கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் இறுதி விருப்பம்

கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் இறுதி விருப்பம்
1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப்படை முகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான்.
ஒருநாள் முகாமிலிருந்து சிங்களப்படையினர் வெளியேறிய போது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சந்தர்ப்பத்தில், எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகிய பொழுது, காந்தரூபன் குப்பியைக் கடித்து விட்டான்.
ஆனால், அதிஷ்டவசமாக சக தோழர்களால் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்டான். இருந்தபோதும் – சயனைட் விசம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
1988, 1989 காலம். இப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றான்.
காந்தரூபனிற்கு இப்போதும் நிறை உணவு தேவைப்பட்டது. ஒரு பசுமாடு இருந்தால் காந்தரூபனிற்கு பால் எடுப்பதுடன், சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கும் பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர், வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப் பசு ஒன்றை, காட்டுக்குள் இருந்த தளத்திற்குக் கொண்டு வருமாறு சொன்னார்.
பசு வந்து சேர்ந்தது. தலைவரின் துணைவியார் (மதிவதனி அண்ணி), ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார். அந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிற்பான். தான் ஒரு கதியற்றவன் என்ற கவலையே அற்றுப்போகும்.
ஒருநாள் அன்பு கலந்த மரியாதையோடு, காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தான். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர்.
“அண்ணை… என்னை கரும்புலிகளில சேர்த்துக் கொள்ளுங்கோ…” என்றான். அதோடு தனது உள்ளத்துக்குள் உறைந்துகிடந்த இன்னொரு விருப்பத்தையும் அவன் தலைவரிடம் சொன்னான்.
உங்களுக்குத் தெரியும் அண்ணை, நானொரு ‘அநாதை’. அப்பா இல்லாம அம்மா இல்லாம ஆருமே இல்லாம அலைஞ்ச என்னை – ஒரு அப்பாவும் அம்மாவும் எடுத்து, தங்கட பிள்ளையைப் போல வளத்தினம்.
“…… அதுக்குப்பிறகு நான் இயக்கத்துக்கு வந்தன். நீங்கள் என்னை அன்போடையும், பாசத்தோடையும் ஆதரிச்சு வளர்த்தியள். நான் வருத்தங்களால வாடேக்கை எனக்கு வேண்டிய எல்லாத்தையும் செய்து கவனிச்சியள்……”
“இப்ப நான் உங்களிட்டை ஒண்டு கேட்கப் போறன் அண்ணை. தயவு செய்து எனக்காக நீங்கள் அதைச் செய்யவேணும்……” அவனுக்கருகில் இருந்து அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் தலைவர்.
“என்னைப்போல எத்தனையோ பொடியள் இந்த நாட்டில அநாதைகளா வாழுறாங்கள்… அப்பா அம்மா இல்லாம, சொந்தக்காரரின் ஆதரவில்லாம அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாம, படிக்க வசதியில்லாம, எவ்வளவோ ஏக்கங்களோடையும் துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை, நான் அனுபவத்தில கண்டனான் அண்ணை……”
“நீங்கள் என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேணும். அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கெண்டு ஒரு இடத்தை அமைச்சு, அங்கைவச்சு அவங்களையெல்லாம் வளத்தெடுத்து – அவங்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் குடுத்துவிடுங்கோ அண்ணை……”

தலைவரின் இதயத்தை இது தொட்டது. அப்படியான ஒன்றின் தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அவ்வாறான இல்லமொன்றை ஆரம்பித்து – காந்தரூபனின் நினைவாக, அதனை அவனது பெயரிலேயே செயற்படுத்தத் தான் எண்ணியுள்ளதாக, தலைவர் கூறுகின்றார்.
அதற்குரிய ஏற்பாடுகளிலும் தலைவர் ஈடுபட்டு பின்னாளில் அவ்வாறான இல்லமொன்றை ஆரம்பித்து காந்தரூபனின் நினைவாக அதனை “காந்தரூபன் அறிவுச்சோலை” என்ற பெயரிலேயே ஆரம்பித்து வைத்தார்.
நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (ஆனி, 1993).
