நெடுந்தீவு கடற்சமர் 26.12.2007

2007ம் ஆண்டு மார்கழி மாதம் 16ம் நாள் அதிகாலை பனி படர்ந்த மன்னார் கடற்பரப்பில் கடற்புலிகளின் சண்டைப் படகுகள் கடலிலே கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற அதேநேரம் “எங்களது கடலில் நாங்கள் வீரம் வளர்க்கின்றோம்” எதிரியை பல தடவை புறமுதுகிட்டு ஓட வைத்த கடற்புலிகள் இனியும் தமிழீழக் கடலிலிருந்து எதிரியை விலக்குவதற்காக கடற்புலிகளும், கடற்கரும்புலிகளும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது தொலைவில் சில இலக்குகள் கடற்புலிகளின் கடற்கண்காணிப்பு கருவியில் (ரேடார் – Radar) தென்படுகின்றன. கடற்புலிகளின் பயிற்சியை குழப்புவதற்காகவும், கடற்புலிகளைச் சீண்டுவதற்காவும் கடற்புலிகளின் முதுகெலும்பை முறித்துவிட்டோம் என்று நினைத்த சிறிலங்கா கடற்படையின் அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகுகள் கடற்புலிகளின் பயிற்சிப் படகுகளை தாக்குவதற்காக வந்து கொண்டிருக்கின்றன. இப்போது கடற்புலிகளுக்கு இலக்கு தெளிவாகிவிட்டது; இலக்கு கிடைத்தும்விட்டது.
எதிரிப் படகுகள் எங்களின் கடலுக்குள் நுழைவதா? நுழைந்து அட்டகாசமும், அடாவடித்தனமும் புரிவதா? அதற்கு அனுமதிக்கத்தான் முடியுமா?
காங்கேசன்துறை கடற்படைத் தளத்திலிருந்து நான்காவது Squadron சேர்ந்த சிறப்புப் கடற்படைப்பிரிவின் Elite Navel Sea Unit எனப்படும் ஆறு அதிவேக தாக்குதல் படகுகள் கடலில் வந்து கொண்டிருக்கின்றன. கடற்புலிகளின் படகுகள் இப்போது எதிரியின் படகுகளை நோக்கி அந்த இலக்குகளை நோக்கி இப்போது பாயத்தொடங்குகின்றன.தமிழீழத்தின் மேற்குக் கடலில் கடற்புலிகள் மின்னல் வேகத்தில் நீரை கிழித்து எதிரி இலக்கை நோக்கிப் போனார்கள்.
அப்போது என்ன நடந்தது என்று கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் கூறுகையில்…
பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை கிட்டத்தட்ட இரணைதீவுக்கு உயர நான்கு கடல்மைல் தொலைவில் அந்த இலக்கு காணப்பட்டது. அப்போது பயிற்சி ஈடுபட்டுக்கொண்டிருந்த எங்களுடைய இரண்டு படகுகள் அந்த இலக்கு என்ன என்பதை அறிவதற்கு இலக்கிற்கு கிட்டவாக சென்று பார்த்தபோது அந்த இலக்கான ‘டோறா’ படகு தாக்குதலை தொடுக்கிறது; உடனே எங்களுடைய படகும் திருப்பித் தாக்குதலைத் தொடுத்தது. எங்களுடைய படகிலிருந்து மேற்கொள்ளப்பட்ட குறித்தவறாத சூடுகள் ‘டோறா’ படகில் பட்டுத்தெறிக்க எதிரியானவன் வேகமாக ஓடத்தொடங்கினான். வேகமாக ஓடிய ‘டோறா’ படகை எங்களுடைய இரண்டு படகுகளும் துரத்திக்கொண்டு செல்லச்செல்ல நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் சென்றுவிட்டார்கள். ஆனால் “டோறா” படகு அப்படியே ஓடி காரைநகரை நோக்கி போய்க்கொண்டிருந்தான்.
அந்தநேரம் தலைமன்னார் பகுதியில் ஓடிய ‘டோறா’ படகுடன் சுற்றுக்காவலுக்கு வந்திருந்த மேலதிகமான மூன்று அதிவேக தாக்குதல் “டோறா” படகுகள் துரத்திக்கொண்டு சென்ற எங்களுடைய இரண்டு படகுகளும் நெடுந்தீவு கடற்பரப்பில் மேற்பகுதிக்கு சென்றுவிட்டமையால் அதை வழிமறித்து வளைத்து தாக்கும் நோக்கத்துடன் கீழே நோக்கி நகர்ந்துக்கிருக்கின்றன. இதை அவதானித்த நாங்கள் அவசர அவசரமாக எங்களுடைய மற்றைய படகுகளை மீள் ஒழுங்கு செய்து நெடுந்தீவு கடற்பரப்பு நோக்கி வேகமாக நகர்த்தினோம்.
முதலாவதாக அடி வாங்கிய அதிவேக தாக்குதல் ‘டோறா’ படகு அப்படியே ஓடி காரைநகருக்கு போய்விட்டது. அப்போது வளைத்துக்கொண்டு கீழ்பகுதி நோக்கி நகர்ந்துகொண்டிருந்த மூன்று ‘டோறா’ படகுகளும் இங்கிருந்து நகர்ந்துகொண்டிருந்த எமது படகுத் தொகுதிகளைக் கண்டவுடன் எதிரியானவன் தான் நகர்வை மாற்றி மேல்பகுதி நோக்கி நகர்த்திக்கொண்டு போகின்றான். அவனின் நகர்வுக்கு ஏற்றதுபோல் நாமும் தந்திரோபாய நகர்வை மேற்கொண்டு நகர்ந்துகொண்டு கிட்டத்தட்ட நெடுந்தீவிற்கும் – கச்சைதீவுக்கும் இடைப்பட்ட பகுதிக்கு போய்க்கொண்டிருக்கையில் ஒரு கட்டத்துடன் நாங்கள் படகுகளின் நகர்வை நிறுத்திவிட்டோம். நிறுத்தியதன் பிற்பாடு மேலதிகமாக எங்களுடைய சண்டைப் படகுகளை நாங்கள் இப்போது இறக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் நான்கு ‘டோறா’ படகில் ஒரு ‘டோறா’ படகு போய்விட்டது; மூன்று ‘டோறா’ படககுகள் நின்ற இடத்தில் இப்போது ‘டோறா’ படகுகளின் எண்ணிக்கை பத்தை தாண்டிச்செல்கின்றது. எங்களுடைய படகுகளும் நெடுந்தீவிற்கு உயரக்கடலில் நிற்கின்றது. எதிரியின் படகிற்கும் எங்களின் படகிற்கும் இடையே நான்கு – ஐந்து மைல் இடைவெளி உள்ளது.
அந்த நேரத்தில் எம்.ஐ உலங்கு வானூர்தி (MI-24 Attack Helicopter) வந்து தாக்குதலை தொடுக்கின்றது. அதன் தாக்குதலை தொடர்ந்து எங்கள் தாக்குதல் வியூகத்தை அந்தக் களச்சூழலுக்கு ஏற்றவாறு விரிக்கின்றோம். சிறிலங்கா கடற்படைக்கு பக்கமலமாக எம்.ஐ உலங்குவானூர்தி தொடர்ச்சியான தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கும்போது எங்களைத் தாக்குவதற்கு அதிவேக தாக்குதல் ‘டோறா’ படகுகள் நகர்வை மேற்கொள்கின்றது. எங்களுடைய படகுகள் அதாவது கடற்புலிப் படகுகளும், கரும்புலிப் படகுகளும் சேர்ந்து அடித்துக்கொண்டு கடற்படை ‘டோறா’ படகுகளை நோக்கி முன்னேறிச் செல்கின்றனர்.
இப்போது கடற்புலிகளை நோக்கி நகர்ந்துவந்த எதிரிப் படகுகள் திரும்பி தன்னுடைய பாதுகாப்பு எல்லைக்குள் ஓடுகின்றன. இதில் இரண்டு விதமான தந்திரோபாயத்தை சிங்களக் கடற்படையினர் கையாளுகின்றனர். கடற்புலிகளின் படகுகளுடன் வலிந்து சீண்டி அவற்றை மெல்ல தமது பாதுகாப்பு வளையத்துக்குள் இழுத்து பின்னர் அதனை தாக்கியழிக்கும் தந்திரபாயம்; அதாவது கடற்புலிகளுக்கு ஒரு பொறியை வைக்க முயன்றது சிங்கள கடற்படை; அல்லது கடற்புலிகளை கரையோரம் வரையில் சென்று தாக்கலாம் என்று அது நினைத்தது. அதன்படி ஒரு வியூகமிட்டுக்கொண்டு கடற்புலிகளின் பயிற்சிக்களம் நோக்கி கரைப்பகுதிக்கு சிங்கள கடற்படை வந்திருக்கின்றன. ஆனால் அப்படி வந்த படகுகளை கடற்புலிகள் எதிர்கொண்டு வீரவேசமாக துரத்தத் தொடங்கிய போதுதான் சிறிலங்கா கடற்படைக்கு நடக்கப்போகும் விளைவையும், விபரிதத்தையும் பற்றி புரிந்தது.
அன்றைய கடற்சமரில் என்ன நடந்தது என்பதை (அப்போதைய) கடற்புலிகளின் தாக்குதல் தளபதிகளில் ஒருவரான செழியன் அவர்கள் விபரிக்கையில்…
சிறிலங்கா கடற்படை எப்போதும் ஒரு வழமையான தாக்குதல் வியூகத்தை பயன்படுத்துவதுண்டு. எங்களை அவன் கட்டுப்பாட்டு கடற்பகுதிக்குள் உள்ளுக்குள்ளே அல்லது மேற்பகுதிக்கு எடுத்துவிட்டு சுற்றிவளைத்து தாக்குவது என்பது அவர்களின் வழமையான வியூகம். நெடுந்தீவு கடற்பரப்புத் தாக்குதலிலும் அவர்கள் இந்த வியூகத்தை வைத்துக்கொண்டு முறியடிக்கலாம் என்று ஒரு எதிர்பார்ப்புடன் வந்திருந்தனர்; நாங்கள் ஏற்கனவே இந்தத் தாக்குதலுக்குரிய பதிலடியை சரியான முறையில் தயார்படுத்தி மேற்கொண்டிருந்தோம்.
அதாவது எதிரியானவனின் தாக்குதல் வளையத்ததிற்குள் நாங்கள் இறங்கிப் போகும்போது அவர்கள் எங்களை உள்ளுக்குள் எடுக்கின்ற மாதிரி எடுக்க; நாங்களும் உள்ளுக்குள்ளே போகின்ற மாதிரி நகர்ந்துகொண்டு சரியான முறையில் நிதானமாகவும், வேகமாகவும் சூடுகளை வழங்கி நெருங்கியதால் அவர்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாமல் போனது. கடற்படையின் ஒவ்வொரு தாக்குதல் படகுகளுக்கும் உள்ள இடைவெளி 200 மீற்றர் முதல் 300 மீற்றர்வரை இருந்ததால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்பதில் எல்லோரும் திடமாயிருந்தனர்; அதனால் எங்களுக்கு அவர்களைத் தாக்கியழிப்பதற்குரிய சந்தர்ப்பம் கூடுதலாக இருந்தது.
கடற்புலிகளின் எதிர்ப்பையும், தாக்குதல் முனைப்பையும் சிங்களக் கடற்படை எதிர்பார்க்கவேயில்லை. அதனால் அது கடலில் திணறத் தொடங்கியது. கடற்புலிகளின் தாக்குதலை முறியடிப்பதற்காக கடற்படையினர் 23 மில்லிமீற்றர் சுடுகலனுக்குப் பதிலாக அதிவலுக்கூடிய 30 மில்லிமீற்றர் தாக்குதல் சுடுகலனை புதிதாக பொருந்திய படங்களில் இருந்து கடற்புலிகளைத் தாக்கினர். சிறிலங்கா கடற்படையினரின் படகுகள் இப்போது களத்தில் இறங்கிவிட்டன. இஸ்ரேலியத் தயாரிப்பான அதேவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகுகளுடன் கொழும்பு டொக்யாட்டில் (Colombo Dockyard PLC) கட்டப்பட்ட தாக்குதல் படகுகளும் இணைந்து கூட்டாக கடற்புலிகளின் படகுகளை தாக்கத் தொடங்கினர்.
தமிழீழ விடுதலைப் போர் வரலாற்றில் கடலிலே பெரும் சமர்களைக் கண்டிருந்த கடற்புலிகள் இந்தச் சமரை மிக நுட்பமாக முறியடிக்க புதிய வியூகமிட்டனர். சிறிலங்கா கடற்படையினரின் நம்பிக்கையான அதேவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகுகளையே முறியடித்து கடற்படை கப்பல்களைத் தாக்கி அழித்திருந்த அனுபவங்களைக் கொண்டிருந்த கடற்புலிகளுக்கு இந்தச்சமர் புதிதும் அல்ல; பெரியதும் அல்ல. எதிரியின் இறுக்கமான கண்காணிப்பு மற்றும் தாக்குதல் வளையங்களை உடைத்துக்கொண்டு 1500 வரையிலான போராளிகளை குடாரப்பில் தரையிறக்கிய வெற்றிகர நடவடிக்கை முறியடிக்க முடியாமல் திணறியதைப்போல இந்தச்சமர் வியூகத்திலும் கடற்படை திணறியது.
சிறிலங்கா கடற்படை தனது தாக்குதலணியைப் பலப்படுத்துவதற்காக மேலதிக உதவிகளை இப்போது பெறமுனைகின்றது. காரைநகர் கடற்படை தளத்திலிருந்து மேலதிக தாக்குதல் கடற்கலங்களை அது விரைந்து அழைத்தது. எதிரி எப்படி வியூகம் அமைத்து தாக்கினாலும் அதையெல்லாம் முறியடித்து எதிரியை சிதறடிப்பதிலும், கதிகலங்க வைப்பதிலும் கடற்புலிகளின் வரலாற்று அனுபவங்கள் அதிகமாகும். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய திறமையான பயிற்சியும், நுட்பமான சுடும் முறையும் எதிரியை திணறடிக்கும் விதமான வியூகங்களும் கடற்புலிகளின் பெரும் பலமாகின்றன. இந்தச் சமரிலும் கடற்புலிகள் அத்தகைய நுட்பங்களையே பின்பற்றித் தாக்கினார்கள்; கடலில் இப்போது உக்கிரசமர் எதிரியின் கடற்கலங்கள் ஆவேசமாக தாக்குவதும் கடற்புலிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின் வாங்குவதுமாக தடுமாறுகின்றன; கடல் இப்போது பெரும் யுத்தகளமாக மாறிவிட்டது. நெடுந்தீவிற்கு அண்மித்த பகுதியில் எதிரியின் கடற்பிராந்தியத்திற்குள் எதிரிப் படையின் அதிகரித்த பலத்தோடு கடற்புலிகளும் – கடற்கரும்புலிகளும் மோதிக்கொண்டிருக்கின்றனர். உண்மைதான் ஒவ்வொரு கடற்புலி போராளியும் ஒவ்வொரு படையணி என்று சொல்லக்கூடிய அளவுக்கு துணிகரமாகவும் ஆற்றலாகவும் எதிரிக்கு எதிராக போரை நடத்திக்கொண்டிருந்தனர். இப்போது சிறிலங்கா கடற்படை கொண்டிருந்த மேலாதிக்க கனவு மெல்லமெல்ல சிதையத் தொடங்குகின்றது. சிறிலங்கா கடற்படையின் அந்த கனவை கடற்புலிகள் தங்களுடைய ஒவ்வொரு ரவையாலும் துளைத்து சல்லடையாக்கி கொண்டே இருக்கின்றனர்; சிங்களப் படைகளின் மேலாதிக்க கனவு இன்னும் சில மணித்துளிகளில் பற்றி எரியப் போகின்றது. அதற்கான சந்தர்ப்பத்தை அந்த வெற்றிப் புள்ளியைத் தொடும் கனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் கடற்கரும்புலிகள். ஆனால் கடற்கரும்புலிகளினதும், கடற்புலிகளினதும் தாக்குதல் வியூகத்தை முறியடியடிப்பதற்காகவும் இப்போது எதிரி மேலும் உதவியை கோருகின்றான். இதற்காக அனுராதபுரம் வான்படைத் தளத்திலிருந்து எம்.ஐ 24 தாக்குதல் உலங்கு வானூர்தி (MI-24 Attack Helicopter) அவசர அவசரமாக இணைத்துக் கொள்ளப்படுகின்றது. இப்போது கடற்கரும்புலிகளுக்கும், கடற்புலிகளுக்கும் பெரும் சவாலான நிலைமை எதிரியின் பலம் மிக அதிகரிக்கப்பட்டுவிட்டது; எதிரி ஈருடகத் தாக்குதலில் இறங்கிவிட்டான். கடலில் மிகப்பலம் வாய்ந்த அளவில் பீரங்கிப் படகுகளையும், வானில் எம்.ஐ 24 தாக்குதல் வானூர்தியும் கொண்டு இருவழித் தாக்குதலை நடத்துகின்றான் ஆனால் இந்த ஈருடகத் தாக்குதலின் வியூகத்தை எதிர்கொண்டவாறே கடற்புலிகளின் பீரங்கிகள் முழங்குகின்றன.
பட்டப்பகல் நேரம், எதிரியின் கடற்பிரதேசம், எதிரியின் மிகப் பலம் வாய்ந்த தாக்குதல் வியூகம், இருமுனை தாக்குதல் இவை எல்லாவற்றையும் கடந்து கடற்புலிகளின் தாக்குதல் முனைப்படைகின்றது. எதிரியால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு எதிரியின் திட்டத்திற்கும் கனவிற்கும் அப்பால் எதிரி தாக்குப்பிடிக்க முடியாத நிலையை கடற்புலிகள் ஏற்படுத்துகின்றார்கள். கடற்படையினர் பின்வாங்க தொடங்குகின்றனர் புலிகளின் வீரவேசமான தாக்குதல் குறி தவறாமல் நடக்கின்றது. அப்போது கடற்கரும்புலிகளின் வெடிமருந்து ஏற்றிய படகுகள் எதிரியின் வியூகத்தை உடைத்துக்கொண்டு ஊடறுத்துச் செல்கின்றன. போர்க் களங்களிலும், கடும் சமர்களிலும் தங்களை நெறிப்படுத்தி வீரத்தின் வடிவமாக உருவாக்கிய கடற்கரும்புலிகள் எதிரியின் இதயத்தை நொருக்குவதற்காக ஊடுருவி செல்கின்றார்கள்; எதிரியின் மூர்க்கமான தாக்குதலை முறியடித்தவாறு கடற்புலிகளின் படகுகள் எதிரியின் படகுகளை திசை திருப்பி ஒரு சிறுவழி எடுத்துக்கொடுக்க முன்னேறிச்சென்ற கரும்புலிகளின் படகு சிங்கள கடற்படையின் P 413 அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகின் மீது மோதியது. ஒரு நொடிப்பொழுதில் கடற்கரும்புலிகளும் எதிரியின் கடற்கலத்தை மூழ்கடித்துவிட்டு கடலிலே காவியமாகின்றனர்.
கரும்புலித் தாக்குதல் தொடர்பாக கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் கூறுகையில்…
பதினோரு அதிவேக தாக்குதல் டோறா பீரங்கிப் படகுகள் நின்றன. வானூர்த்தியின் தாக்குதலுக்கு மத்தியிலும் ஒரு வியூகம் அமைத்திருந்த சூழலிலும் வலது – இடது பக்கங்களில் எதிரியின் படகுகள் நின்றவேளையிலும் குறுக்கே ஊடறுத்து உள்ள தாக்கிக்கொண்டு சென்று ஒரு டோறாவினை செயலிழக்க வைத்துக்கொண்டு கரும்புலித் தாக்குதலினால் அதை நீர்மூலமாகக்குகின்றனர். (செயலிழந்தது என்பதன் அர்த்தம் முழுமையாக செயலிழந்து இருக்கவில்லை; மூன்று, நான்கு கடற்படையினர் சாவடைந்த நிலையிலும் வேகம் குறைவான நிலையிலும் மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில் கடற்கரும்புலிகள் விரைந்து சென்று கடற்படையின் படகின் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து P 413 அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகு கடலில் மூழ்கியது.
கடலிலே மூழ்கிய சிங்கள கடற்படையின் அதிவேக தாக்குதல் டோறா பீரங்கி படகின் கட்டளை அதிகாரி லெப்டினன் கொமான்டர் லலித் எக்கநாயக்காவும், பிரதிக் கட்டளை அதிகாரி உட்பட படகிலிருந்த அத்தனை பேரும் தூக்கி வீசப்பட்டனர் சிறீலங்கா கடற்படையின் நம்பிக்கைக்குரிய டோறா தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்கியது. மூன்று மணிநேரம் நடைபெற்ற உக்கிரமான கடற்சமரில் இஸ்ரேலிய தயாரிப்பான ஓரு அதிவேக தாக்குதல் ‘டோறா’ பீரங்கிப் படகினை இழந்ததுடன் மேலும் இரண்டு டோறா பீரங்கிப் படகுகள் சேதமடைந்த நிலையில் சிறிலங்கா கடற்படை பின்வாங்கியது. கடற்படை தரப்பில் பதினேழு பேர் இழக்கப்பட்டனர் அதாவது இருவர் காயமடைந்த நிலையிலேயே மீட்கப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. மேலும் பதினோரு கடற்படையினரைக் காணவில்லை என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது.
26.12.2007ம் ஆண்டு எதிரியின் தாக்குதல் கடற்கலங்களை மூழ்கடித்த வெற்றிகரத் தாக்குதலில் கடற்கரும்புலிகளான கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் சங்கரி, கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் கலையரிசி, கடற்கரும்புலி மேஜர் மதிமுகிலன், கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன் ஆகியோர் வீரகாவியமானார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிபடுதலில் தங்களை எமக்காக வடிவமைத்துக் கொண்ட இந்தக் கரும்புலிகள் தாயக விடுதலை கனவுடன் நெடுந்தீவுக் கடற்பரப்பில் வெற்றி தந்த சமரில் தங்களை அர்ப்பணித்தார்கள்.
கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் சங்கரி
அகஸ்ரின் ஜெயசுகந்தினி என்ற இயற்பெயரைக் கொண்ட கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் சங்கரி யாழ். மாவட்டத்தை தனது பிறப்பிடமாகக் கொண்டவள். சங்கரின் ஆற்றல் மிகப்பெரியது; 1994ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்துடன் தன்னை இணைத்துக் கொண்ட கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் சங்கரி கடற்புலிகளில் பணி புரிந்து தொடக்கத்தில் கடல்வழி வழங்கல் நடவடிக்கை தொடர்பாளராக பணியாற்றினார். 1995ம் ஆண்டில் இவர் வெடிமருந்து கருவியை பெற்று வெடிமருந்தைக் கையாள்வதில் சிறப்பாக பங்காற்றினார். பின்னர் 1997ம் ஆண்டில் அதிகாரிகள் பயிற்சி கல்வியை கற்று அதில் தேர்வாகி தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டார்.
1998ம் ஆண்டு காலப்பகுதியில் “ஜெயசிக்குறு” எதிர்ச்சமரில் பங்கேற்ற சங்கரி அதில் தன்னுடைய ஆற்றலை திறம்பட வெளிப்படுத்தி பின்னர் “ஓயாத அலைகள் – 03” தொடர் நடவடிக்கையிலும் பங்குபற்றும் சார்ந்தப்பம் இவளுக்கு அமைந்தது. “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின்போது ஐம்பது கலிபர் கனரக ஆயுதம் கொண்ட தன் அணியுடன் சென்று அங்கும் முழுவீச்சுடன் செயலாற்றினாள். பல சமர்களங்களைச் சந்தித்தவள் உடலில் பல விழுப்புண்களையும் தாங்கிக்கொள்கின்றாள். காலத்தின் நகர்வுக்கேற்ப விடுதலைக்கு பலம் சேர்க்கும் ஆழ்கடல் வழங்கல் நடவடிக்கையிலும் முல்லைத்தீவு மாவட்டம் முதல் மன்னார் மாவட்டம் ஊடாக புத்தளம் வரை இரவும் – பகலும் தேசத்தின் உயர்வுக்காக உழைத்தவர்களில் கடற்கரும்புலி சங்கரியும் ஒருவர். 2004ம் ஆண்டு பகுதியில் கடற்கரும்புலி மேஜர் மங்கை படகு கட்டுமான பகுதியில் வரைபடவியலாளராக பணியாற்றினார்.
கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் சங்கரியின் நினைவுகள்பற்றி கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் இவ்வாறு மீள் நினைவாக்கிக்கொள்கின்றார்.
கடற்புலிகளின் சண்டை படகுகள், வழங்கல் படகுகள், கரும்புலிப் படகுகள் மற்றும் ஏனைய வகைப் படகுகளை உள்ளடக்கிய எங்களுடைய படகுகளை நாங்களே வடிவமைத்து உருவாக்கம் செய்யக்கூடிய வரைபட பிரிவில் நீண்ட காலமாக பலதரப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் ஏனென்றால் அவர் வடிவமைப்பு செய்த படகுகளில் சக கடற்கரும்புலி வீரர்கள் சென்று இலகுகள் மீது தாக்குதலை மேற்கொண்டு இடிக்க இடிக்க தோழ – தோழியரின் இழப்பின் சுமையால் கரும்புலியாக இருந்த சங்கரியால் தொடர்ந்தும் அதற்குள் பணி தொடர முடியவில்லை. ஆனால், அந்தப்பணியிலிருந்து வெளியே வருவதற்கு அதற்குரிய பொறுப்பாளரும் அனுமதிக்கவில்லை. அதனால் காலத்தினுடைய போராட்டத்தினுடைய தேவைகளை கருதி தொடர்ந்தும் அந்த பிரிவில் நீண்ட காலமாக பணியாற்றினார். இன்று எங்களுடைய படகுகள் எல்லாம் வேகம் அதிகரித்து ஓட்டிச் செல்லக் கூடிய ஒரு சூழலுக்கு கொண்டு வந்தவர்கள் இந்த வரைபடப் பிரிவு என்றால் மிகையாகாது. அந்த வரைபடப் பிரிவில் மிக முக்கிய பெரும் பணியை பொறுப்பெடுத்து செய்து கொண்டிருந்தார்.
பின்னர் ஒரு கட்டத்தில் அந்த பணிக்கு தேவையான போராளிகளை உருவாக்கிவிட்டு திரும்ப அந்தப்பணியிலிருந்து மாற்றம்பெற்று காலத்தினுடைய தேவையை கருத்திற்கொண்டு எங்களுடைய போராட்டத்திற்கு பலம் சேர்க்கின்ற நடவடிக்கையை எங்களுடைய பலவீனமான செயற்பாடுகள் என்னவென்று இனங்கண்டு அதனை மாற்றி அமைக்கும் முயற்சியில் சங்கரி அவர்கள் அதைப்பற்றிய விடையங்களை அதற்குள் கற்று உண்மையில் உறக்கமின்றி பசி மறந்து 24 மணித்தியாலமும் தமிழீழத்தின் மேற்கு திசையில் எமது கட்டுப்பாட்டிற்குள்ளும், எதிரியின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள்ளும் நின்று அந்தப் பணியை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக செய்தவர். அந்தப் பணியின்போதே கரும்புலித் தாக்குதலுக்குச் செல்லும் சந்தர்ப்பம் எதிர்பார்த்து காத்திருந்து அதற்கான வேண்டுகோளையும் வைத்திருந்தார் சங்கரி. தேவையென்றால் உங்களுக்கு அந்த தாக்குதலுக்குரிய சார்ந்தப்பம் வழங்கப்படும் ஆனால் புதிய போராளிகள் சிலரை பயிற்றுவித்து அவர்களை உங்கள் பணிக்குரிய நிலைக்கு வளர்த்துவிட்டுங்கள் என்றபோதும் அதை நிறைவேற்றினார். அதற்கமைவாக தாக்குதலுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்ட பின்னர் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் அவர் தாக்குதலுக்குரிய பயிற்சிக்களத்திற்கு மாற்றப்பட்டார்.
அனைத்துவிதமான கடற் தாக்குதல் பயிற்சியிலும் அவர் மிகத் துரிதமாகவும். வேகமாகவும் மேற்கொண்டு நெடுந்தீவு கடற்சமரில் கரும்புலித் தாக்குதலணியை சிறப்பாக தலைமையேற்றுச் சென்று எதிரியின் அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகை மூழ்கடித்து அந்தத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்து கடலிலே காவியமானார்.
கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் கலையரசி
செல்வராசா ஜசிந்தா என்ற இயற்பெயரைக் கொண்ட கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் கலையரசி யாழ். மாவட்டத்தை தனது பிறப்பிடமாகக் கொண்டவள். 1993ம் ஆண்டு தாயக விடுதலைப் போராட்டத்துடன் தன்னை இணைத்து அடிப்படை பயிற்சியை நிறைவு செய்துகொண்ட கலையரசி நிதித்துறையின் அறிக்கைப் பகுதியில் பணி செய்தார். பின்னர் 1999ம் ஆண்திலிருந்து 2000ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் யாழ் மாவட்டத்திற்கான தாக்குதல் அணியில் செயற்பட்டவர் தொடர்ந்து மருத்துவக் கல்வியையும் கற்றார். மருத்துவப் பயிற்சியை பெற்றதன் காரணமாக 2001ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டுவரை தாக்குதல் அணியில் மருத்துவப் போராளியாக செயற்பட்டார். பின்னர் கடற்புலிகளின் லெப்டினன்ட் கேணல் நிறோஜன் கல்லூரியில் கடல் சார்ந்த படைத்துறை பயிற்சிகளைப் பெற்று நிறைவுசெய்தபின் தாக்குதல் அணியில் இணைந்து பணியாற்றினார்.
கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் கலையரசியின் நினைவுகள்பற்றி கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் இவ்வாறு மீள் நினைவிற் கொள்கின்றார்.
கடற்கரும்புலி கலையரசி அண்மைக் காலத்தில் தாக்குதலுக்கு செல்வதற்கு முன்னர் எனக்கொரு மடல் ஒன்றை வரைந்திருந்தார். அதில் எங்களுடைய போராளிகள் மக்களிடம் நடந்து கொள்ளுகின்ற விமர்சிக்கக்கூடிய விடயங்களை குறிப்பிட்டு இது எல்லாவற்றையும் உடனடியாக தவிர்க்கச் சொல்லி கூறியிருந்தார். உண்மையில் அவர் பயிற்சி, தாக்குதல் மற்றும் தாக்குதலுக்காக சென்று வருவதுமாக வருடக் கணக்காக தாக்குதல் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஒரு கடற்கரும்புலி. எத்தனையோ கடற்சமருக்கு சென்றும் சந்தர்ப்பம் சரியாக அமையாது; இலக்குகள் இன்றி திரும்பி வருவார் இப்படியான ஒரு நிலையில்தான் இந்தப் போராளி இருந்தார். ஆனால் இவ்வாறாக இருந்த நிலையிலும் மக்களுக்கு ஏற்படும் அந்த பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அதை தீர்த்து வைப்பதிலும் முழுமையாக செயற்பட்ட ஒருவர்தான் கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் கலையரசி. 26.12.2007 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் எதிரியின் அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகை மூழ்கடித்து அந்தத் தாக்குதலின் வெற்றி உறுதுணையாகி கடலிலே காவியமானார்.
கடற்கரும்புலி மேஜர் மதிமுகிலன்
பூராசா இன்பராசா என்ற இயற்பெயரைக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் மதிமுகிலன் யாழ். மாவட்டத்தை தனது பிறப்பிடமாகக் கொண்டவன். 2001ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் போரின் காலப்பணியை கையேற்று அடிப்படை படைத்துறைப் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டவன் கடற்புலிகளில் இணைந்து கனரக ஆயுதங்களை இயக்குவதில் தேர்ச்சி பெற்றவனாக விளங்குகின்றான்.
திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்து ஆயிரக் கணக்கான போராளிகளை கடல்வழியாக வன்னிக்கு பாதுகாப்பாக கொண்டு வருகின்ற நடவடிக்கையின் பாதுகாப்பு கடற் சமர்களில் எல்லாம் சிறந்த ஒரு முன்னணி கனரக ஆயுத சூட்டாளராக பல களமுனைகளில் நின்று சமர் புரிந்தவன். தன் தேசத்திற்கு இன்னும் உயர்வாக கடமை செய்ய விரும்பியவன் கடற்கரும்புலி அணிக்குள் உள்வாங்கப்பட்டு குறுகிய கால பயிற்சியுடன் நெடுந்தீவு கடற்சமரில் எதிரியின் வியூகத்தை உடைத்து மூழ்கடித்த அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகினை தாக்குவதில் பெரும் பங்காற்றிய கடற்கரும்புலி மேஜர் மதிமுகிலன் நெடுந்தீவு கடற்பரப்பில் வீர காவியமானான்.
கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன்
தங்கவேலு சயந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன் யாழ். மாவட்டத்தை தனது பிறப்பிடமாகக் கொண்டவன். 2002ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்ட வாழ்விற்குள் தன்னை இணைத்துக்கொண்டவன் “ஜொனி 02” பயிற்சிப் பாசறையில் அடிப்படை படைத்துறைப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு போராளி. தொடர்ந்து கனரக ஆயுதப் பயிற்சியையும், சிறப்பு பயிற்ச்சியையும் பெற்றார். சிறந்த சூட்டுப் பயிற்சிக்காக கடற்புலிகளின் சிறப்பு தளபதி சூசை அவர்களிடம் பல பரிசில்களையும் பெற்றிருந்தார்.
உண்மையில் ஈழவீரன் நீண்ட காலமாக ஒவ்வொரு கடற் சண்டைக்கும் இலக்குகள் தேடி தாக்குதல் மேற்கொள்வதற்காக போவார்; ஆனால் இலக்கு சரிவர அமையாத காரணத்தினால் திரும்பி வருவார். நீண்ட நாட்களாக பல தாக்குதலை மேற்கொள்ளுவதற்காக சிறப்பு பயிற்சிளை ஏனைய வீரர்கள் எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதைப் பார்த்துவிட்டு தானும் அப்படி ஒரு சிறப்பு பயிற்சியை பெற்று எதிரியின் கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்று இலக்குகளை நிர்மூலமாக்க வேண்டும் என்பதில் குறியாக நின்று கடினமாக பயிற்சி பெற்றவர்தான் ஈழவீரன். 26.12.2007ம் ஆண்டு நெடுந்தீவு கடற்சமரில் எதிரிகளை சிதைத்து அழித்துவிட்டு கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன் வீர காவியம் அடைகின்றார்.
கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் கூறுகையில்…
இந்த 2007ம் ஆண்டில் போர்முரசு கொட்டியிருக்கின்ற சிறிலங்காவினுடைய முப்படைகளும், இந்த முப்படைகளுக்கு ஆதரவாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கும் பல நாடுகள் நேரடியாக ஆயுத தளபாட உதவிகளையும், கடற்படை கடற்கலங்களையும் வழங்கிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், சிறிலங்கா அரசின் இவ்வளவு படைவளங்கள் நிறைந்த நிலையில் இவர்களுடைய வியூகத்தினை உடைத்தெறிந்து ஒருபக்கம் வான்படை இன்னொரு பக்கம் சிறிலங்கா கடற்படையினுடைய நவீனரக ஆயுதங்கள் இத்தனைக்கும் மத்தியில் பட்டப்பகல் வந்து ஊடுருவி நிர்மூலமாக்கினார்கள் என்று சொன்னால் இந்த நான்கு கரும்புலிகளினதும் அளப்பரிய சாதனை.
“விடுதலைப் புலிகளுடைய கடற்புலிகள் பலமிழந்து காணப்படுகின்றார்களா? பலமாக காணப்படுகின்றார்களா? என்பதை இனிமேல் விரியப் போகின்ற கடற்களம் எடுத்துக்காட்டாக இருக்கும். அதற்குரிய முன்னோடி நடவடிக்கையாகத்தான் இந்த நெடுந்தீவு கடற்சமர் காணப்படுகின்றது. ஆகவே விடுதலைப் புலிகளினுடைய கடற்ப்புலிகள் பலமா? பலவீனமா? என்பதை அடுத்த கடற்சமர்களில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் மிக திறம்பட கடற்புலிகளும், கடற்கரும்புலிகளும் நிறைவேற்றி காட்டுவார்கள்.
கடற்புலிகளைப் பற்றி தவறான மதிப்பீட்டைக்கொண்டு வெளியுலகில் பரப்புரை செய்துவந்த சிறிலங்கா அரசுக்கு இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியையும், திகைப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழீழக் கடற்பரப்பில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு முனைந்த சிறிலங்கா கடற்படையின் கனவை மோதி உடைத்து அதை தீயிட்டுக் கொண்டிருக்கின்றனர் கடற்புலிகளும், கடற்கரும்புலிகளும். சிறிலங்கா அரசின் கற்பனைகளுக்கும், கட்டுக்கதைகளுக்கும் புலிகள் கொடுக்கின்ற பதிலாக அதிலும் இன்னுமொரு தொடக்கமாக இந்த கடற்சமர் அமைந்திருக்கின்றது. இந்தச்சமரில் ஒரு அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்டவுடன் மேலும் இரண்டு அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகுகள் சேதமடைந்தன. ஆக மொத்தம் கடற்படையின் மூன்று தாக்குதல் பீரங்கிப் படகுகளை கடற்புலிகள் கடற்தளத்திலிருந்து அகற்றிவிட்டனர். இந்த தாக்குதல் கடற்படையினருக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்திருப்பதாக படைத்துறை ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றார்கள். இனிவரும் கடற்சமர்கள் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய வாசல்கள் திறக்கவே போகின்றன அதனை முதலாவது படிகள் இந்த அதிரடி.
குறிப்பு: 26.12.2007 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட கடற்சமர் தொடர்பான இந்த வரலாற்றுப்பதிவு 2007ம் ஆண்டு தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய விபரணத்திலிருந்து வரலாற்றுத்தேவை கருதி தேசக்காற்றினால் எழுத்துமுறையில் ஆவணமாக்கப்பட்டது.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
