நெடுந்தீவு கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

யாழ். மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்டினன்ட் கேணல் சங்கரி, லெப்டினன்ட் கேணல் கலையரசி, மேஜர் மதிமுகிலன், மேஜர் ஈழவீரன் வீரவணக்க நாள் இன்றாகும்.
26.12.2007 அன்று யாழ். மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் P 413 அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் காவியமான கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் சங்கரி, கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் கலையரசி, கடற்கரும்புலி மேஜர் மதிமுகிலன், கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களினதும் இதே கடற்சமர் நடவடிக்கையில் எதிரியின் வான்படையின் வானூர்தி குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி கடடளை அதிகாரிகளில் ஒருவரான லெப்டினன்ட் கேணல் நிலவன் உட்பட ஏனைய கடற்புலி மாவீரர்களினதும் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடன் கடற்கரும்புலிகள்.
தமிழீழ இலட்சியக் கனவுகளுடன் பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.
அகஸ்ரின் ஜெயசுகந்தினி என்ற இயற்பெயரைக் கொண்ட கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் சங்கரி யாழ். மாவட்டத்தை தனது பிறப்பிடமாகக் கொண்டவள். சங்கரின் ஆற்றல் மிகப்பெரியது; 1994ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்துடன் தன்னை இணைத்துக் கொண்ட கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் சங்கரி கடற்புலிகளில் பணி புரிந்து தொடக்கத்தில் கடல்வழி வழங்கல் நடவடிக்கை தொடர்பாளராக பணியாற்றினார். 1995ம் ஆண்டில் இவர் வெடிமருந்து கருவியை பெற்று வெடிமருந்தைக் கையாள்வதில் சிறப்பாக பங்காற்றினார். பின்னர் 1997ம் ஆண்டில் அதிகாரிகள் பயிற்சி கல்வியை கற்று அதில் தேர்வாகி தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டார்.
1998ம் ஆண்டு காலப்பகுதியில் “ஜெயசிக்குறு” எதிர்ச்சமரில் பங்கேற்ற சங்கரி அதில் தன்னுடைய ஆற்றலை திறம்பட வெளிப்படுத்தி பின்னர் “ஓயாத அலைகள் – 03” தொடர் நடவடிக்கையிலும் பங்குபற்றும் சார்ந்தப்பம் இவளுக்கு அமைந்தது. “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின்போது ஐம்பது கலிபர் கனரக ஆயுதம் கொண்ட தன் அணியுடன் சென்று அங்கும் முழுவீச்சுடன் செயலாற்றினாள். பல சமர்களங்களைச் சந்தித்தவள் உடலில் பல விழுப்புண்களையும் தாங்கிக்கொள்கின்றாள். காலத்தின் நகர்வுக்கேற்ப விடுதலைக்கு பலம் சேர்க்கும் ஆழ்கடல் வழங்கல் நடவடிக்கையிலும் முல்லைத்தீவு மாவட்டம் முதல் மன்னார் மாவட்டம் ஊடாக புத்தளம் வரை இரவும் – பகலும் தேசத்தின் உயர்வுக்காக உழைத்தவர்களில் கடற்கரும்புலி சங்கரியும் ஒருவர். 2004ம் ஆண்டு பகுதியில் கடற்கரும்புலி மேஜர் மங்கை படகு கட்டுமான பகுதியில் வரைபடவியலாளராக பணியாற்றினார்.
கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் சங்கரியின் நினைவுகள்பற்றி கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் இவ்வாறு மீள் நினைவாக்கிக்கொள்கின்றார்.
கடற்புலிகளின் சண்டை படகுகள், வழங்கல் படகுகள், கரும்புலிப் படகுகள் மற்றும் ஏனைய வகைப் படகுகளை உள்ளடக்கிய எங்களுடைய படகுகளை நாங்களே வடிவமைத்து உருவாக்கம் செய்யக்கூடிய வரைபட பிரிவில் நீண்ட காலமாக பலதரப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் ஏனென்றால் அவர் வடிவமைப்பு செய்த படகுகளில் சக கடற்கரும்புலி வீரர்கள் சென்று இலகுகள் மீது தாக்குதலை மேற்கொண்டு இடிக்க இடிக்க தோழ – தோழியரின் இழப்பின் சுமையால் கரும்புலியாக இருந்த சங்கரியால் தொடர்ந்தும் அதற்குள் பணி தொடர முடியவில்லை. ஆனால், அந்தப்பணியிலிருந்து வெளியே வருவதற்கு அதற்குரிய பொறுப்பாளரும் அனுமதிக்கவில்லை. அதனால் காலத்தினுடைய போராட்டத்தினுடைய தேவைகளை கருதி தொடர்ந்தும் அந்த பிரிவில் நீண்ட காலமாக பணியாற்றினார். இன்று எங்களுடைய படகுகள் எல்லாம் வேகம் அதிகரித்து ஓட்டிச் செல்லக் கூடிய ஒரு சூழலுக்கு கொண்டு வந்தவர்கள் இந்த வரைபடப் பிரிவு என்றால் மிகையாகாது. அந்த வரைபடப் பிரிவில் மிக முக்கிய பெரும் பணியை பொறுப்பெடுத்து செய்து கொண்டிருந்தார்.
பின்னர் ஒரு கட்டத்தில் அந்த பணிக்கு தேவையான போராளிகளை உருவாக்கிவிட்டு திரும்ப அந்தப்பணியிலிருந்து மாற்றம்பெற்று காலத்தினுடைய தேவையை கருத்திற்கொண்டு எங்களுடைய போராட்டத்திற்கு பலம் சேர்க்கின்ற நடவடிக்கையை எங்களுடைய பலவீனமான செயற்பாடுகள் என்னவென்று இனங்கண்டு அதனை மாற்றி அமைக்கும் முயற்சியில் சங்கரி அவர்கள் அதைப்பற்றிய விடையங்களை அதற்குள் கற்று உண்மையில் உறக்கமின்றி பசி மறந்து 24 மணித்தியாலமும் தமிழீழத்தின் மேற்கு திசையில் எமது கட்டுப்பாட்டிற்குள்ளும், எதிரியின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள்ளும் நின்று அந்தப் பணியை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக செய்தவர். அந்தப் பணியின்போதே கரும்புலித் தாக்குதலுக்குச் செல்லும் சந்தர்ப்பம் எதிர்பார்த்து காத்திருந்து அதற்கான வேண்டுகோளையும் வைத்திருந்தார் சங்கரி. தேவையென்றால் உங்களுக்கு அந்த தாக்குதலுக்குரிய சார்ந்தப்பம் வழங்கப்படும் ஆனால் புதிய போராளிகள் சிலரை பயிற்றுவித்து அவர்களை உங்கள் பணிக்குரிய நிலைக்கு வளர்த்துவிட்டுங்கள் என்றபோதும் அதை நிறைவேற்றினார். அதற்கமைவாக தாக்குதலுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்ட பின்னர் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் அவர் தாக்குதலுக்குரிய பயிற்சிக்களத்திற்கு மாற்றப்பட்டார்.
அனைத்துவிதமான கடற் தாக்குதல் பயிற்சியிலும் அவர் மிகத் துரிதமாகவும். வேகமாகவும் மேற்கொண்டு நெடுந்தீவு கடற்சமரில் கரும்புலித் தாக்குதலணியை சிறப்பாக தலைமையேற்றுச் சென்று எதிரியின் அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகை மூழ்கடித்து அந்தத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்து கடலிலே காவியமானார்.
செல்வராசா ஜசிந்தா என்ற இயற்பெயரைக் கொண்ட கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் கலையரசி யாழ். மாவட்டத்தை தனது பிறப்பிடமாகக் கொண்டவள். 1993ம் ஆண்டு தாயக விடுதலைப் போராட்டத்துடன் தன்னை இணைத்து அடிப்படை பயிற்சியை நிறைவு செய்துகொண்ட கலையரசி நிதித்துறையின் அறிக்கைப் பகுதியில் பணி செய்தார். பின்னர் 1999ம் ஆண்திலிருந்து 2000ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் யாழ் மாவட்டத்திற்கான தாக்குதல் அணியில் செயற்பட்டவர் தொடர்ந்து மருத்துவக் கல்வியையும் கற்றார். மருத்துவப் பயிற்சியை பெற்றதன் காரணமாக 2001ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டுவரை தாக்குதல் அணியில் மருத்துவப் போராளியாக செயற்பட்டார். பின்னர் கடற்புலிகளின் லெப்டினன்ட் கேணல் நிறோஜன் கல்லூரியில் கடல் சார்ந்த படைத்துறை பயிற்சிகளைப் பெற்று நிறைவுசெய்தபின் தாக்குதல் அணியில் இணைந்து பணியாற்றினார்.
கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் கலையரசியின் நினைவுகள்பற்றி கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் இவ்வாறு மீள் நினைவிற் கொள்கின்றார்.
கடற்கரும்புலி கலையரசி அண்மைக் காலத்தில் தாக்குதலுக்கு செல்வதற்கு முன்னர் எனக்கொரு மடல் ஒன்றை வரைந்திருந்தார். அதில் எங்களுடைய போராளிகள் மக்களிடம் நடந்து கொள்ளுகின்ற விமர்சிக்கக்கூடிய விடயங்களை குறிப்பிட்டு இது எல்லாவற்றையும் உடனடியாக தவிர்க்கச் சொல்லி கூறியிருந்தார். உண்மையில் அவர் பயிற்சி, தாக்குதல் மற்றும் தாக்குதலுக்காக சென்று வருவதுமாக வருடக் கணக்காக தாக்குதல் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஒரு கடற்கரும்புலி. எத்தனையோ கடற்சமருக்கு சென்றும் சந்தர்ப்பம் சரியாக அமையாது; இலக்குகள் இன்றி திரும்பி வருவார் இப்படியான ஒரு நிலையில்தான் இந்தப் போராளி இருந்தார். ஆனால் இவ்வாறாக இருந்த நிலையிலும் மக்களுக்கு ஏற்படும் அந்த பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அதை தீர்த்து வைப்பதிலும் முழுமையாக செயற்பட்ட ஒருவர்தான் கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் கலையரசி. 26.12.2007 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் எதிரியின் அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகை மூழ்கடித்து அந்தத் தாக்குதலின் வெற்றி உறுதுணையாகி கடலிலே காவியமானார்.
பூராசா இன்பராசா என்ற இயற்பெயரைக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் மதிமுகிலன் யாழ். மாவட்டத்தை தனது பிறப்பிடமாகக் கொண்டவன். 2001ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் போரின் காலப்பணியை கையேற்று அடிப்படை படைத்துறைப் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டவன் கடற்புலிகளில் இணைந்து கனரக ஆயுதங்களை இயக்குவதில் தேர்ச்சி பெற்றவனாக விளங்குகின்றான்.
திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்து ஆயிரக் கணக்கான போராளிகளை கடல்வழியாக வன்னிக்கு பாதுகாப்பாக கொண்டு வருகின்ற நடவடிக்கையின் பாதுகாப்பு கடற் சமர்களில் எல்லாம் சிறந்த ஒரு முன்னணி கனரக ஆயுத சூட்டாளராக பல களமுனைகளில் நின்று சமர் புரிந்தவன். தன் தேசத்திற்கு இன்னும் உயர்வாக கடமை செய்ய விரும்பியவன் கடற்கரும்புலி அணிக்குள் உள்வாங்கப்பட்டு குறுகிய கால பயிற்சியுடன் நெடுந்தீவு கடற்சமரில் எதிரியின் வியூகத்தை உடைத்து மூழ்கடித்த அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகினை தாக்குவதில் பெரும் பங்காற்றிய கடற்கரும்புலி மேஜர் மதிமுகிலன் நெடுந்தீவு கடற்பரப்பில் வீர காவியமானான்.
தங்கவேலு சயந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன் யாழ். மாவட்டத்தை தனது பிறப்பிடமாகக் கொண்டவன். 2002ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்ட வாழ்விற்குள் தன்னை இணைத்துக்கொண்டவன் “ஜொனி 02” பயிற்சிப் பாசறையில் அடிப்படை படைத்துறைப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு போராளி. தொடர்ந்து கனரக ஆயுதப் பயிற்சியையும், சிறப்பு பயிற்ச்சியையும் பெற்றார். சிறந்த சூட்டுப் பயிற்சிக்காக கடற்புலிகளின் சிறப்பு தளபதி சூசை அவர்களிடம் பல பரிசில்களையும் பெற்றிருந்தார்.
உண்மையில் ஈழவீரன் நீண்ட காலமாக ஒவ்வொரு கடற் சண்டைக்கும் இலக்குகள் தேடி தாக்குதல் மேற்கொள்வதற்காக போவார்; ஆனால் இலக்கு சரிவர அமையாத காரணத்தினால் திரும்பி வருவார். நீண்ட நாட்களாக பல தாக்குதலை மேற்கொள்ளுவதற்காக சிறப்பு பயிற்சிளை ஏனைய வீரர்கள் எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதைப் பார்த்துவிட்டு தானும் அப்படி ஒரு சிறப்பு பயிற்சியை பெற்று எதிரியின் கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்று இலக்குகளை நிர்மூலமாக்க வேண்டும் என்பதில் குறியாக நின்று கடினமாக பயிற்சி பெற்றவர்தான் ஈழவீரன். 26.12.2007ம் ஆண்டு நெடுந்தீவு கடற்சமரில் எதிரிகளை சிதைத்து அழித்துவிட்டு கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன் வீர காவியம் அடைகின்றார்.
இவர்களுடன் இதே நாளில்…
நெடுந்தீவு கடற்சமரில் கடற்கரும்புலிகள் தாக்குதலுக்கு ஊடாக ஒரு சிறிலங்கா கடற்படையின் அதிவேக தாக்குதல் “டோறா” படகு மூழ்கடித்தும் அதனைத்தொடர்ந்து கடற்புலிகளின் தாக்குதலில் இரண்டு “டோறா” படகு சேதமாக்கியும் கடற்படை பின்னடைவை சந்தித்திருந்த நிலையில் வெற்றிவாகையுடன் தளம் திரும்பிக்கொண்டிருந்த கடற்புலிகளின் படகுகள் மீது கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா வான்படையின் “கிபீர்” குண்டுவீச்சு வானூர்திகள் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் லெப்டினன்ட் கேணல் பாக்கியம் படையணியின் முன்னாள் பொறுப்பாளரும், கடற்புலிகளின் தாக்குதல் தளபதிகளில் ஒருவருமான லெப்டினன்ட் கேணல் நிலவன், கடற்புலி கப்டன் தப்தகி / இந்து உட்பட 17 கடல் வேங்கைகளின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
நீளும் நினைவுகளாகி…
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
