கடற்கரும்புலிகள் ஜெயந்தனும் சிதம்பரமும்…

கடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தனும், கப்டன் சிதம்பரமும் கடலில் 04.05.1991 அன்று தளராத உறுதி…
04.05.1991 அன்று நடந்த கரும்புலித் தாக்குதலைப் பற்றி கதைத்த பொழுது கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை சொன்னார்.
இறுதி நேரத்தில்இ கடலில், சிதம்பரமும் – ஜெயந்தனும் காட்டிய உறுதியை என்னால் மறக்க முடியாது. இப்போதும் அது என் நினைவில் பசுமையாகவே இருக்கின்றது. அது கரும்புலித் தாக்குதலின் இலக்காகிய ‘அபிதா’ என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் கரையிலிருந்து சுமார் எட்டு மைல் தொலைவில் நின்றது.
இக்கப்பலைத்தேடி திசையறிகருவியின் உதவியுடன் கரும்புலிகளின் வெடிமருந்து ஏற்றிய படகு புறப்பட்டது. சிறிது நேரத்தில் வோக்கி மூலம் தொடர்பு கொண்டு கதைத்தார்கள்.
“நாங்கள் கதைக்கிறது விளங்குகிறதா?” எனக் கேட்டோம்.
“நீங்கள்… கதைப்பது… தெளிவாகக்… கேட்கிறது” என எந்தவித சலசலப்புமில்லாமல் உறுதியுடன் அறிவித்தார்கள்.
மேலும் சில நிமிடங்கள் சென்றன. சிதம்பரமும் – ஜெயந்தனும் சென்ற வெடிமருந்துப் படகு சுமார் 4 மைல் கடந்திருக்கும்.
அப்போது –
‘எங்களுடைய இலக்கைக் கண்டுவிட்டோம்’
‘எங்களுடைய இலக்கைக் கண்டுவிட்டோம்…’ என உற்சாகம் பொங்க படகிலிருந்து அறிவித்தனர்.
குரலில் பதட்டமோ அல்லது தயக்கமோ தென்படவேயில்லை – கரையில் நின்ற தோழர்களின் நெஞ்சுதான் பதைபதைத்துக் கொண்டிருந்தது.
மேலும் சில நிமிடங்கள் சென்றிருக்கும்.
‘திட்டமிட்டபடி நாங்கள் செய்யப் போகிறோம்’
‘ஏற்கனவே திட்டமிட்டபடி நாங்கள் செய்யப் போகிறோம்’, என்ற குரல் கடல் இரைச்சலையும் கிழித்துக்கொண்டு எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது.
கரையில் நின்ற போராளிகள் அனைவரும் கண்வெட்டாது கடலையே பார்த்துக்கொண்டு, வோக்கிக்கு காதைக் கொடுத்துக்கொண்டு நின்றார்கள்.
அப்போது சிதம்பரமும், ஜெயந்தனும் சேர்ந்து வோக்கி ஊடாக “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என உரத்துக் கத்தினர்.
அதைத்தொடர்ந்து கடலுக்குள் பெரு வெளிச்சம், சில வினாடிகளில் பெரும் வெடி ஓசையும் கரையை உலுக்கியது.
அடுத்த நாள் பகல் ஒருபக்கம் சாய்ந்தபடி, சேதமடைந்த நிலையில், இருந்த ‘அபிதா’ கப்பலை கட்டியிழுத்துச் செல்ல கடற்படையினர் முயன்று கொண்டிருந்தனர். சில ‘டோரா’ விசைப்படகுகள் கடலில் எதையோ தேடி ஓடிக்கொண்டிருந்தன.
பல வருடங்களாக எமது போராளிகள் பலரின் உயிர்களை விழுங்கக் காரணமாக இருந்த ஒரு கடலரக்கனைக் கொன்று சிதம்பரமும் ஜெயந்தனும் வீரசாதனை புரிந்துவிட்டார்கள்.
நன்றிகள்: உயிராயுதம்: பாகம் 01 நூல், விடுதலைப்புலிகள் இதழ் (ஆனி 1993).
