நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி நினைவு வணக்க நாள்

நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி நினைவு வணக்க நாள் இன்றாகும்.
12.02.2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 11ம் ஆண்டு ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக தமிழீழ விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை (அன்றைய தினம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா அரசாங்கம் தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கையில் அது மேற்கொண்டு வரும் கருத்து ஆக்கிரமிப்பை உடைக்கும் தமிழ்த் தேசிய ஊடகப் பணியில் தாயகத்தில் இருந்து திறம்பட செயற்பட்டவர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி.
தாயகத்தின் ஊடகங்களில் தனது தமிழ்த் தேசிய ஊடகப்பணியை தொடக்கிய பு.சத்தியமூர்த்தி புலம்பெயர் தளத்தில் வாழ்ந்து வரும் மக்களிடம் தமிழ்த் தேசியக் கருத்தை வளர்த்தெடுக்கும் ஊடகப்பணியை தாயகத்தில் இருந்து செய்து வந்தார். புலம்பெயர் தளத்தில் விடுதலைப் போராட்டம் பற்றியும் தமிழ்த் தேசியக் கருத்தையும் தனது ஊடகப்பணி ஊடாக பு.சத்தியமூர்த்தி செய்து வந்தார்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தனது ஊடகப்பணியை நெருக்கடிகள் இடம்பெயர்வுகள் அவலங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அவரின் உயிரை சிங்களப் பேரினவாதம் பறித்துள்ளது.தமிழ்த் தேசிய ஊடகப்பணியை திறம்படச் செய்து வந்த பு.சத்தியமூர்த்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரியிடம் விலைபோகாத விதைகளையே நாங்கள் விதைக்கின்றோம்.
ஒரு பெரும் ஊடகச் சமராடியை நாம் இழந்து நிற்கிறோம். எம்மினத்தின் அவலத்தை ‘ஐ.பி.சி. வானொலி’ ஊடக, உலகம் முழுவதும் தெரியப்படுத்திய அந்த அற்புதமான மனிதநேய ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் பிரிவு எமையெல்லாம் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் ‘ஈழமுரசு’ வாரப்பத்திரிகையில் வாராந்த ஆய்வுக் கட்டுரைகளும், ‘தமிழீழத் தேசியத் தொலைக் காட்சி’ யில் தினமும் நடாத்திய நாளிதழ் நேரம் நிகழ்ச்சியும், நிலவரத்தில் கு.வீராவுடன் நிகழ்த்திய கலந்துரையாடல்களும் எமது நினைவை விட்டு நீங்காத விடயங்கள் எம் தேசத்தின் ஊடகக் குரல்கள் பலதடவை நசுககப்படடன. நிமலராஜன் முதல் தராகி சிவராம் வரையான இழப்புக்களின் வரிசையில் சத்தியமூர்த்தி என்கிற அறிய மனிதனும் இணைந்துவிட்டார்.
சிங்களத்தின் பேரினவாத எறிகணை வீச்சினால், சுதந்திரபுரத்தில் கொல்லப்பட்ட சுதந்திர சிந்தனையாளன் சத்தியமூர்த்தியின் இழப்பினை. தமிழீழத் தெரியத்தின் பேரிழப்பாகக் கருத வேண்டும். ஒரே வழித் தடத்தில் நடந்த சகபயணி சத்தியமூர்த்தியின் இழப்பினை ஈடுசெய்வது மிகக் கடினம்.
உள்வாங்கிக் கொண்ட சமூக அவலங்களை, எளிய தமிழில், மிகச் சுருக்கமாகவும் அதேவேளை ஆழமாகவும் வெளிப்படுத்தும் பேராற்றல் சத்தியமூர்த்திக்கு உண்டு. குறிப்பாக பேரினவாத தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்படும் போது, அந்த அவலத்தை வார்த்தைகளில் விபரிக்கையில் மீர்த்தியின் மானுட நேசிப்பும், வதைக்கெதிரான போர்க் குணமும் மிகத் தெளிவாக வெளிப்படும்.
‘மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்’ என்கிற மானுடத் தத்துவத்தையே அவர் அடிக்கடி வலியுறுத்துவார். அவலத்தை கண்டு வெகுண்டெழாத மனிதன், உயிர் வாழும் தத்துவத்தை இழக்கிறான். என்கிற உயர் கருத்தினை சத்தியமூர்த்தி கொண்டிருப்பதே. என்னை அவர்பால் ஈர்த்த முதன்மைக் காரணியாகக் கருதுகிறேன்.
மண் மீதான தீராத காதலும், தலைவன் மீது கொண்ட ஆழமான பற்றும், மக்கள் சக்தி மீது கொண்டே நேசிப்புமே, சத்திய மூர்த்தியின் ஊடகப் பணிக்கு உறுதுணையாகவும், உந்து சக்தியாகவும் திகழ்கிறது.
இன்று ஓர் கவிதை படித்தேன்.
‘அப்பாவித் தமிழர்கள் மீது
பேரினவாத இராணுவம் நடத்திய கொலை வெறித்
தாக்குதலில்
50 பேர் பலியானார்கள்
500 பேர் பலியானார்கள்.’
உரம் ஏறிய வன்னி மண்ணில் விதைக்கும் இடமெல்லாம்
முளைக்கும்
தாயக விடுதலையை நெஞ்சில் சுமந்த உன் பணியை.
நாம் தொடர்ந்து சுமப்போம்.
எறிகணைக்கு எழுத்தாளன் என்ன? ஏதிலிகள் என்ன?
எல்லாமே ஒன்றுதான்.
உன் நினைவுகளை எம்மண்ணில் விதைக்கின்றோம்.
எதிரியிடம் விலைபோகாத விதைகளையே
நாம் விதைக்கிறோம்.
அது வளரும்….. விருட்சமாகும்….
அதன் சுவாசத்தில் நீ
நித்தியமாய் நிலைபெற்று நிற்பாய் சத்தியமூர்த்தி.
மூலம்: இதயச்சந்திரன்.
நன்றி – ஈழமுரசு.
நீளும் நினைவுகளாகி…
எமது தாயக விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பங்களிப்புகளைச் செய்து உயிர்நீத்த மாமனிதர்களுக்கும், நாட்டுப்பற்றாளர்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்திக்கொள்கின்றோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”


