கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்

மகன்: கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்.
“ஒருநாள் தொழிலுக்குப் போறதுக்கான ஒழுங்குகளைப் பார்க்க நான் கடற்கரைக்குப் போனன். கரையில ஊர்ச்சிறுவர்களோட புதுசா ஒரு பையனும் நிண்டு கொண்டிருந்தான். ஒரு கிழிஞ்ச பெனியன் போட்டுக்கொண்டுஇ மெலிஞ்ச உடம்போட அவன் இருந்தான். அவனைக் கூப்பிட்டு
“நீ ஆர் தம்பி? எங்க இருந்து வாறாய்? என்று ஆதரவோட கேட்டன்.
உடனேயே அவனுக்கு இரண்டு கண்களும் கலங்கிப்போச்சுது. ‘எனக்கு ஒருத்தருமில்லை… அம்மா அப்பா எல்லாம் செத்துப் போச்சினம்… சொந்தக்காரர் ஆருமில்லை… இப்படியே நடந்து நடந்து இந்தக் கடற்கரைக்கு வந்து சேர்ந்தன் என்றான்’.
காந்தரூபனை தனது சொந்த மகனைப்போல எடுத்து, பாசத்தோட வளர்த்த அவர், அவனின் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
“கலியாணம் செய்து நீண்டகாலமாக எங்களுக்கு குழந்தை கிடைக்கேல்லைத் தம்பி… ஆரிட்டையாவது ஒரு குழந்தையை எடுத்தாவது வளப்பம் எண்டு நாங்கள் நினைச்சுக்கொண்டிருந்தம்…
அந்த நேரத்திலதான் தம்பி எங்களிட்ட வந்தான். அவனை வீட்டுக்குக் கூட்டிவந்து – சொந்தப் பிள்ளையாக வளர்த்தம்…”
“இது நடந்தது பதினைஞ்சு வருசத்துக்கு முந்தி… அதுக்குப் பிறகு காந்தரூபன் வளந்து பெரியவனாகி, பின் இயக்கத்துக்குப் போனான்…”
அவர் மனதைத் திறந்து கதைத்துக்கொண்டிருந்தார்.
“நான் கடற்புலியளுக்கு ஓட்டியாய் போறனான். வண்டியில நாங்கள் பொடியளையோ, சாமான்களையோ கொண்டுவாற நேரங்களில கனதரம் நேவியால கலைபட்டிருக்கிறம். இப்படி நாங்கள் போய் வாறதுகள் பற்றி தகவல்சொல்கிற பெரிய கப்பல் நடுக்கடலில நிக்கும். அந்தக்கப்பல் எடுக்கிற தகவல்கள்தான் நாங்கள் கடலில பறிகொடுத்த அத்தனை பொடியளின்ர சாவுக்கும் காரணம்.”
“அந்தத் தாய்க்கப்பல எங்கட பொடியள் அடிக்கப்போறாங்களாம் எண்டு கேள்விப்பட்டன். அந்தக் கப்பல அடிக்கிறதுக்கு கரும்புலியாய் போற பையங்களில எங்கட காந்தரூபனும் ஒரு ஆளாம் எண்டிறதையும் நான் அறிஞ்சன்.”
எங்களுடைய முகத்தை ஊடுருவிப் பார்த்துவிட்டுச் சொன்னார். “உடனே தாங்கிக்கொள்ள எனக்குக் கஸ்டமாகத்தான் இருந்தது.”
அவருடைய நா தழுதழுத்தது. சோகம் தொண்டையை அடைக்க அவர் தொடர்ந்தார்.
“கடைசியா அவன் கரும்புலியாய்ப் போகும் போது, நானும் கடற்கரையில நிண்டன்.
அவனை நான் எந்த இடத்தில் முதன் முதலில் கண்டு தூக்கி வளர்த்தனோ, அதே கடற்கரை.
படகில ஏறப்போறதுக்கு முதல் என்னட்ட ஓடிவந்தான். கட்டிப்பிடிச்சு மாறிமாறி கன்னத்தில கொஞ்சினான்.
‘அநாதையா வந்த என்னை ஆளாக்கினியள் அப்பா’ எண்டான்.
‘உங்களுக்கு ஒண்டு ஞாபகமிருக்கோ’ எண்டான்.
‘இந்தக் கடற்கரையில இந்த இடத்திலதான் உங்களுக்கு நான் மகனானனான். இண்டைக்கு அதே இடத்தில, உங்களை விட்டிட்டுப் போறன்’ எண்டு சொல்லிப் போட்டு போனான் தம்பி.”
திறந்திருந்த கதவொன்றைச் சுட்டிக்காட்டி “அதுதான் எங்கட சாமி அறை. அந்தத் தெய்வத்தின்ர படத்திற்குப் பக்கத்திலதான் அவன்ர படத்தையும் வைச்சிருக்கிறம்” என்றார்.
“தன்ர சொந்த அப்பாவின்ர பேர் அவனுக்குத் தெரிஞ்சிருந்தும், இயக்கத்தில விபரங்களைப் பதியேக்க ‘யோகராசா’ எண்டு என்னைத்தான் தன்னுடைய அப்பா எண்டு பதிஞ்சிட்டுப் போயிருக்கிறான்……ம்.”
அவருடைய கண்கள் கலங்கிப் போயின. தனது சால்வையால் கண்களை ஒற்றிக்கொண்டார். அருகிலே நின்ற அம்மா சொன்னா,
“அன்றைக்கு முழுவதும் இவர் ஒரு மாதிரியா இருந்தார். நான் ஒண்டும் கேக்கேல்லை. பின்னேரம்இ கடலில பொடியள் கரும்புலியாய்ப் போய் கப்பலடிக்கப் போறாங்களாம் எண்டு, பாத்திட்டு வாறனெண்டு போனார். காந்தரூபனும் போகப்போறான் எண்டு இவர் சொல்லவில்லை. இரவானதும் எனக்கு நித்திரை வர மாட்டனெண்டிட்டுது, சத்தத்தையாவது கேப்பமெண்டு வீட்டுவாசலில் இருந்தன்.
கொஞ்ச நேரத்தில கடலதிரச் சத்தங்கேட்டது. நான் வாசலிலேயே இருந்தன். சாமம் ஒரு மணியளவில் இவர் ஒரு மாதிரியாகஇ சோர்ந்து போய் வந்தார்.”
“வீட்டுக்குள்ள வந்தவர் – ‘எங்கட காந்தரூபனும் கரும்புலியாப் போனவன்’ என்று சொல்லிப்போட்டு அழுதார். நான் ஏங்கிப் போனன். ஏன்னால தாங்கிக்கொள்ளேலாம இருந்தது… நானும் சேர்ந்து அழுதன்.”
யோகராசா அண்ணரும், மனைவியும் பிற்காலத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றார்கள் – அவர்கள் தங்களுக்கு நான்கு குழந்தைகள் என்று சொல்கின்றார்கள். தங்களுடைய முதல்மகன் கோணேஸ்வரன் (காந்தரூபன்) என்கிறார்கள்.
அவர்களுடைய மூத்தமகன் கரும்புலியாகி கடலிலே காவியமாகியபின், அவர்களுடைய நான்காவது மகன் பிறந்தான்.
இப்போது கைக்குழந்தையான அவனைத் தூக்கி தோளில் சாய்த்தபடி அந்தத் தாய் சொல்கிறாள் – “காந்தரூபனா நினைச்சுத்தான் இவனை நான் வளக்கிறன்.”
இந்தத் தாயுடன் கூடவே அவரது தமக்கையாரும் இருந்தார். அதே உணர்வு. சின்ன வயதுமுதல் காந்தரூபன் மீது அன்பு செலத்திய இந்தப் பெரியம்மாவும் சேர்ந்து, கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார்.
“சின்ன வயதில காந்தரூபன் என்ர பிள்ளையளோட சேர்ந்துதான் விளையாடித் திரிவான். படிக்கிறதெண்டா அவனுக்குச் சரியான கள்ளம். என்ர மகள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து இருத்தி, எழுதக் கற்றுக் கொடுப்பாள்.
‘அ’எழுதி, ‘ஆ’ எழுதி, ‘இ’ எழுதும் போது, ‘இதென்ன கனக்க சுழி போட வேண்டியிருக்கு…… எழுதுப் படுகுதில்லை’ எண்டு சொல்லி கொப்பியைத் தூக்கி எறிஞ்சு போட்டு ஓடிவிடுவான்……”
“அப்படிப்பட்டவன், பிறகு இயக்கத்துக்குப் போய் கொஞ்சக்காலத்தால திரும்பி வரேக்க பெரிய அறிவாளியாக இருந்தான். பெரிய அரசியல் மேதைகளைப் போல எங்களுக்கெல்லாம் விளக்கம் தருவான். அந்தளவுக்கு அவனை இயக்கம்தான் வளர்த்துவிட்டது.”
பெரியம்மா தொடர்ந்து சொன்னார் “கப்பலடிக்கிறதுக்குப் போறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னர் சரியான வெயிலுக்கை வீட்டுக்கு வந்தான். ‘தலையிடியாக் கிடக்கு பனடோல் தாங்கோ’ என்றான்.
குடுத்தன். வாங்கிக் குடிச்சான். ‘நான் ஒரு முக்கியமான வேலையா வேற ஒரு இடத்துக்குப் போறன் பெரியம்மா’ என்றான்.
வருத்தம் என்று சொல்லுறாயேடா தம்பி… தலைவரிட்ட சொல்லிப்போட்டு நில்லன்… இன்னொருதரம் போகலாம் தானே! எண்டு ஆலோசனை சொன்னேன்.
‘இல்லைப் பெரியம்மா! அந்த வேலைக்குப் போகப் போறன் எண்டு நானாத்தான் அவரிட்டைக் கேட்டனான்… கட்டாயம் நான்தான் அந்த வேலைக்குப் போகவேணும்…’ என்றான்.
‘சரிதம்பி சுகமாய்ப்போய் சுகமாய் திரும்பி வா’ எண்டு நான் சொல்ல; அவன் திருப்பிச் சொன்னான்;
‘சுகமாயப்; போவன் பெரியம்மா… அதில பிரச்சினையில்லை… ஆனா… திரும்பி வாறதென்கிறதுதான்… சரிபாப்பம்… எண்டான்.’
அதற்குமேல் பெரியம்மாவால் பேச முடியவில்லை. மறுபக்கம் திரும்பி கண்களைத் துடைத்துக் கொண்டார்.
நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (ஆனி, 1993).
