சுதந்திர தீபங்கள்

“வாயள்ளித் தின்றதும் தமிழே- எங்கள் வாசலில் வந்ததும் தமிழே, நோயள்ளும் போதிலும் தமிழே- நாங்கள் நீறாகி எரிகின்ற போதிலும் தமிழே” எனத் தமிழ்த் தேசியத்தின் உயிரோவியங்களாக உலாவிய மாமனிதர்களே மாவீரர்கள்.
“அம்மாவும் அப்பாவும் எங்களுக்குண்டு – ஆனாலும் மண்மீது பெரும் பாசம் உண்டு, ஆறடி மண்கூட எமக்காக கேளோம், தமிழ்த்தாயின் துயர்தீர்க்க மகிழ்வோடு சாவோம்”. எனத் தம்மையே தமிழன் வாழ்வுக்காய் – எங்களின் எதிர்கால நன்மைக்காய் ஈகம் செய்து எம் உணர்வுகளில் எம் இரத்தக் கலங்களில் எம் சந்ததியின் சரித்திரத்தில் என்றென்றும் வாழும் மரணமில்லா மனிதர்கள் எங்கள் மாவீரர்கள்.
அமெரிக்காவின் சுதந்திர தீபச் சுடர் ஏந்திய சுதந்திரச்சிலையில்
“உங்களுடைய களைப்புக்களை, உங்களுடைய வறுமைகளை எல்லாம் என்னுள் வீசிவிட்டு, உங்கள் மனதுள் முடங்கிக் கிடக்கும் துன்பங்களை எல்லாம் தூர எறிந்துவிட்டு, நீங்கள் நிம்மதியாக மூச்சு விடுங்கள், இந்தச் செய்தியை வாழும் இடம் அற்றவர்களுக்கு, மனப்புயலில் சிக்குண்டவர்களுக்கு அறிவியுங்கள், நான் என்னுடைய விளக்கை – எரிபந்தத்தை பொற்காலத்தின் நுழைவாயில் கதவுகளில் எந்நாளும் ஏந்தி நிற்பேன்” எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
எங்கள் மாவீரர்கள் சிற்பி செதுக்கிய சிலைகள் அல்ல, தமிழீழச் சிந்தனை படைத்த மரணத்தை வென்று வாழும் சுதந்திரதீபங்கள், அவர்களும் எங்களுக்கு ஒரு செய்தி கூறுகின்றார்கள், “உங்களுடைய களைப்புக்களை, உங்களுடைய சோர்வுகளை எல்லாம் சுடரொளி தீர்த்துவைக்கும் – அவைகளை அதில் சுட்டெரித்துவிட்டு, உங்கள் மனதுள் முடங்கிக்கிடக்கும் துன்பங்களை எல்லாம் தூர வீசிவிட்டு நீங்கள் நெஞ்சுறுதியுடன் எங்கள் வழிநடந்து தமிழீழத் தாயகம் அமைப்பீர்கள், அமையுங்கள். அமைதியாக வாழ்வீர்கள். இந்தச் செய்தியை தமிழன் நாடற்று வாழும் இடமெல்லாம், மனப்புயலில் புலம் பெயர்ந்து சி;க்கித் தவிக்கும் இடமெல்லாம் அறிவியுங்கள். நாங்கள் எந்நாளும் எதனாலும் அணையா சுதந்திரத் தீபங்களாய் – தமிழர் சுதந்திரம் எனும் எரிபந்தமாய் உங்கள் பொற்காலத்தின் நுழைவாயில் கதவுகளில் வாழ்ந்து கொண்டிருப்போம்” என்பதே அந்தச் செய்தி.
“உரிமை உறங்கும் வேளையில் விழித்துக்கொண்ட வேங்கைகள், உணர்விழுந்த வேளையில் உயிரைத் தந்த வேங்கைகள், உணர்வு உறங்கிய பாய்களை செந்தணலில் வீசிச் செல்கையில் – அவர்கள் சிதை தீ சுதந்திர தீபமாய் இடம் வலமாக கழித்து எழுகையில் உறங்கும் தமிழன் எவனும் அந்த தீபத்தால் வெம்மை பெற்று எழுகிறான். புதிய கணிதம் பிறக்கிறது. ஒன்று நூறாகிறது, சந்திரிகாவுக்கு இந்தக் கணிதம் தெரியாததினால்தான் அழித்துவிடலாம் என எண்ணுகிறார். மாவீரர்கள் அழியவிடமாட்டார்கள், அவர்கள் தரும் உணர்வில் எங்கள் படையணி நகரும்.
அலைகடல் என எதிரி வரினும் – பல்லாயிரம் பகைவர் எனினும் வீறு கொண்டெழுந்து –வெறிகொள் எதிரி உடல்கள் சிதற – சிங்களப்பேய் ஆதிக்கம் கரைய –வீழ்ந்;த வீரர் வேட்கை சுமந்து விடுதலைத் தீ கனலை எடுத்து – ஆறாத்துயர்கள் அடுத்துவரினும், ஆறாய் எங்கள் குருதி ஓடினும், ஆயிரம் உடல்கள் தீயில்யாயினும், அடக்க வந்தவர் ஆதிக்கம் அழிக்க எங்கள் படையணி நகரும்.
இந்த உண்மையைச் சந்திரிகா உணர்ந்து தன் சிங்களச் சந்ததியினைத் தன் அதிகார வெறிக்காகக் கூலிப்பட்டாளமாக்கி கூட்டி அள்ளி சிதையில் போடும் சின்னத்தனத்தை இன்றேனும் நிறுத்தினால், சிங்களம் தப்பிப் பிழைக்கும், “இன்று போய் நாளை வா” என்று சொல்லி தர்மப் போர் செய்யும் சந்ததி நாம், சமாதானம் பேசித் திரைமறைவில் படுகுழி பறி;க்கும் நரியர் அல்ல நாம், ஆகையினர் தான் நேர்மையாக மாவீர சக்தியினை விளக்கி அந்த மாவீரச் சுதந்திரத் தீயில் உன் சிங்களச் சந்ததியைச் கட்டழித்துக் கொள்ளாதே எனத் தூதுரைக்கின்றோம்.
சிங்கள அரசே! மலைபோல் எதிரி திரண்டு வந்தாலும் மாவீரர் கனவை தமிழ்ச் சந்ததி மறக்காது வீரத்தின் விளைநிலங்கள் அவர்கள், ஈழத்தின் ஒளிர் வதனங்கள், தமிழ் வானத்தில் மிளிரும் விண்மீன்கள் எங்கள் மாவீரர்கள், பாசத்தை மறந்து பந்தத்தைத் துறந்து மண்ணில் புதைந்த எங்கள் மாவீரர்கள், தேகத்தை மறந்து, தேசத்தை நினைந்து எங்களில் வாழும் செல்வங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழ்ச் சமுதாயத்தின் ஆன்மா மாவீரர் திருக்கூட்டம்.
அங்கும் இங்குமாய்
குவிந்து புகைந்தபடியே
சாம்பல் மேடுகள்….
உடைபட்ட இடிபாடுகள்
உருக்குலைந்த பிணமலைகள்….
வீதிகள் எங்கணும்
அந்தியக் காலடிகள்….
இவற்றிற்கிடையே,
உருமறைப்புக்கள் மத்தியில்
குறிபார்த்தபடி வேங்கைகள்….
பீரங்கிகள், கவசவாகனங்கள்
எல்லாமே பொடிப் பொடியாக….
ஆயுத பலமும், ஆட் பலமும்
மண்டியிட்டபடி, பின்வாங்க….
“வீரமரணங்கள்” பெற்றுத் தந்த
விருதுகளின் பெறுமதியே
தமிழின “விடுதலை”
வானதி எழுதிய இக்கவிதை மாவீரர் சக்தியினைத் தெளிவாக்கும் எழுத்துக் பதிவுகள், வானதி இன்னுமொரு முக்கியமான செய்தியினை எமக்கு தருகின்றார்.
“மீட்கப்பட்ட – எம்மண்ணில்
எங்கள்
கல்லறைகள்
கட்டப்பட்டால்
அவை உங்கள் கண்ணீர் அஞ்சலிக்காகவோ
அன்றேல் மறுவாழ்விற்காகவோயல்ல, உங்கள் மனஉறுதிக்கு
மகுடம் சூட்ட வேண்டும்
என்பதற்காகவே”
இப்பொழுது நம் மாவீரர் எதனைக் கேட்கிறார்கள் என்பதனைத் தெளிவாக விளங்கலாம். ஆகவே “இன்னுமா விழிகளில் ஈரம் – இது எழுந்து போராடும் நேரம்” “தேசங்கள் எங்கும் விடுதலை தேடி போராடும் நேரம் இது. – நம் தாகங்கள் தீரும் தாயகம் சேரும் தலைவனின் காலம் இது. “வாழ்வினில் சாவரும் என்றுமே அஞ்சி வழியினில் நாங்கள் தளர்வோமா – தமிழ் தாயினை மாற்றான் அழித்திடும் வேளையில் தமிழர் நாம் சும்மா இருப்போமா”.
எனவே நாம் எங்கு இருந்தாலும் இயன்றது செய்வோம். விடுதலைப்புலிகளின் கைப்பலம் ஆவோம். கருவிகள் கொடுப்போம், உதவிகள் கொடுப்போம், தாயகம் புனர்வாழ்வுற நிதியினை அளிப்போம். மதியினை அளிப்போம்.
வானதி கூறுவதுபோல்
“அவன்
சுட்டுவிரல்
அசைப்பில்
எத்தனை சக்தி
என்பது நீ அறிந்ததே
எத்தனை அழுத்தங்களின்
பின்னாலும்
எழுந்து நிற்கிறோம் என்றால்
அது அவன்
கட்டளையின் சிறப்பு
பிறக்கப்போகும் தமிழீழத்தை
நிச்சயம் நீ காண்பாய்
எனவே அடுத்த சந்ததிக்குக் கூறு
தமிழீழத்தில்
தன்மானம் விலைபோகக்கூடாது
என அடித்துக்கூறு”
ஆம் இது தான் மாவீரர் வேதம், அது நாம் பின்பற்றும் பாதை, வெற்றி நிச்சயம், மாவீரர் கனவு நனவாகும் காலம் வெகுதூரமில்லை.
நன்றி: மாவீரர் சிறப்பிதழ் (27.11.1995).
