முதல் கரும்புலி கப்டன் மில்லர் வீரவணக்க நாள்

முதல் கரும்புலி கப்டன் மில்லர் வீரவணக்க நாள் இன்றாகும்.
05.07.1987 அன்று யாழ். மாவட்டம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்காப் படையினரின் படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதல் கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் 38ம் ஆண்டு வீரவணக்க நாளும், தமிழீழ கரும்புலிகள் நாளும் இன்றாகும்.
கப்டன் மில்லலருடன் கரும்புலிகள் சகாப்தம் ஆரம்பமாகியது என்றுமே உலகம் கண்டிராத – எண்ணிப் பார்க்கவும் முடியாத – தியாகப் படையணி ஒன்று தமிழீழத்தில் உதயமாகியது.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
1987.05.26 யாழ். குடாவின் வடமராட்சி பகுதிமீது சிறிலங்கா அரச படைகளின் முப்படைகளும் ஒன்றிணைந்து “ஒப்பிரேசன் லிபரேசன்” படை நடவடிக்கையை ஆரம்பித்துவைத்தனர்.
வடமராட்சி மக்களின் இதயங்களில் ஆழமாக பதிந்த நாள் அது. வானமும் நிலமும் அதிர்ந்து, உடைமைகள் கற்குவியல்களாகி மக்கள் சிதைந்து சிதறி எங்கெல்லாமோ ஓடிக்கொண்டிருந்தார்கள். வானூர்தி குண்டு வீச்சுக்களாக, உலங்குவானூர்தி தாக்குதல்களாக, எறிகணை வீச்சுக்களாக, பீரங்கிகள் – துப்பாக்கிகள் வேட்டுக்களாக மரணம் மக்களை நான்கு பக்கமும் துரத்திக்கொண்டிருந்தது. பல நூற்றுக்கணக்கான மக்கள் என்ன நடக்கிறது என அறியமுன்பே பிணமாகி விழுந்தனர். எங்கும் மரண ஓலம்; பெருமளவில் மக்கள் இடம்பெயர்ந்தார்கள். சிங்கள ஆதிக்க வெறியின் உச்சத்தை வடமராட்சி மக்கள் அப்பொழுது அனுபவித்துக்கொண்டிருந்தனர். படை நடவடிக்கை மமதையுடன் கூடிய வெற்றிக் களிப்பில் சிங்களப் படைகள் வடமராட்சி மண்ணில் வலம் வந்தன. மக்கள் மனமுடைந்து குழம்பிப்போய் இருந்தனர்.
சிங்களப் படைகளுக்கு உளவியல் ரீதியாக போரிடும் ஆற்றல் திடீரென கூடியது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் அழித்துவிடலாம் என சிந்திக்கத் தொடங்கியது சிறிலங்கா அரசு.
சகல வல்லமையும் பொருந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கு புதிய போர் உபாயங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உருவாக்கியது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தேவைகருதி காலத்திற்கு காலம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் புதிய புதிய போர் உபாயங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருவது யாவரும் அறிந்த ஒன்றாகும். இத்தகைய போர் உபாயங்களில் ஒன்றுதான் இன்று உலகம் வியக்கும் “கரும்புலித் தாக்குதல்” முறையாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கரும்புலித் தாக்குதலின் தேவை பற்றிய எண்ணம் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்திலேயே தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிடமிருந்தது. குறைந்த உயிரிழப்புகளுடன் பெரிய வெற்றிகளை அடையவேண்டிய வரலாற்றுத்தேவை ‘ஒப்பிரேசன் லிபரேசன்’ படை நடவடிக்கையின் பின் முக்கியமடைந்தது.
கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் உள்ளத்திலிருந்து…
இன்றைய காலகட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் கிடைக்கப்பெற்ற இந்த போராட்டத்திற்கு நாம் எமது பங்களிப்பை செய்து கடமைகள் – நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்தால் அடுத்த சந்ததிகள் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழலாம் என்பதினால் நான் கரும்புலியாக செல்கின்றேன்.
1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம் திகதி இரவு யாழ். மாவட்டம் நெல்லியடி மத்திய மகாவித்தியாலத்தில் எழுந்த வெடியோசை தமிழீழ விடுதலைப் போராட்ட பாதையின் முன்னால் விழுந்திருந்த தடைக்கற்களை தகர்த்தெறிந்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க முதலாவது கரும்புலித் தாக்குதலை முதற்கரும்புலி கப்டன் மில்லர் மேற்கொண்டு புதிய வரலாற்றை எழுதிச் சென்று காற்றோடு காவியமானான்.
மக்கள் விடுதலை அடைவார்கள் என்பதற்காக மரணத்தை நேசித்தவன் அவன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எத்தனையோ படிகள் மேலே உயர்த்தி வைத்தவன் கப்டன் மில்லர்.
உலகின் எந்த ஆயுதங்களாலும் வெற்றிகொள்ள முடியாத, உலகின் எந்த தொழில்நுட்பத்தினாலும் தடுத்து நிறுத்த முடியாத, உலகின் எந்த அரச இயந்திரத்தாலும் அடக்கிவிட முடியாத அற்புதமான உயிராயுதத்தை முதன் முதலில் கப்டன் மில்லர் அறிமுகம் செய்துவைத்தான்.
தமிழீழ இலட்சியக் கனவுகளுடன் பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு புயலான தேசத்தின் புயல்.
கரும்புலித் தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட…
மேஜர் கமல் (துரைரத்தினம் செண்டையா பரமேஸ்வரராசா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வின்சன் (சரவணமுத்து சரவணபவன் – மணலாறு, முல்லைத்தீவு)
நீளும் நினைவுகளாகி…
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
