ஒரு மாலைப் பொழுது…

கடற்கரும்புலி கப்டன் வினோத்: ஒரு மாலைப் பொழுது…
10.07.1990 அன்று “அண்டைக்கு ஊரெல்லாம் ஒரே பரபரப்பாக இருந்தது. அண்ணைமார் கடற்கரைக்கு வாறதும் போறதுமாய் இருந்தினம்.
‘இண்டைக்கு பெடியள் கரும்புலியாய்ப் போய் நேவிக் கப்பலை அடிக்கப்போறாங்களாம்’ என்று, சனங்கள் பரவலாய்க் கதைக்கினம்.
‘அப்படியெண்டா நாளைக்குக் காலமை நேவி அடிப்பான்’ என்று கொஞ்சச்சனம் ஊரைவிட்டுக் கிளம்பிவிட்டினம். நல்லாய் இருண்டதுக்குப் பிறகு ஊர்ச்சனங்கள் கொஞ்சம்இ கப்பல் அடிக்கிறதைப் பார்ப்பதற்கென்று கடற்கரைக்குப் போனார்கள். நாங்களும் போனம். கடலில இருந்து கூப்பிடு தூரம்தான் எங்கட வீடு.’
முகபாவத்தில் கவலையும் மகிழ்வும் மாறி மாறி வெளிப்படஇ அந்த அக்கா சொல்லிக்கொண்டிருந்தா.
“அம்மாவும் அப்பாவும் கரைக்கு வரேல்லை, அவை வீட்டு வாசலிலேயே நிண்டுகொண்டினம். கரையில நாங்கள் போய் பார்த்துக் கொண்டு நிண்டம். படகுகள் வெளிக்கிட்டுப் போச்சுது. நாங்கள் கொஞ்சம் தூரத்தில நிண்டனாங்கள் – இருட்டுவேறு. ஆட்களை அடையாளம் தெரியேலை. படகுகள் வெளிக்கிட்டன. கொஞ்ச நேரத்தில இருட்டுக்கை மறைஞ்சு போச்சுது. இருட்டைப் போலவே மௌனமும் நிலவியது.
நாங்கள் இருட்டுக்கால கடலைப் பார்த்துக்கொண்டு நிண்டம்.
திடீரென பெரிய வெளிச்சமாய் நெருப்புச் சுவாலை கடலுக்க எரிய, நிலம் நடுங்கிறமாதிரி ஒரு வெடிச் சத்தம் கடலுக்கயிருந்து வந்தது. எங்களை அறியாமலேயே கண்ணால கண்ணீர் வந்திட்டுது. மெதுவான குரலில் அம்மா… அய்யோ… என்ற சத்தங்கள் எல்லார் வாயிலிருந்தும் உதிர்ந்தன. ‘ஆரார் பொடியள் போச்சுதுகளோ’ எண்டு நாங்கள் சொல்லிக் கவலைப்பட்டோம்.”
ஒருகணம் நிறுத்தி; அக்கா தொடர்ந்து சொன்னாள்.
“அடுத்தநாள் நேவி அடிப்பானெண்டு சனம் எல்லாம் வெளிக்கிட்டதால நாங்களும் கொஞ்சம் தூரத்தில இருக்கிற சொந்தக்காரற்ற வீட்டுக்குப் போட்டுஇ ரெண்டுநாள்ள நிலைமையைப் பார்த்திட்டுத் திரும்புவம் எண்டு இரவிரவாய்ப் போனம். போற வழியில ‘காம்ப்’ ஒண்டுக்கு முன்னால, எங்கட தம்பி ஓடித்திரிகிற மோட்டார் சைக்கிள் நிண்டுது.
அம்மா சொன்னா, ‘உங்க தம்பி நிற்பான் போல கிடக்கு… ஒருக்கா கேட்டுப்பார்’ என்று…” தொடர்ந்து அம்மா கதைக்கத் தொடங்கினாள்…
“நாங்கள் கூப்பிடக் கூப்பிட ஆள்மாறி ஆள்மாறி வந்து எட்டிப் பார்த்திட்டுப் போகினமே தவிர, வெளியால ஒருத்தரும் வரேல்லை.
‘வினோத்தின்ர அம்மாவடா…… வினோத்தின்ர அம்மாவாடா……’ என்று மாறிமாறிச் சொல்லிக் கேக்குது…… இருட்டுக்கை ஒண்டும் தெரியவுமில்லை. ஏன் உவங்கள் ஒளியறாங்கள் எண்டு எனக்குள்ள நினைச்சன். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, ஒருத்தர் பதுங்கிப் பதுங்கி வெளியால வந்தார்……”
“வினோத் நிற்கிறானேடா தம்பி……?”
“இல்…லை…யம்மா…… நீங்கள் எங்க நிற்பியள் எண்டு சொல்லுங்கோ… நாங்கள் அவரை வரச் சொல்லிவிடுறம்……”
“அந்தா அவன்ரை மோட்டச் சைக்கிள் நிக்குது…… பொய் சொல்லாதேங்கோடா, எங்க போட்டான்?”
“அது சரியாச் சொல்லேலாதம்மா… நீங்கள் நிக்கிற இடத்தைச் சொல்லிப்போட்டுப் போங்கோ காலமை அனுப்பி விடுறம்……”
‘என்னடா இவன், கேட்கிறதுக்கெல்லாம் ஒரு மாதிரியா மறுமொழி சொல்லுறான்……? என்ன கேட்டாலும் நாங்கள் நிக்கிற வீடு எது எண்டு கேட்கிறான்?’ என்று எனக்குள்ள நினைச்சுக்கொண்டு, நாங்கள் போற வீட்டுப் பாதையைச் சொல்லிப்போட்டுப் போனம்”.
சற்று நிறுத்தி பெருமூச்சொன்றை எறிந்துவிட்டு அம்மா ஆறுதலாகத் தொடர்ந்தாள்.
“அடுத்தநாள் தான் மோனை தெரிஞ்சிது, எங்கட பொடியும் போட்டானெண்டு. நிக்கிற வீடு எதெண்டு அந்தப் பொடியன் திரும்பத்திரும்ப கேட்டது ஏன் என்றுஇ அப்பதான் விளங்கிச்சு”
வினோத்தின் அப்பா சொன்னார்: “குண்டுச்சத்தம் கடலுக்கை பெரிசாக் கேக்கேக்க, வீட்டு வாசலில நான் குந்தியிருந்தனான்… ஆரார் பெத்த பிள்ளையளோ எண்டு எனக்குள்ள நினைச்சன் ஆனா அடுத்த நாள்தான் தம்பி தெரிஞ்சுது, அதில நான் பெத்த குஞ்சுவும் ஒண்டெண்டு”.
நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (ஆனி, 1993).
