பெருநெருப்பாய் நிமிர்வீர்

பெருநெருப்பாய் நிமிர்வீர்!
என்பிள்ளையானாலும் எவர்பிள்ளையானாலும்
எனக்கொன்றே.
கண்களுக்குள்ளே நான் பேதம் காணவில்லை
இடதும், வலதும் ஒன்றே.
முந்தையர்பூமி மூச்சுத்திணறுகின்றது.
வந்தெழுவீர் என்பிள்ளைகாள்!
பூட்டனும், பேரனும், தந்தையும் விட்ட தவறுக்கு
பாரச்சிலுமை சுமக்கவேண்டிய பலனுமக்கு.
நாளை உம்பிள்ளை
குற்றப்பட்டியலில் உம்பெயரைக் குறிப்பிடாது.
அதனால் எழுவீர்!
புலியாய் நிமிர்வீர்!
பெருமையுள்ள எம்வயலிலெல்லாம்…
உரிமையற்ற ஒருவன் உழுகின்றான்.
எம்மூரின் ஒவ்வொரு பிடிமண்ணும்
இரும்புப்பிடிக்குள் இறுகியுள்ளது.
காலைக்கும், மாலைக்கும் கூட கைவிலங்கு..
பேயிருக்கும் வீடாய்.
பிணக்காடாய் போனதெம் நிலம்.
ஓலமிட்டுத் தலையிலடித்துக் கத்துகிறது காற்று.
யாருமற்ற சூனியத்தில் பாலைச்சரிக்கிறது நிலா.
மாரிமழையினால் வேர்பிடித்த
முற்றத்துச் செவ்வரத்தை
மொட்டுக்குள் சிலிப்பி, முகம் மலர்த்தி
பறித்துத் தலைசொருகுவார் எவருமின்றி,
வழிபார்த்து, விழிபனித்து, துளிசிந்தும்
பொறுத்தருளும் பொழுதல்லப் பிள்ளைகாள்.
அதனால் எழுவீர்!
புலியாய் நிமிர்வீர்!
யாரை அனுபவியென ஊர்கொடுத்து வந்தோம்
காரையும், சூரையும் படரும்
கலட்டுத்தரையெனினும்
எமக்கது தாயின் வயிறு.
கிட்டியும், கிளித்தட்டும்,
கீரிமலைக்குளியலுமாய்
பொட்டிட்டிருந்த புனிதம் அழிந்தது.
மொட்டை மரமானது எம்வாழ்வு.
நகரும் ஒவ்வொரு நொடியும்
பகைவன் பலம் பெறுவான்
பெரும்படையாகுவீர் புதல்வீர்!
நிகரற்ற பெருநெருப்பாய் நிமிர்வீர்!
பிரபாகரன் காலம் வரலாறாகட்டும்.
புயல் புகுந்த மாதியாய்…
பகைதுரத்த ஊர்புகுவோம்.
சிவந்த சூரியனெழும் ஒரு விடிகாலைப்
பொழுதில்
பகையெரிந்து போனது ஊருக்கு
வருகவென
உள்ளேயிருந்து உறவை அழைப்போம்.
சாணம் மெழுகிய திண்ணைத்தரையில்
உண்டமயக்கத்தில் உறங்கிக் களிப்போம்.
அதனால் எழுவீர்!
புலியாய் நிமிர்வீர்!
கவியாக்கம்: கவிஞர் புதுவை இரத்தினதுரை.
