றபடி தாக்குதல் நடாத்தத் தொடங்கியதும் சிங்களப் படையின் றோடாப்படகுகள் கடற்புலிகளின் படகுகளைத் தாக்கத் தொடங்கின. அன்றைய கடற்சூழ்நிலையும் கடற்புலிகளின் சிறிய சண்டைப்படகுகளுக்கு உகந்ததாக இருக்கவில்லை. கடற்காற்று பலமாக வீசிக்கொண்டிருந்ததால் இலக்குகளை குறிவைத்துத் தாக்குவது சிரமமாகவிருந்தது. ஆனாலும் அன்றைய சமர்க்களத்தில் அது முக்கியமான பணியாகவிருந்தமையினால் அவன் தொடர்ந்தும் எதிரியின் இருப்பிடங்கள் மீது கடலில் நின்றபடி தாக்கிக் கொண்டிருந்தான். அந்தப் பணியின் ஒரு கட்டத்தில் சிங்கள விமானப் படையின் உலங்குவானூர்தித் தாக்குதலில் அவன் தலையில் காயப்படும்வரை எதிரியின் இலக்குகளை அழித்துக்கொண்டிருந்தான். அந்தச் சமரின் முடிவில் அந்த ஊர்கள் எங்களது கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தன.
இப்படியான அவனின் வெற்றிகளுக்கு காரணமாயிருந்தவையெல்லாம் அவனின் திறமைகளே, எந்தச் சமர்க் களத்திலும் எந்த இறுக்கமான கட்டத்திலும் நிதானித்து பதட்டமில்லாமல் முடிவெடுத்துச் செயற்படுவது அவனது வெற்றிகளுக்கு முதற்காரணமாயிருந்தன. சண்டைக்காகவோ அல்லது விநியோகப்பணிக்காகவோ அவன் செல்லும் போது ஆண் போராளிகளுக்குச் சமமாக பெண்போராளிகளையும் அழைத்துக்கொண்டு செல்வான். இன்று கடற்புலிகளில் கட்டளை அதிகாரிகளாகச் செயற்படும் ஆண், பெண் போராளிகளை வளர்த்தெடுப்பதில் கணிசமான பங்கு சிலம்பரசனுக்கே உரியது.
பெண் போராளிகளும் கடலில் சாதிக்கமுடியும் என்பதை கடலில் நிரூபித்த கடற்புலிப்பெண் போராளிகளின் வளர்ச்சிக்கு சிலம்பரசன் கொடுத்த ஊக்குவிப்பும் சந்தர்ப்பமும் முக்கியமானது.
ஒவ்வொரு தாக்குதலின் முடிவிலும் அல்லது ஒவ்வொரு விநியோகப் பணியின் முடிவிலும் தன்னுடன் செயற்பட்ட போராளிகளை ஓய்வாயிருக்கும் நேரங்களில் அழைத்து அந்தப் பணியில் அவர்களின் செயற்பாட்டிலிருந்த சரியானஇ தவறான செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டி அடுத்த கட்டத்தில் அதை எப்படி முன்னெடுக்கலாம் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பான்.
அவன் சாள்ஸ் படையணியின் பொறுப்பாளனாக இருந்த காலங்களிலெல்லாம் தான் ஒரு கட்டளை அதிகாரி என்ற நிலையில் மட்டுமே நின்று கொள்ளாது, ஒரு கடற்புலிப்போராளியின் பல்வேறு சுமையான பணிகளுக்குள் தானும் முகம்கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி விளைவுகளை பயன்மிக்கதாய் ஆக்கும் திறமை அவனிடமிருந்தது.
ஒரு போராட்ட அமைப்பாகவிருந்து வளர்ந்து கொண்டிருக்கும் படை என்கின்ற ரீதியில் வீணாக எந்தவொரு வளத்தையும் இழந்துவிடக்கூடாதென்பதில் அவன் அக்கறையாய் இருந்தான் என்பதை அவன் கடற்சமர்க்களங்களில் எடுக்கும் முடிவுகள் காட்டி நின்றன.
ஒருமுறை வன்னித்தளம் நோக்கி போராளிகளை ஏற்றி இறக்கும் பணி கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றது. அந்தப் பணியில் சிலம்பரசனும் சென்றிருந்தான். போராளிகளை இடம்மாற்றும் இந்தச் செயற்பாட்டை எதிரி அறிந்து கொண்டதால் எதிரி கடலில் வைத்து சண்டை புரிவதற்குத் தயாராகியிருந்தான். போராளிகளை ஏற்றிய படகுகள் பயணிக்க அவற்றிற்குக் காவலாய் கடற்புலிகளின் சண்டைப்படகுகளும் வந்து கொண்டிருந்தன. எதிர்பார்த்திருந்த கடற்படையின் தாக்கும் கலங்கள் போராளிகளின் படகுகள் மீது குறிவைக்கின்றன. தாங்கள் கொண்டு செல்லும்போராளிகளுக்கு எதுவும் நடக்கக்கூடாதென்பதற்காக கடற்புலிகளின் சண்டைப்படகுகள் முன்சென்று எதிரியை எதிர்கொண்டன. கடற்புலிகளின் படகுகளைச் செல்லவிடாது எதிரி தடுத்துச் சண்டையை இடைவிடாது தொடர்ந்த வண்ணமிருந்தான்.
சண்டையின் ஒரு கட்டத்தில் கடற்புலிகளின் சண்டைப்படகு தாக்குதலுக்குள்ளாகின்றது. அதிலிருந்த போராளிகள் சிலர் வீரச்சாவடைகின்றனர். படகின் இயந்திரங்கள் செயலிழக்கின்றன. படகின் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்ட அவனுக்கு படகை இயக்கமுடியாவிட்டால் அதனை அழித்துவிட்டு வரும்படி கட்டளை கிடைக்கின்றது. ஆனால் சிலம்பரசன் அந்தப் படகை இழக்க விரும்பவில்லை. ஏனெனில் அந்தப்படகை கடற்புலிகளின் தாக்குதற் கலமாக மாற்றுவதற்காகப் பட்ட சுமைகளைத் தாங்கியதில் அவனுக்கும் பங்கிருந்தது. அதனைவிட அவன் படகின் கட்டளை அதிகாரியாக மட்டுமல்லாமல் படகின் எந்தநிலையினையும் கையாளக்கூடிய திறமையிருந்ததால் அவன் அந்தப் படகின் இயங்க மறுத்த இயந்திரங்களை இயங்கும் நிலைக்கு கொண்டுவர கடும்முயற்சி செய்தான். அவன் முயற்சியின் பலனால் அன்றைய நாளில் இழக்கப்பட வேண்டிய அந்தப்படகு இழக்கப்படாமல் இருந்தது.
இப்படித்தான் சின்னச்சின்ன விடயங்களிலெல்லாம் முன்மாதிரியாகச் செயற்பட்டுப் போராளிகளுக்கு கடலின் நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்தான். ஒரு படகின் பல்வேறுபட்ட வேலைகளை ஒவ்வொரு நிலையிலும் நிற்பவர்கள் செய்வார்கள். ஒரு கட்டளை அதிகாரியாக, படகோட்டுபவனாக, தொலைத்தொடர்பாளனாக, இயந்திரத்துப்பாக்கிச் சூட்டாளனாக எனவிரியும் பணிகளில் எல்லாப்போராளிகளும் எல்லா நிலைகளுக்கும் உரியவர்களாக வளர்க்கப்பட வேண்டுமென்பதில் அவன் கவனமெடுத்துச் செயற்பட்டான். அதற்கேற்றாற்போல தன்கீழ் பணிபுரியும் போராளிகளுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாயிருந்தான். ஏனெனில் சண்டைக்களங்களில் படகின் ஏதாவதொரு நிலையில் நிற்கும் போராளி செயலிழந்துவிட்டால் அதை உடன் நிவர்த்தி செய்யக்கூடியவாறு இருக்க வேண்டுமென்பதை அவன் அனுபவங்களினூடாக உணர்ந்திருந்தான்.
இந்த அனுபவங்களோடு தான் வரலாற்றுச்சிறப்பு மிக்க குடாரப்பு தரையிறக்கப் படைநடவடிக்கையின் ஆரம்பத்தில் ஒரு படகுத்தொகுதியின் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டான். விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் சவாலாக ஏற்றுச் செய்த இந்தப்பணியில் சிலம்பரசனின் பங்குமிருந்தது. கட்டைக்காடு வெற்றிலைக்கேணிப் பகுதியைக் கைப்பற்றும் சமரில் தலையில் விழுப்புண்பட்டு அதன் வேதனைகள் முழுமையாக ஆறுவதற்கு முன் இந்தச் சண்டையிலும் அவன் கலந்து கொண்டான். இதனால் சண்டையின் ஒரு கட்டத்தில் அவன் கடலில் இருந்து கரைக்கு அழைக்கப்பட்டான். கரையில் நின்றபடி கடற்புலிகளின் சிறப்புத்தளபதியின் கட்டளைக்கேற்றபடி போராளிகளையும், தரையிறங்கிய போராளிகட்குரிய ஆயுத, உணவு விநியோகங்களையும் ஒழுங்குபடுத்தி நகர்த்திக்கொண்டிருந்தான்.
இந்தச் சண்டைகள் முடிந்து ஊர்கள் பல எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்ததும் சிலம்பரசனுக்கு கடற்புலிகளின் அரசியற்பணி மீண்டும் வழங்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஊர்களை மீண்டும் புதுப்பித்து வளமாக்குவதற்காக அவன் உழைத்துக் கொண்டிருந்தான். அதிலும் வடமராட்சிக்கிழக்கில் ஒரு மாவீரர் துயிலுமில்லமொன்றினை நிறுவவேண்டுமென்ற விருப்போடு தமிழீழ மாவீரர் பணிமனையுடன் தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தான்.
மீண்டும் அவன் தன் கடமைகளைப் பொறுப்பேற்கும் காலம் வந்தது. எந்த வேளையிலும் எந்த வேலையையும் செய்யக்கூடிய ஆற்றலம் திறமையும் அறிவும் மிக்க அந்தவீரன் அந்தப்பணியை பொறுப்பெடுத்துக் கொண்டான். ஒரு கப்பலின் கப்டனாக அவன் கடலில் பயணித்தபோது இந்தச் சமாதான காலத்தின் விலையாய் அவனையும் அவன் தோழர்கள் பத்துப் பேரையும் இழந்து போனோம்.
அவன் ஆசைப்பட்டபடி அவனது ஊரில் ஒரு துயிலுமில்லம் அமைக்கத் தீர்கானிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதற்கல்லாய் அவன்தான் வருவானென்று நாங்கள் கனவிலும் எண்ணவில்லை.
நினைவுப்பகிர்வு: புரட்சிமாறன்
நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி, சித்திரை 2004).
