கரும்புலி மேஜர் ஆஷா உட்பட ஏனைய கரும்புலி மறவர்களின் வீரவணக்க நாள்

கரும்புலி மேஜர் ஆஷா, கரும்புலி மேஜர் மங்கை, கரும்புலி மேஜர் ஜெயராணி, கரும்புலி கப்டன் நளாயினி, கரும்புலி கப்டன் தனா, கரும்புலி கப்டன் இந்து, கரும்புலி கப்டன் உமையாள் வீரவணக்க நாள் இன்றாகும்.
“ஓயாத அலைகள் 02″ படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சி பிரதேசம் மீட்டெடுப்பதற்கான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக ஆனையிறவு பின்தளத்தில் ஆட்லறிகளின் சூட்டாதரவு தாக்குதல் செயற்பாடுகளை தடுக்கும் நோக்குடன் 01.02.1998 அன்று ஆனையிறவு – பரந்தன் சிறிலங்கா படையினரின் படைத்தளங்கள் (இயக்கக்கச்சிப் பகுதியில் அமைந்திருந்த ஆட்லறி பீரங்கித்தளம்) மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ஆஷா, கரும்புலி மேஜர் மங்கை, கரும்புலி மேஜர் ஜெயராணி, கரும்புலி கப்டன் நளாயினி, கரும்புலி கப்டன் தனா, கரும்புலி கப்டன் இந்து, கரும்புலி கப்டன் உமையாள் ஆகிய கரும்புலி மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
1996ம் ஆண்டு ‘சத்ஜய’ படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சி மண்ணை ஆக்கிரமித்து நிலைகொண்டிருந்தது சிறிலங்கா படைகள். மிகவும் பலம் வாய்ந்த நிலையோடு ஆயுத வளம் வாய்ந்த நிலையோடு கொடூரம் விளைவித்தபடி அமைந்திருந்தது இந்தப் பகைத்தளம். இந்தக் கிளிநொச்சி நகர் பாரிய படைத்தளம் 1998ம் ஆண்டு விடுதலைப் புலிகள் ”ஓயாத அலைகள் 02” நடவடிக்கை மூலம் மீட்புப் போர் புரிந்தனர்.
கிளிநொச்சி – பரந்தன் படைத் தளங்களுக்கு எல்லாம் பிரதான தளமாக பின்புல பெரும் தளமாக ஆனையிறவு கூட்டுப் படைத்தளம் அமையப் பெற்றிருந்தது. இங்கேதான் (ஆனையிறவு – இயக்கச்சி) கிளிநொச்சி – பரந்தன் படைத்தளங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஆட்லறி பீரங்கிகளின் பலமும் அமைந்திருந்தது.
கிளிநொச்சி படைத்தளம் மீதான முழு வெற்றியை பெறவேண்டுமாயின் ஆனையிறவு படைத்தளத்தில் இருக்கும் பிரதான ஆட்லறித் தளங்கள் அழிக்கப்பட வேண்டியது அவசியமாயிற்று; எனவேதான் அந்தப்பெரும் பணியை நிறைவேற்ற கரும்புலிகளின் பலம் களம் இறக்கப்பட்டது.
பிரிகேடியர் ஆதவன் அவர்கள் தாக்குதல் தொடர்பாக கூறுகையில்…
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் கிளிநொச்சி மண்ணை மீட்பதற்கான பெரும் தாக்கல் திட்டம் தீட்டப்பட்டது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி முடிப்பதற்காக கரும்புலி அணிகள் களமுனைக்கு இறக்கப்பட்டது.
கிளிநொச்சி மண்ணை மீட்பதற்காக ஆனையிறவு பின்தளத்தில் பிரதானமாக அமைந்திருந்த இரண்டு ஆட்லறி பீரங்கித் தளங்களில் ஒன்றான இயக்கச்சி ஆட்லறி பீரங்கித்தளம் மீதான தாக்குதலுக்கு பெண் கரும்புலி அணிகள் நகர்த்தப்பட்டன. (ஆனையிறவிற்குள் இருந்த தளங்கள் நோக்கி கரும்புலி லெப்டினன்ட் கேணல் சுபேசன், கரும்புலி மேஜர் குமுதன், கரும்புலி கப்டன் குமரேஸ், கரும்புலி கப்டன் செங்கதிர் ஆகியோர் நகர்த்தப்பட்டனர்)
ஏனைய படையணிகள் நகர்ந்து சமர் புரியும்போது ஆனையிறவு படைத்தளத்தின் இயக்கச்சி ஆட்லறிகளை இயங்கவிடாமல் சேதப்படுத்துவதே கரும்புலித் தாக்குதலின் நோக்கமாக இருந்தது. தாக்குதல் நடவடிக்கையை கரும்புலி அணிகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது அந்த தாக்குதலில் கரும்புலி மேஜர் ஆஷா, கரும்புலி மேஜர் மங்கை, கரும்புலி மேஜர் ஜெயராணி, கரும்புலி கப்டன் நளாயினி, கரும்புலி கப்டன் தனா, கரும்புலி கப்டன் இந்து, கரும்புலி கப்டன் உமையாள் ஆகியோர் வீரகாவியத்தைத் தழுவிக் கொண்டார்கள்.
பெண் கரும்புலி அணிகள் தனித்துவமாக ஈடுபடும் தாக்குதல் திட்டம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் கொடுக்கப்பட்டது. தாக்குதல் நடவடிக்கைக்கான பயிற்சிகளை மூன்று வருடமாக பெற்றுவந்து அதன்பின்னர் தனித்துவமாக சென்று படைமுகாமின் கட்டளை மையங்கள் மற்றும் கனரக ஆயுதங்களை தாக்கி அழித்து எமது பிரதேசத்தை மீட்பதற்காக வீரத்தினாலும், ஈகத்தினாலும் தங்களை அர்ப்பணித்து செய்து முடித்தார்கள்.
அந்த தாக்குதல் நடவடிக்கையால் அன்று எதிரியின் பின்தளத்தில் ஆதரவாக இருந்த ஆட்லறி தளங்கள், கட்டளை மையங்கள், படை நிலைகள் எல்லாமே தாக்கி அழிக்கப்பட்டன. அந்த தாக்குதல் குழப்பத்தின் மத்தியில் சிறிலங்கா படையினர் முன்னணி நிலைகளுக்கு கட்டளைகள், சூட்டாதரவுகளை வழங்கமுடியாமல் தடுமாறி கிளிநொச்சி மண் எமது கையில் வீழ்த்தப்பட்டது.
தாய்மண்ணின் விடியலுக்காக வெற்றிக்கு வித்திட்டு புயலான தேசப்புயல்கள்.
கரும்புலி மேஜர் ஆஷா
வேலுப்பிள்ளை சிவஜமுனா என்ற இயற்பெயரைக் கொண்ட கரும்புலி மேஜர் ஆஷா யாழ். மாவட்டம் கொடிகாமம் பகுதியை தனது பிறப்பிடமாக கொண்டவள். 1991ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டப் பாதையில் தன்னையும் இணைத்துக்கொண்டு “மகளிர் 15” பயிற்சிப் பாசறையில் அடிப்படை படைத்துறைப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டாள்.
ஆஷாவின் புரட்சி வாழ்க்கை பல புதுமைகளை தந்து விடுதலைக்கு பலம் சேர்த்தன. பல போரியல் அறிவுகளைக் கற்று தன்னை புடம்போட்டு வைத்திருந்த ஆஷா அதை களமுனைகளில் காண்பித்து சாதனை படைத்தாள். ஆஷா நல்லதொரு சண்டைக்காரி; பல களங்களுக்குள் முகம்கொடுத்து தன் போரியல் ஆற்றல்களை வெளிப்படுத்தியவள். பல போர் வடுக்களை தன் தேகத்தில் தாங்கியவள்.
மூன்று வருடங்களாக கரும்புலி அணியிலிருந்து கடமை செய்த ஆஷா தன் வாழ்வை புரட்சியின் உச்சத்தில் வைத்து வடிவு செய்தாள். எந்தக் கடினமான பயிற்சியையும் தன்னம்பிக்கையுடன் செய்துமுடிக்கும் ஆற்றல் படைத்தவள். அன்பாக பழகி அனைவரது மனங்களிலும் இடம் பிடித்தவள். தேசத்தை ஆழமாக நேசித்த இந்த தேசப்புயல் 01.02.1998 அன்று ஆனையிறவு பிரதான படை முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில் தன் உயிரை வீசி உணர்வுகளால் பலம் தந்தது.
கரும்புலி மேஜர் ஜெயராணி
நடராசா சாந்தி என்ற இயற்பெயரைக் கொண்ட கரும்புலி மேஜர் ஜெயராணி மன்னார் மாவட்டம் பேசாலை பகுதியை தனது பிறப்பிடமாக கொண்டவள். 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டவள். “மகளிர் 10” பயிற்சிப் பாசறையில் அடிப்படை படைத்துறைப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு ஒரு வீரமான விடுதலை வேங்கையாக தன்னை உருவப்படுத்தியிருந்தாள்.
பூவரசம்குளச் சமர், மணலாற்றுத் தாக்குதல், தாண்டிக்குளம் மீதான தாக்குதல் என்று இவள் பங்குபற்றிய களமுனை பட்டியல்கள் இன்னும் நீண்டவை. பல போர்க் காயங்களைத் தாங்கியது இந்தத் தேகம். வேவு நடவடிக்கைகளில் இந்தத் தேசப்புயலின் செயல்த்திறன் அற்புதமானது. கரும்புலிகள் அணியில் இரண்டு வருடம் கடமையாற்றிய ஜெயராணி 01.02.1998 அன்று ஆனையிறவு பிரதான படை முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில் தேசக்காற்றோடு கலந்தாள்.
கரும்புலி மேஜர் மங்கை
இரத்தினசிங்கம் நேசமலர் என்ற இயற்பெயரைக் கொண்ட கரும்புலி மேஜர் மங்கை கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி, இராமநாதபுரம் பகுதியை தனது பிறப்பிடமாக கொண்டவள். 1991ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைந்துகொண்டவள். “மகளிர் 15” பயிற்சிப் பாசறையில் அடிப்படை படைத்துறைப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு தேசக்கடமையில் களம் இறங்கினாள்.
தரைச் சிறுத்தைப் படையணியில் நான்கு வருடங்கள் இருந்து உறுதியை வளர்த்துக்கொண்ட இந்த உணர்வாயுதம் பயிற்சி பெறுவதில் சிறப்பான இடத்தைத் தொட்டிருந்தது. அன்பாக பழகும் அழகும், வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற உணர்வும் இந்த கரும்புலி வேகத்திடம் உயிர் பெற்றிருந்தது. சீனன்குடா வான் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலிலும் மங்கை பங்கெடுத்திருந்தாள். 01.02.1998 அன்று ஆனையிறவு பிரதான படை முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில் கடமையின் உணர்வை வரலாறாக்கிக் காட்டினாள் கரும்புலி மேஜர் மங்கை.
கரும்புலி கப்டன் நளாயினி
பழனி கோகிலா என்ற இயற்பெயரைக் கொண்ட கரும்புலி கப்டன் நளாயினி முல்லைத்தீவு மாவட்டம் நெடுங்கேணி பிரதேசத்தை தனது பிறப்பிடமாக கொண்டவள். 1992ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டாள் “மகளிர் 23” பயிற்சிப் பாசறையில் அடிப்படை படைத்துறைப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு தனது வாழ்வை தேசத்திற்காய் அர்ப்பணித்தாள்.
அழகோடு பழகும் இந்த வீர நெஞ்சம் பல களமுனைகளையும் கண்டது. கரும்புலி அணியில் மூன்று வருடங்கள் கடமையாற்றிய நளாயினி 01.02.1998 அன்று ஆனையிறவு பிரதான படை முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரகாவியமானாள்.
கரும்புலி கப்டன் தனா
பெருமாள் கலைநிதி என்ற இயற்பெயரைக் கொண்ட கரும்புலி கப்டன் தனா யாழ். மாவட்டம் தெல்லிப்பளை பிரதேசத்தை தனது பிறப்பிடமாக கொண்டவள். 1994ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்ட வாழ்வில் தன்னை இணைந்துக்கொண்டு “திலகா 03” பயிற்சிப் பாசறையில் அடிப்படை படைத்துறைப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டாள். கொடுக்கப்படும் வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கும் சிறப்பு தனாவுக்கே உரியது. பயிற்சியில் திறமை உடையவளாய்; போர்க் களத்தில் நல்ல சண்டைகாரியாய்; அனைவரோடும் இன்முகத்தோடு பழகுபவளாய் தனாவின் செயல்குணங்கள் அமைந்தன.
கரும்புலிகள் அணியில் இணைந்து இரண்டு வருடங்கள் கடமையாற்றி உச்சமான பங்களிப்பை தேசத்திற்காக கொடுத்திருந்தாள். 01.02.1998 அன்று ஆனையிறவு பிரதான படை முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில் இந்தத் தேசப்புயல் காவியமாகிக் கொண்டது.
கரும்புலி கப்டன் இந்து
கந்தையா புனிதா என்ற இயற்பெயரைக் கொண்ட கரும்புலி கப்டன் இந்து அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தை தனது பிறப்பிடமாக கொண்டவள். 1991ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து “மட்டு 03” பயிற்சிப் பாசறையில் அடிப்படை படைத்துறைப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டாள். இந்துவின் இரண்டு சகோதரர்களை சிறிலங்காப் படையினர் சுட்டுக் கொன்ற தாக்கம் இந்துவை இன விடுதலைக்காக போராட வேண்டிய முக்கியத்திற்குள் தள்ளின.
கரும்புலிகள் அணியில் இணைந்து இரண்டு வருடங்கள் கடமை செய்தாள். களமுனைகளிலும் ஈடுபட்டு தன் பங்கை வலுப்படுத்தினாள். இன விடுதலைக்காய் தன்னால் முடிந்த உச்சமான ஈகத்தை செய்யவேண்டும் என்ற உறுதியில் இந்து வென்றுவிட்டாள். 01.02.1998 அன்று ஆனையிறவு பிரதான படை முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில் வெடியாகி பலம் சேர்த்தாள் தேசப்புயல் இந்து.
கரும்புலி கப்டன் உமையாள்
செல்லத்துரை புஸ்பராணி என்ற இயற்பெயரைக் கொண்ட கரும்புலி கப்டன் உமையாள் முல்லைத்தீவு மாவட்டம் நெடுங்கேணி பிரதேசத்தை தனது பிறப்பிடமாக கொண்டவள். 1993ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து “திலகா 01” பயிற்சிப் பாசறையில் அடிப்படை படைத்துறைப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டாள். போராட்ட வாழ்நாளில் உமையாள் வாழ்வு அழகானது. குறிபார்த்து சுடுவதில் சிறந்த சூட்டாளராக, வேவு நடவடிக்கையில் சிறப்புடையவளாக, கடமைகளை நிறைவேற்றுவதில் ஆற்றல் உடையவளாக உமையாள் உயிர் வாழ்ந்தாள்.
கரும்புலி அணியில் இரண்டு வருடங்கள் உணர்வுக் காலங்ககோடு உறவாடிய உமையாள் 01.02.1998 அன்று ஆனையிறவு பிரதான படை முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரகாவியமானாள்.
தேசப் புயல்களாக வீசி
எங்கள் தேசத்திற்கு பலம் தந்த
இந்த வீர நெஞ்சங்கள்
காலப் புரல்வுகளின் – நீட்சிப்
பெருவெளிக்குள் நின்று வாழ்பவர்கள்.
அழுகின்ற குழந்தைகளை
தாயாகி அணைப்பார்கள்
ஆரூயிர்த் தாய் மண்ணை
நெஞ்சுருக நினைப்பார்கள்
அஃறிணை உயிர்களையும்
மதிக்கின்ற குணங்கள் – அன்பு
உயிர் வாழும் இடம்
இவர்களின் மனங்கள்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
