என்னை மறந்து விடுங்கள்
என்னை மறந்து விடுங்கள்…
இனிமேலும் பொறுப்பது சரிப்பட்டுவராது! ஆத்திரமும் அவமானமும் என்னைப் போட்டுச் சப்பினதை இனிமேல் என்ன செய்வது?
எனது எண்ணங்கள் நம்பிக்கைகள் எல்லாம் நாசாமாகிப் போய்விட்டன. புரண்டு புரண்டு படுக்கிறேன்… நேரமும் இரவு பன்னிரண்டு மணிக்கு மேலாகியும் நித்திரை வரேல்லை. எட்டி உள்ளே பாத்தேன். மனுசியும் பிள்ளைகளும் நல்ல நித்திரை… எனக்கு மட்டும் நித்திரை வரேல்லை… வீட்டுக்கு முன்னாலுள்ள வாய்க்காலில் தண்ணி சலசல எனும் சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது… போன விசயம் என்னப்பா? என்று கேட்ட, என்மனுசியிடம் எல்லாம் விடியச் சொல்கிறேன் எண்டு சொல்லிற்றன்இ அவள் சாப்பாடு தரவும் நான் வழியில் சரும்போது சாப்பிட்டிட்டன், என்று பொய்யும் சொல்லிப் போட்டன். சை! இந்தப் பொய்யினாலே யாருக்கும் நட்டமோ துன்பமோ இல்லைத்தானே!
தண்ணி சலசல சத்தத்துடன் ஓடிக்கொண்டிருப்பது தொடர்ந்து கேட்டது. தண்ணிக்கும் நித்திரையில்லையோ? ஓடிக்கொண்டிருக்கும் போது எப்படி நித்திரை வரும்? அது வாய்க்காலில் ஓடுது எனக்குள் எண்ணம் ஓடுது… தண்ணி இருகரைக்கும் கட்டுப்பட்டு ஓடும். எனக்குள் எண்ணமோ கண்டபடி ஓடுது! எண்ண ஓட்டத்தை ஒழுங்குபடுத்தினால்தான் ஒரு முடிவைக் காணலாம்! இருந்த இடம் விட்டு இடம் பெயர்ந்து வன்னிக்கு வந்து ஏழு வருடம் தாண்டிவிட்டது.
வன்னியில் வாழ்க்கையோ தொடர்ந்த இடப்பெயர்வுகளாய் இருந்தது… வருடத்துக்கு வருடம் ஏன்இ மாதத்துக்கு மாதம் என்றும் சொல்லலாம்.
ஆமி வந்திடுவானோ எண்ட அச்சத்தால் ஓடிய இடங்களே அதிகம்… அந்த அச்சம் ஒண்டும் பிழையானதல்ல… இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து… தவித்த… தவிப்புக்களும், துடித்த துடிப்புக்களும்.
வாழப்பிறந்த மனித வாழ்வு நீரோட்டத்தில் இத்தனை சுழல்களா? நீந்தி நீந்தி உடலும் களைத்துவிட்டது. கைகாலுகளும் சோர்ந்து விட்டன. தடுமாறுகின்றன. மிதந்திருப்பது நீரில், கால்கள் அடிக்காமல் இருக்க முடியுமா?
கைகால்களை அடித்து இதமாய் இயங்கினால் தானே மிதக்க முடியும். நீந்த முடியும்! அதுவும் சுழிகளுக்குள்ளும் அகப்படாமல் இருக்க வேண்டுமா!
ஏழு வருடங்கள் ஓயாத ஓட்டம்!
உண்ணல், உடுத்தல், உறங்கல் எதுவும் ஒழுங்கானபடி அமைக்க முடியாத நிலை. இந்த மூன்றிற்குமே முயன்று உழண்ட உழழ்வு…! சும்மாவிடு! இதற்குப் பேர் வாழ்க்கை…! வாழ்வதே வாழ்க்கையெண்டு உண்ணாணை வாய் விட்டுச் சொல்லாதையுங்கோ! உயிரோடு உழண்டிடும் இந்த சீவியத்திற்கு உழழ்வு என்று ஏன் பேர் வைக்கக் கூடாது? ம்… இப்ப ஓட்டை வாழ்வுக்கு ஒருமுடிவு வந்துதான் கிடக்கு! என்ரை ஓட்டை வாழ்வுக்கு ஒரு முடிவு வரேல்லையே! பல்லி ஒன்று சத்தம் போட்டது! மேலே பாத்தேன் ஒன்றும் தெரியேல்லை. என்ரை வீட்டுக் கூரைமுகட்டில் ஓட்டைதான் தெரிந்தது. “குடுக்கிற கடவுள் கூரையைப் பிய்ச்சுப் போட்டுக் குடுப்பார் எண்டு சொல்லுவார்கள்! ஒழுங்கான கூரை இருந்தால் தானே அவரும் பிச்சுப்போட்டுத் தர முடியும்!
மீண்டும் புரண்டு சரிந்து படுக்கிறன்.
நித்திரை வந்தாத்தானே… இனிமேலும் பொறுப்பது ஒத்து வராது எண்டுதானே யோசிக்க வெளிக்கிட்டனான். இப்ப என்னவெல்லாமோ யோசிக்கிறன்.
தவளைகளோ வேறு எதுகளோ சத்தம் போட்டது! அவையள் என்னைப் பார்த்துப் பழிக்குதுகளோ? எனக்குக் கிட்டடியாக அவற்றின் சத்தம் தொடர்ந்து கேட்டது. இனியும் பொறுக்கேலாது.
படுத்தபடியே கைகளை நீட்டித் தடவினேன். ஏதோ ஒரு பொருள் தட்டுப்பட்டது. வாசலுக்குள்ளால் சத்தம் வந்த இடத்திற்கு எறிந்தேன்… டங்? கென்று எறிந்த பொருள் வீழ்ந்து உருண்டது.
ம்… இதற்கான திட்டும் பேச்சும் நாளைக்கு நடக்கும். உள்ள பார்த்தேன்… அவள்பாவி நிம்மதியான நித்திரை…! தவளை சில்வண்டுகளின் சத்தமும் நிண்டு விட்டது. நிம்மதியாக மீண்டும் எண்ணத் தொடங்கினேன்.
இடம் பெயர்ந்து வந்திருந்த வன்னியில் ஒரு இருப்பிடம் நல்லதாய் சொந்தமாய் உருவாக்க முடியவில்லை. வசதியாய் இடமும் கிடைக்கவில்லைத்தான்இ எப்படிக் கிடைக்க முடியும்?
சண்டைக் காலத்தில் படையள் வந்ததாலையும், துரத்தினதாலையும் இடம்பெயர்ந்தம்… இப்ப இருக்கிற காணியின் சொந்தக்காரர் வந்து…! இயக்கப்புள்ளையள், புள்ளையள் எண்டால் ஆம்பிளை – பொம்புளைப் போராளிகளைச் சேர்த்துத்தான் சொல்லுறன். நான் எப்பவும் அப்படித்தான் சொல்லுறனான். அதுகள் தந்த காணிதான் இது! காணிச் சொந்தக்காரர் காணியைவிடச் சொல்கிறார் புள்ளைகளை கேட்டா வேற காணி எப்பயோ தரக்கூடும், பிறகு, அந்தக் காணியின் சொந்தக்காரர் வரமாட்டாரே!
ம்… ஏன் தெல்லையே? சொந்த ஊருக்குப் போவம்! அங்கை கொஞ்சம் காணிbகிடக்குத்தானே! தம்பியும் இருக்கிறான் மகனும் வெளியிலை ஏதாவது வீடு போடக்கீட உதவி செய்வான்தானே.
அமைதி வந்ததும் ஒருவருடம் வன்னியை விட்டுப் போறேல்லை எண்ட முடிவோடு இவ்வளவு நாளும் போகாமல் இருந்திட்டன்.
சொந்த ஊர், நான் போன நேரம் தம்பி வெளியிலை, அட காணி எங்கயடா? வீடு எங்கயடா? யார் பதில் சொல்கிறது?…… நான்தான் பதில் சொல்ல வேணும்!
வன்னியில் மரங்களின் காடு. நம்மூரில் இடிபட்டு வீழ்ந்த கற்குவியலின் காடு. அது முற்காலம் தந்த புண்ணியம். இது இக்கால புண்ணியம். வன்னியின் புழுதிகளை விட என்ர சொந்த இடத்தில் உள்ள கொம்மாண்ட முள்ளுக்கம்பியள் உறுத்துது கண்ணுக்கை. அந்த அடிபட்ட கற்குவியலுக்குள்ளாலையும் யாரோ ஒருவர் சுத்துமதில் கட்டிப் போட்டார். மதில் கட்டின காணிக்கை நிண்டது வேம்பு ஒன்று. அது மட்டும்தான் நிக்குது!……
காற்று அதனுடன் சம்பாசிக்குது… வேம்பும் ஏதேதோ தலைகாட்டி தலையாட்டிச் சொல்லுது. வேம்பு எனக்கும் ஏதோ சொல்லுது. அட என்ர காணிக்குள்ள நிண்ட வேம்பெல்லாம் இது… அதையும் சேர்த்து ஆரோ மதில் கட்டிப்போட்டான்.
நான் உள்ளே போட்டன். ஐயா வைச்சு வளத்த வேம்பு பாசத்தோடு அதைத் தொட்டன்…
யாரது காணிக்குள்ளை? நிலக் கண்ணிவெடி வெடிச்சமாதிரி இருந்தது! உள்ளம் பதற வெடிச்சவனை பார்த்தேன். கண்ணிவெடி வெடிச்சா காலுடையும், இவன்ர வெடிப்பிலை என்ர மனம் உடைஞ்சு போச்சு, வெடிச்சவன் வேறுயாருமில்லை. என்ரை தம்பிதான். வெடிச்சவன் வெடிச்சதோட நிண்டானா? என்னத்துக்குள்ள போறாய் எண்டும் கேட்டான். தம்பி இது என்ர வேம்படா, மதில அதையும் சேர்த்துக் கட்டிக்கிடக்கு யார் இது கட்டினது? நான்தான் கட்டினனான். ஐயா காணி முழுக்க எனக்கு எழுதிப்போட்டார். ஆயிரம் ஆட்டுலெறிக்குண்டுகள் ஒண்டாவந்து வீழ்ந்து வெடித்தன. அதிர்ந்து போனன்… ஐயா அப்படிச் செய்திருக்க மாட்டார் இவன் பொய் சொல்கிறான். அவன் ஏதேதோ கதைச்சான். அபகரிக்க நினைக்கிறான். அதனாலை இவன் ஆயிரம்கதை கதைக்கிறான்… சரி என்ரை சொந்த தம்பி தானே… கொஞ்சம் இரந்தும் உறவாடியும் கதைப்பம் இப்ப என்ன கெட்டது?……
அட தம்பி! ஐயா எனக்குத் தந்து நான் குடியிருந்த காணி இதுதாண்டா தம்பி, நீ மதில் நேருக்காக இந்தக் காணியையும் அரைவாசியைச் சேர்த்து மதில் கட்டிப் போட்டாய், அட தம்பி நான் எங்கை வந்து வீடு போடுறது?
கொஞ்சம் கூடக்குறைய இரந்துதான் கேட்டனான்! காற்றின் உதைப்பிற்கும் இழப்பிற்கும் ஏற்றவாறு சோவென்று சத்தமிட்டவாறு ஆடி அசைந்து கொண்டிருந்த வேம்பு அப்படியே திடீரென்று அசையாமல் ஆடாமல் நிண்டது!
வேம்பு எனக்கு இரக்கம் தெரிவிக்குதோ? தம்பி கதைக்கிறான்! என்ரை மோன் வாற மாதம் காசு அனுப்புறான் நான் ஒரு கடையும் அரிசி குத்துற மில்லும் கட்டப்போறன்.
ம்… அவன்ரை மகன் வெளிநாட்டிலை நிண்டு காசு அனுப்பப் போறான்… ஒருக்கா இரந்து போட்டன் இன்னுமொருக்கால் இரந்து பார்ப்பம். அட தம்பி ஐயாட்டை நான் காசு கொடுத்துக் கொள்முதல் செய்த இரண்டு பரப்புக் காணியும் இதுக்கைதாண்டா கிடக்கு. ஆடாமல் அசையாமல் நிண்ட வேம்பு மீண்டும் சோவென்று அசையத் தொடங்கிவிட்டது. நான் மீண்டும் இரப்பது இதுக்குப்பிடிக்கேல்லையோ? எப்ப வேண்டினனி எங்களுக்குத் தெரியாமல்? தம்பியின் கேள்விக்கு நான் பதிலும் இரந்துதான் சொன்னன். அட தம்பி, மச்சாளின்ரை சீதனக் காசிலையெல்ல ஐயாவிட்ட இரண்டுபரப்பு வாங்கினனான்.
காற்குக்கும் பொல்லாத சேட்டை, பொல பொலவென்று வேம்பின் சிறு கொம்பு ஒன்று ஒடிந்து வீழ்ந்தது… ஒடிந்த கொப்புக்காகத்தான் வேம்பு கவலைப்பட்டதோ படேல்லையோ யாருக்குத் தெரியும். அது தொடர்ந்தும் காற்றுக்கு இயல்பாய் அசைந்து ஆடிக்கொண்டுதான் இருந்தது. காற்று இன்னும் எத்தனை கொப்பை ஒடிக்குமோ? இல்லை வேம்பைத்தான் முறிக்குமோ? எனக்காக இரக்கப்பட வேம்புக்காக இப்ப நான் இரங்கினேன்…! அந்த வேம்பின் மீது நான் இரக்கம் காட்டத்தானே வேணும் அது ஒண்டுதானை என்ரை காணியைக் காட்டித்தர நிக்குது…
வேகமாக அடிக்கும் காற்று என்ரை தடயத்தை முறித்துப் போடுமோ? அப்படியெண்டால் காற்றும் அநியாயத்தின் பக்கமோ?
உதிலை நிண்டு ஒண்டும் மசிய வேண்டாம். காசு குடுத்துக் காணி வேண்டினால் உறுதியைக் கொண்டு வாவன் பாப்பம்! தம்பி எதுக்கும் தயாராய் நிண்டான்! ஏழு வருடமா எங்க போனனீங்கள்? ஐயா செத்ததுக்கும் வரேல்லை இப்ப வந்து நிக்கிறியள்!
அட என்ர தம்பிதான் பேசுகிறானா? ஏழெட்டு வருட வாழ்க்கை இவனை இப்படி ஆக்கிப் போட்டுதா? ஆமியோடை இருந்த குணமா இல்லை வெளிநாட்டுக் காசு கொடுத்த வீம்பிலை அன்பு பாசம் கெட்டுப் போச்சோ? ஒண்டுமாத் தெரியேல்லை… என்ரை ஐயா தந்த காணியையும் எடுத்துப் போட்டான். நான் காசு குடுத்து வாங்கின காணியையும் விடமாட்டன் என்கிறான். இது அநியாயமல்லோ…? அநியாயம் எண்டு கேட்டா அடிப்பான் போல கிடக்கு! வன்னியில் வாழ்ந்த உழல்வால் மெலிந்த உடம்புடன் நான், வெளிநாட்டுப் பணத்திலை திண்டு கொழுத்த தினவிலை என்ரை தம்பி! சீ! இப்படி ஒரு நிலை என்ர எதிரிக்கும் வரக்கூடாது… கூடப்பிறந்த தம்பிக்காரனுடன் உண்மையைக் கூட பேச முடியவில்லையே! நொந்து வந்த எனக்கு ஆறுதலாய் இருப்பான் எண்டு எண்ணினன்… என்ரை காணியிலை ஒரு சிறிய வீட்டை கீட்டை நான் போட இவனும் உதவுவான் எண்டும் எண்ணினேன் படையெடுத்து வந்த அந்நியன் நான் வாழ்ந்த மனை வீட்டை உடைச்சான். என்ரை உடன் பிறப்பு நான் கட்டிவந்த மனக்கோட்டையை உடைச்சுப் போட்டான். மன உடைவின் கற்குவியல்கள் என்னுள் கனத்தது.
உறுதி கொண்டுவா என்கிறான்? இந்த ஏழு வருட அலைச்சலிலை அதைநான் கவனிக்கவே இல்லை அந்த ஒரு சூட்கேசின் உள்ளறையிலை அது எப்படியும் இருக்கும்…!
சரியடா தம்பி நான் உறுதியோடை வாறன், நான் திரும்பி நடந்தேன் அவன் ம்… ம் எண்ட படி தன்னுடைய வீட்டுக்கு நடந்தான் என்னை வாவெண்டு கூடக் கேக்கலை.
நல்லவேளை நான் முதலிலேயே அவன்ரை மனுசி பிள்ளைகளைப் போய் பார்த்திட்டன். எங்கையெங்கையோ யார் யாரட்டையோ போகவேணுமெண்டு நினைச்சனான். ஒருடமும் போகேல்லை… அந்த வீச்சிலை பஸ்சில் ஏறிட்டன். இப்ப போனால் தடையை தாண்டிடலாம்…
பல இடங்களில் பஸ் ஊர்ந்து ஊர்ந்து சென்றது. பஸ் சில இடங்களிலை போக முடியாமலும் நிண்டது… ஏன்? ஆமிக்காரங்கள் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏதோ அந்த வீதியாலை ஊர்வலம் போறாய்களாம்! ஓமோம் ஏதோதோ கோசங்களும் அவங்கட கடவுளை வேண்டிக் கொண்டும் ஊர்வலம் போறாங்கள் போல கிடக்கு எனக்கென்ன அதிலை, என்ரை கவலை எனக்கு! இது எங்கடை வீதி! இது எங்கடை மண்! இது எங்கடை தேசம்! அதன் பேர் சிறிலங்கா… எண்டு தான் ஆமிக்காரர் சொல்லிக்கொண்டு போறாங்களாம். எனக்கெண்டால் எரிச்சல் எரிச்சலாக வந்தது. அவரொருவருக்குச் சிங்களமும் தெரியும் எண்டு காட்டுறார். அந்தச் சினத்திலை வெளியிலை பார்த்துக் கொண்டிருக்கிறன். சிவன்கோவில், பிள்ளையார் கோயில், மாதாகோவில் எனப் பல கோவில்கள் என் கண்ணில் பட்டன. அவையொண்டும் என்ரை கவனத்திலை படேல்லை. எனக்கு என்ரை காணியும் என்ரை வேம்பும்தான் தொடர்ந்தும் தென்பட்டன.
வன்னியிலை என்ரை வீட்டுக்கை படுத்துக்கொண்டு நான் எங்கையெங்கையோ போட்டு வந்துட்டன், மனுசி ஆழ்ந்த நித்திரை எண்டால் அவள் பாவிக்கும் லேசாகக் குறட்டை வரும். பிள்ளைகளை பார்த்தால் அதுகளும் நல்ல நித்திரை… ஒண்டு குமர். மற்றது குமராக இன்னும் இரண்டொரு வருசம் கிடக்கு.
நான் நடந்தது ஒண்டும் அதுகளுக்குச் சொல்லேல்லை. அதுகளின்ரை மனங்களையும் ஏன் குழப்ப வேணும்? வாய்க்காலில் தண்ணியின்ரை சத்தத்தோடை தொடர்ந்து ஓடுது படுத்திருந்தபடியே பார்வையை திருப்பிப் பார்த்தன்.
படத்துக்கு ஏத்திவைச்ச தேங்காயெண்ணை விளக்கு மங்கிக்கொண்டு எரிஞ்சுது. தேங்காய் எண்ணை விட வேணும்… அவள் பாவி எழும்பினாள் கொதித்து விழுவாள்! அவள் அதிகம் கொதிக்கிறது இதுக்குத்தான்… மெல்ல எழும்பிச் சென்று உரிய இடத்திலை தடவி தேங்காய் எண்ணெய்ப் போத்தலை எடுத்தன். போத்தல் கனத்தது. என்ன இல்லாட்டிலும் மனுசி இதை குறைய விடாது… விளக்கில் அதை ஊத்தினேன்?…… சற்று நேரத்தில் வெளிச்சம் பரவியது. படத்தில் இருந்த எனது கப்டன் மகன் என்னப்பா நித்திரை வரேல்லையா? எண்டு கேட்பது போல இருந்தது நான் சொல்லிக் கொண்டு படுக்கைக்கு திரும்பினேன், நீ இருந்திருந்தா உன் சித்தப்பா எனக்கு அடிக்குமாப்போல் நிப்பானா?……
ம்… படுக்கையில் வீழ்ந்தேன். எண்ணப்பறவை பறந்து பறந்து களைத்து விட்டது. ஏதாவது முடிவு எடுத்தாத்தான் நானும் நித்திரை கொள்ள முடியும். மெதுவாக எழுந்து வெளியில் சென்றேன். வானம் இன்னமும் இருண்டுதான் கிடந்தது… நான் என் உடல் பலத்தையும் அதன் இயங்கு நிலையையும் அறியச் சிலதைச் செய்து பார்த்தன். உரலின் மேல் ஏறி நின்று உரலை கால்களால் உருட்டி பார்த்தன் முதலில் பிசகியது பிறகு சரியாய் வந்திட்டுது… உலக்கையை எடுத்து விசிக்கிப் பார்த்தன்… சில குறிப்பிட்ட பொருட்களை இலக்கு வைச்சு அடிச்சுப் பார்த்தன், இருட்டிலையும் குறி தவறவில்லை. களைப்பும் அவ்வளவு இல்லை… எடுத்து எல்லைப்படை பயிற்சியை எண்ணிப்பார்த்தன் நல்லவேளை நான் முதலிலேயே அவன்ர மனுசி பிள்ளைகளைப் போய்ப்பாத்திட்டன்.
வெள்ளியொன்று எரிந்தபடி விழுந்தது. இனியும் பொறுப்பது ஒத்துவராது. சண்டித்தனத்துக்கு சண்டித்தனம் காட்டாவிட்டால் எதுவும் சரிவராது… காணி உறுதியை எடுத்துக்கொண்டு போய் காட்டிறன். அதுக்கு அவன் சரிவரவில்லையெண்டால் என்ரை சாண்டோ விளையாட்டை காட்டுவன். முரண்பட்டு அவன் அடிபிடிக்கு வந்து தரமறுக்கட்டும் பாப்பம்?
என் கைகளை பாத்தன் மெலிஞ்சாலும் சாண்டோவின் கை சாண்டோவின் கைதான். அவற்றை ஆக்கள் வந்தால் காட்டுறன் என்ர கம்பு விளையாட்டை. நான் கம்பு விசிக்கினால் கல்லெறி கூட என்ரை மேலிலை படாது… அப்படி ஒரு கம்பை அங்கை எடுக்க மாட்டனா என்ன?
முடிவு எடுத்த உடனை உறக்கம் நினைவுக்கு வந்தது. உள்ள சென்று படுக்கையில் சரிந்தன் நாளைக்கு உறுதியைத் தேடி எடுக்க வேணும்…
கண்விழித்த போது போனவிசயம் என்னப்பா விடியச் சொல்லுறன் எண்டியள், கேட்டபடி மனுசி அருகில் வந்தாள்.
எல்லாம் சொல்லுறன், உந்தச் சூட்கேசைத் தூக்கிக்கொண்டு வா! வாறன் வெளியிலை போட்டு, எழும்பி நடந்தன். எல்லாம் முடித்துக் கொண்டு உள்ளை வந்து மனுசி தந்த தேத்தண்ணியை குடிச்சன். பிள்ளைகள் அப்பதான் எழும்பி வெளியிலை போகுதுகள். அதுகளும் பள்ளிக்கு போக வேணும். தமக்கை தங்கையை அவசரப்படுத்தினாள்.
மனுசி எடுத்து வைச்ச சூட்கேசைத் திறந்து உறுதியைத் தேடினன்… உறுதி…
நான் ஒன்றும் தேடிக்களைக்கவில்லை. முதல் சுத்து தேடலிலேயே அது கிடைச்சுப் போட்டுது. உறுதி கிடைச்ச சந்தோசத்திலை எங்கடை உறுதி கிடக்கப்பா! எண்டபடி எழும்பினன். உறுதியோடை சில காகிதங்களும் கவர்களும் கீழே விழுந்தன… நான் அவற்றை கவனிக்கவில்லை. உறுதியை மட்டும் எடுத்தபடி மனுசியைக் கூப்பிட்டன்! வந்த மனுசி! கீழை பார்த்துட்டு இஞ்செருங்கோ! என்ன வேலை பாக்கிறியள் உங்கடை உறுதி கிடைச்ச இதிலை நீங்கள் எதை நிலத்திலை கொட்டியிருக்கிறியள். அவள் கூறியபடி குனிஞ்சு எடுத்தாள்… நான் அதை வாங்கிப் பாத்தன்! அட என்ர கடவுளே! நான் அந்த பிள்ளையின் படத்தையா நிலத்திலே சிந்தினேன்? அது இத்தனை இடப்பெயர்விலையும் தொலையாமல் இந்த உறுதியைப்போல கிடந்திட்டுதே. உதைப் பாருங்கப்பா வாறன் எண்டிட்டு மனுசி போட்டாள். அவளுக்குப் புள்ளையளைப் பள்ளிக்கு அனுப்புற அவசரம்.
என் நினைவுத் தேர் உருளத் தொடங்கிவிட்டது. அது அந்தப் புள்ளையைச் சுற்றி ஓடியது! இந்தியன் ஆமி இங்கை இருந்த காலத்திலே கே.கே.எஸ்ஸில் அமைதிப்படையின் மறு வாழ்வு முகாம் என்கிற மனித வதை முகாமிலை நான் சிறை இருந்த போது, கண்டனான். அந்தப் புள்ளையும் நான் இருந்த அறையிலதான் இருந்தது. உண்மையை சொல்லடா சொல்லடா புலியள் பற்றி சொல்லடா எண்டு எனக்குச் செய்த சித்திரவதையிலை என்ரை உடம்பு முழுவதும் காயம். அப்பாவியான என்ர உடம்பிலை அந்த அறுவாங்கள் அந்த மாதிரி காயப்படுத்தியிருந்தாங்கள். அந்தப்பிள்ளை என்னை ஒரு தாய்போல் பராமரித்தது. மற்றவர்கள் எனது புண்களை பார்த்து அருவருக்க அந்தப் புள்ளை என்ரை மேலிலை அளைஞ்சு அளைஞ்சு புண்களை துடைத்து மருந்து போட்டது. நான் அழுத போதெல்லாம் ஆறுதல் சொன்னது.
இந்தியன் ஆமி போகும் போதுதான் எங்களை விட்டான் எங்கள் சிநேகிதம் வெளியிலையும் தொடர்ந்தது. போராளியான அந்தப் பிள்ளை அந்த பிரதேசத்தின் அரசியல் பொறுப்பாளராக மக்களுக்கு சேவை செய்தது. அடிக்கடி என்ர வீட்டுக்கு வரும். அம்மா அம்மா எண்டு மனுசியோடு அன்பாய் பழகும். என்ரை பிள்ளைகள் இரண்டோடையும் அப்ப இழையவள் பிறக்கேல்லை. ஒரு அண்ணனைப் போல் அன்பு அக்கறையுடன் பழகும்… அந்தப் பிள்ளைக்கு முன்னாலை நிப்பது எண்டால் எனக்கு வலுபுளுகம்.
நானும் அந்தப்பிள்ளையள் ஒபிசுக்கு அடிக்கடி போவேன்… அது கடற்கரையிலை மெயின் றோட்டோடை இருந்தது. ஒரு முக்கியயமான சந்தியும் கிட்டடியில இருந்தது. கடலின் இரைச்சல் புள்ளையின்ரை ஒபிசிலை நிக்கேக்கை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும்.
அந்தப் பொங்கிடும் கடற்கரைக்கும் ஒரு பெருமை சரி அதை விடுவம். அந்தப் புள்ளை வேலை செய்கிறதையும் விசாரணை செய்கிறதையும் பார்க்க எனக்கு ஆசை ஆசையாய் வரும். அன்பெண்டா அன்பு! பண்பெண்டா பண்பு! கோபம் எண்டா கோபமில்லை, அங்கேயும் அன்புதான் அந்தப்புள்ளைக்கும் கோபம் வரும் எண்டதை ஒருநாள் நான் கண்டன். எனக்கெண்டால் அதிலை கோபம் தெரிஞ்சதைவிட அறிவுரைதான் தெரிஞ்சது…
உண்மையில புள்ளையின் கோபம் நியாயமானது! அது ஒரு சண்டைபட்டு மண்டைகள் உடைபட்ட கேஸ். கொஞ்சப் பேர் வைத்தியசாலையிலே படுகாயங்களோடையும் சாதாரண காயங்களோடையும் கொஞ்சப் பேர் இங்கை விசாரணையிலை… அவர்களைப் பார்த்த உடனை பிள்ளைக்குக் கோபம் வந்திட்டுது. அந்தக் கோபத்திற்கு காரணம் சரியாய் இருந்தது. இல்லாட்டி அந்தப் புள்ளை கோபிக்காது.
அப்ப அந்தக் கடலிலை ஒரு கட்டளைக் கப்பல் நிண்டது. கரையில நிண்டு எங்கடை புள்ளையள் தாக்க முடியாத தூரத்திலை அது நிண்டுகொண்டு ஆட்லறிச் செல்கள் எல்லா இடங்களுக்கும் வீசி வெடிக்க செய்தது. சந்தைகள் கூட முடியவில்லை, வீடுகளில் இருக்க முடியவில்லை. கடை கண்ணிகள் திறக்க முடியவில்லை. எல்லா இடங்களிலும் செல்கள் வீழ்ந்து வெடித்தன… ஒருநாள் ஒரு திருமண வீட்டில் திருமணம் நடந்துகொண்டிருக்கும் போது செல் வீழ்ந்து வெடித்தது… நல்லவேளை மணமக்கள் படுகாயங்களுடன் பின்னர் தப்பிவிட்டனர். தோழனுக்கு நிண்ட பொடியன் அந்த இடத்திலேயே…
அப்படியான காலத்திலைதான் இந்த அறுவான்களும் கோஸ்டிச் சண்டைசெய்து மண்டைகளை நொறுக்கிப் போட்டு வந்து நிக்கிறாங்கள்.
பின்னை புள்ளைக்கு கோபம் வருந்தானே… புள்ளை கேக்கிறதும் நியாயந்தானே…!
இஞ்சை பாருங்கோ ஒரு பொது எதிரி எங்கடை கடலிலை வந்து நிண்டு கொண்டு எங்கள் எல்லோருக்கும் அடித்துக் கொண்டு இருக்கிறான்… அவனுக்கு எங்களால ஒன்றுஞ் செய்ய முடியவில்லை… அவனுக்கு அடிக்க முடியேலே. நாங்கள் எங்களுக்கை எப்படி அடிபடி முடியும்? பகைவனைப் பந்தாட முடியாத நாங்கள், எங்களுக்கை நாங்கள் அடிபடி என்ன அருகதை இருக்கு புள்ளையின்ரை கேள்விக்கு ஒருதராலையும் பதில் சொல்ல முடியவில்லை. எல்லோரும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நிண்டினம். எனக்கு அந்தப் புள்ளை இன்னுங்கதைக்காதோ எண்டிருந்தது…
அது முடிந்து சில நாட்கள் சென்றுவிட்டன… ஒருநாள் அந்தப் புள்ளை என்ரை வீட்டை வந்து எங்கள் எல்லோரோடையும் நல்லாச் சிரிச்சுக்கதைச்சது. நான் அண்டைக்கு அந்தக் கோபத்தோடை கண்ட பிறகு இண்டைக்குத்தான் காணுறன்… அந்தப்புள்ளையா இந்தப்புள்ளை? கதைச்சு முடிச்சுப் போகும் போது ஒரு கவரைத் தந்து நாளைக்கு நான்வரும் சத்தம் கேட்டபிறகுதான் இதை உடைக்கவேணும் என்ன? நான்வரக்கு முந்தி உடைக்கவேகூடாது. எண்டு சத்தியம் வாங்கிக்கொண்டு போனது…
அடுத்தநாள் அதிகாலைக்கு முன் டொம் டொம்… என்ற பெரும் சத்தம் கேட்டது. அது கடல் பக்கமாகத்தான் கேட்டது. என்ன சத்தம்? ஏன்? ஒண்டுந் தெரியேல்லை!
எல்லோரும் எழும்பிவிட்டம்… எல்லா வீடுகளிலும் மனிதக்குரல்கள்…
கரும்புலி மில்லர் வெடித்த போது எழும்பின சத்தம் போலல்லவா இந்தச்சத்தமும்…
என்ன நடந்தது………….?
கிழக்கில் சூரியன் மெல்ல எட்டிப்பார்த்துத் தனது சிவப்பு நிறக்கோலத்தை மேகத்தில் காட்டினான். செய்தியும் லேசாய் வந்தது…
கடலிலை நிண்டு ஊரெல்லாம் தாக்கிய அந்தக் கப்பலிலை கரும்புலி பாய்ஞ்சிட்டுதாம்…! அதுக்கு மேலை ஒண்டும் அறியமுடியேல்லை…ம், அந்தப்புள்ளை வரும்தானே…, அப்ப எல்லாம் வடிவாகக் கேட்பம்…, கவரையும் உடைப்பம். புள்ளை வராமல் உடைக்கக்கூடாது. ஊரெல்லாம் ஒரே குதூகலம்.
சனங்கள் எல்லாம் வெளியிலை நிண்டார்கள். பதுங்கு குழிகளுக்குள்ள படுக்கை போட்டுக் கிடந்தவர்கள் கூட கனகாலத்திற்குப் பிறகு வெளிவெட்டையிலை நிண்டதைப்பாக்க மனதிற்கு சந்தோசமாக இருந்தது…
அந்தப்புள்ளை வரவில்லை, ஆனால் செய்தி வந்தது…! கப்பலிலை பாய்ஞ்ச மூண்டு கரும்புலிகளிலை அந்தப்புள்ளையும் ஒண்டாம்! செய்தி இடியாய் இறங்கியது….
நினைவு தெளிந்து மனதை ஒருநிலைப்படுத்திக் கொண்டு, அந்தப்புள்ளை விட்டுப்போன கவரை எடுத்து உடைச்சன்…….
கவருக்குள் அந்தப்புள்ளையின் போட்டோ… புள்ளை சிரிச்சபடி இருந்தது. உற்று உற்றுப் பாத்தேன். மனுசியும் புள்ளையளும் படத்தைப் புடுங்கப் பார்த்தார்கள் நான் விடவேயில்லை. படத்தின் பின் புறத்தில் ஏதோ எழுதப்பட்டிருக்க வேண்டும். படத்தைத் திருப்பினேன்…
என்னை மறந்து விடுங்கள்,
என் இலட்சியத்தை மறந்து விடாதீர்கள்!
இஞ்செருங்கோ! உறுதி உறுதியெண்டு அவசர அவசரமாத் தேடினியள் இப்ப அந்தத் தம்பியின்ரை படத்தோட அப்பிடியே நிக்கிறியள். நினைவுத் தொடரறுந்தது… என் கையில் இருந்த புள்ளையின் படத்தைத் திருப்பினேன்… சற்று மங்கினாலும் வாசிக்கக்கூடிய மாதிரி புள்ளை எழுதினது அப்படியே இருந்தது.
இருந்தது மட்டுமில்லை எனக்கும் ஒரு உண்மையை இடித்து உணர்த்தியது. அண்டைக்கு அந்த விசாரணையின் போது அந்தப் புள்ளை என்ன சொன்னது?
“எங்கடை எதிரி எங்கடை இடத்திலை வந்து நிண்டுகொண்டு எங்கள் எல்லோருக்கும் சண்டித்தனம் விடுறான். அவனுக்கு அடி போடாமல் எங்களுக்கை நாங்கள் அடிபடுறதுக்கு எங்களுக்கு என்ன அருகதை இருக்குது”
என் காதில் இப்போது ஆமிகள் போட்ட கோசங்களும் ஒலித்தன… இது எங்கள் பூமி இது எங்கள் வீதி இது எங்கள் தேசம் இதன் பேர் சிறிலங்கா… என்பிடரியில் யாரோ ஓங்கி அறைந்தது போல இருந்தது!
இரண்டு பரப்புக்காணிக்காக என் தம்பியோடை அடிபட இருந்தன்…!
எங்கள் வீதியை எங்கடை மண்ணை தங்கடை தங்கடையெண்டு கோசம்போட்டு எங்கடை பகுதிகளில் நிற்பவர்களை வெளியேற்ற உழைக்காமல்… இதென்ன உடன்பிறப்போடை வெக்கங்கெட்ட சண்டித்தனம்…?
மெல்ல நிமிர்ந்து சுவரில் மாட்டப்பட்டிருந்த எனது கப்டன் மகனின் படத்தைப் பார்த்தன். மீண்டும் அந்தப் புள்ளையின் படத்தைப் பார்த்தன்… என்மகனின் படத்திற்கு அருகிலை வலது பக்கமாக சற்று உயரமா இந்தப்புள்ளையின் படத்தையும் மாட்டினா என்ன?…… எப்படி என் எண்ணத்தை மனுசி அறிந்து கொண்டிருப்பாள்…?
ஓமப்பா உந்தத் தம்பியின்ரை படத்தையும் பெருப்பிச்சுப் பிறேம்போட்டு தம்பியின்ரை படத்திற்கு வலப்பக்கமா ஏத்தி வைப்பம்… ஓமப்பா… எண்டபடி புள்ளைகளும் பாடசாலைக்கு வெளிக்கிட்டு போகிறார்கள்.
சேட்டைப் போட்டேன் யாழ்ப்பாணம் போகவென்று மீதப்படுத்திவைத்திருந்த காசை எடுத்தேன். பலவீனமான எங்களின் பலம் வாய்ந்த ஆயுதங்களான கரும்புலிகளை எண்ணிக்கொண்டு அந்தப் புள்ளையின் போட்டோவுடன் கடைத் தெருவுக்கு நடந்தேன்.
கதிரவனும் தன் சம்மதத்தை ஒளி வெள்ளத்தால் தெரிவித்தான்…
எழுத்துருவாக்கம்: அரசண்ணா.
நன்றி: சூரியப் புதல்வர்கள் இதழ் (2003).
