‘ஓப்பறேசன் தவளை’யில் கடற்புலிகள்

‘ஓப்பறேசன் தவளை’யில் கடற்புலிகள்.
சிங்களக் கடற்படையைச் செயலிக்கச் செய்வதன் மூலம்தான் பெரு வெற்றியைப் பெறமுடியும் என்பது, ‘ஓப்பறேசன் தவளை’ தாக்குதல் திட்டத்தின் பிரதான அம்சமாகும்.
ஈரூடகத் தாக்குதல் திட்டத்தைக்கொண்ட பூநகரி கூட்டுத்தளம் மீதான ‘தவளை’ இராணுவ நடவடிக்கையில் கடற்புலிகள் ஆற்றிய பங்கும் – பணியும் மிக முக்கியமானதாக இருந்தது.
நாகதேவன்துறையில் அமைக்கப்பட்டிருந்த சிங்களக் கடற்படையின் படகுத்துறையைக் கைப்பற்றுவதுடன், இந்த சண்டை முடியும்வரை பூநகரி கூட்டுத்தளத்திற்கு கடல்மூலம் உதவிகள் கிடைக்கவிடாது தடுப்பதும் கடற்புலிகளின் விசேட பணியாக இருந்தது. அதேவேளை, காயம்பட்ட போராளிகள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்படுவதற்கும், சண்டையிடும் போராளிகளுக்கான உணவு தொடக்கம் சகல விநியோகங்களும் நடந்த, குடாக் கடலுக்குமான கடற்போக்குவரத்திற்கும் கடற்புலிகளை பாதுகாப்பைக் கொடுத்து அப்பணியைத் திறம்படச்செய்தனர்.
11.11.1993 அன்று அதிகாலை தாக்குதல் தொடங்கியபின் நாகதேவன்துறை படகுத் தளத்தினுள் ஊடுருவிப் பாய்ந்த கடற்கரும்புலி மேஜர் கணேஸ், வெடிமருந்து நிரப்பப்பட்ட தனது படகை எதிரியின் நிலைமீது மோதி கடற்படையினரை நிலைகுலைய வைத்தான். அதைத்தொடர்ந்து கடல்வழியாக கடற்புலிவீரர்கள் தொடுத்த அதிவேகத் தாக்குதல்களால், எதிரியின் ஜந்து நீருந்து விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டன. நாகதேவன்துறை புலிகளின் கையில் வீழ்ந்தது.

அன்றைய இரவு விடிந்ததும் மன்னார்க் கடலிலுள்ள பாலைதீவுப் பக்கமிருந்து, கல்முனை – பள்ளிக்குடா கரையோரமாகத் தரையிறங்க எதிரி முயன்றான். இத் தரையிறங்க முயற்சியில் எதிரியின் இரண்டு தரையிறக்கும் கலங்கள் (Landing Craft) ஈடுபட்டுக்கொண்டிருந்தன. (ஒரு தரையிறக்கும் கலம் ஒரே தடவையில் 600 சிப்பாய்களை அவர்களது ஆயுதங்களுடன் ஏற்றி ஒரு அடி ஆழத் தண்ணீர்வரை வந்து தரையிறக்க வல்லது).
இத்தரையிறக்க நடவடிக்கைக்கு உதவிபுரிய ‘வீரயா’ – ‘சூரயா’ வகையைச் சேர்ந்த இரண்டு மோட்டார் பீரங்கிப் படகுகளும், அதேவேளை நான்கு ‘டோறா’ சண்டைப் படகுகளும் கரையை நோக்கியும், கடலில் நின்ற கடற்புலிகளின் படகுகளை நோக்கியும் குண்டுமழை பொழிந்துகொண்டிருந்தன. இதேவேளை வானில் வட்டமிட்டபடி உலங்குவானூர்த்திகளும், குண்டுவீச்சு விமானங்களும் கடற்புலிகளின் படகுகள் மீது தாக்குதல்களை நடாத்தி, சிங்களப்படையின் தரையிறக்கத்திற்கு உதவ முயற்சித்துக்கொண்டிருந்தன.
ஆனாலும், பூநகரித் தளத்தைவிட்டு புலிகள் வெளியேறும்வரை (13ம் திகதி மாலைவரை) வானிலிருந்தும் கடலிலிருந்தும் எதிரி பொழிந்த குண்டுத் தாக்குதல்களுக்கு ஈடுகொடுத்தபடி துணிச்சலுடன் – சாதுரியத்துடனும் போரிட்ட கடற்புலிகள், எதிரியின் தரையிறக்கத்தைத் தடுத்து நிறுத்தி, தாக்குதல் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்தனர்.
சிங்களக் கடற்படையைச் செயலிழக்கச் செய்வதன்மூலம்தான் இம்முகாம் தாக்குதலின் முழுப்பலனையும் பெறமுடியும் என்பது, புலிகள் வகுத்த தாக்குதற் திட்டத்தின் ஒரு பிரதான அம்சமாகும். ஆதைக் கடற்புலிகள் செவ்வனே செய்து ஒரு சாதனை படைத்துவிட்டனர்.
பூநகரி கூட்டுப்படைத்தளமானது தனது சொந்தப் பாதுகாப்பிற்கு சிங்களக் கடற்படையையே பெரிதும் நம்பியிருந்தது. யாழ். நீரேரியை ஒரு புறத்திலும் மன்னார்க் கடலுடன் தொடர்புடைய நிலத்தை மறு பகுதியிலும் கொண்டு, இந்தக் கூட்டுத்தளம் அமைந்திருந்தது. கடற்பலத்தைப் பொறுத்தளவில் சிங்களப் படையானது ஒரு அதீத நம்பிக்கையுடனேயே இருந்தது.
கடல்வழி மூலமான ஒரு கெரில்லாத் தாக்குதலுக்குரிய சக்தியைக் கடற்புலிகள் கொண்டிருந்தாலும், பட்டப்பகலிலும் தொடர்ந்து நடைபெறும் ஒரு கடற்சண்டைக்குரிய திறனை கடற்புலிகள் கொண்டிருக்கவில்லை என்றே, படைத்துறையின் உயர்பீடம் கருதியது. இதனால் பூநகரி முகாம் புலிகளால் தாக்கப்பட்டாலும் கடல்மூலமான உதவிகளைப் பெற்றுத் தாக்குதலை முறியடிக்கலாம் என்றே, படைத்துறை உயர்பீடம் நம்பியிருந்தது.
ஆனால் பூநகரி கூட்டுத்தளம்மீது தொடர்ந்து தாக்குதல் நடந்த மூன்று நாட்களும், கடற்புலி வீரர்கள் பூநகரியைச் சுற்றியுள்ள கடலை முழுமையான கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். விமானப் படையின் உதவியுடன் சிங்களக் கடற்படை கடலிலே நடாத்திய மரபுவழி யுத்தத்தை எதிர்கொண்ட கடற்புலிகள் திறமையாகப் போரிட்டு, எதிரியே ஆச்சரியப்படும் அளவுக்கு சாதனை புரிந்துள்ளனர்.
கடற்கெரில்லாக்கள் என்ற நிலையிலிருந்து, தொடர்ச்சியாக நடைபெறும் கடற்சண்டைகளுக்கும் கடற்புலிகள் தயாராகிவிட்டார்கள் என்ற உண்மையை, ‘தவளை’ இராணுவ நடவடிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
ஞானிமடம் கடற்படைத் தளம் மீதான தாக்குதலிலும் அடுத்து நடந்த மூன்று நாள் கடற்சண்டைகளின் போதும், கடற்புலிகளின் மகளிர் படைத் துணைத்தளபதி லெப். கேணல் பாமா (கோதை) கடற்கரும்புலிகள் மேஜர் கணேஸ், மேஜர் கோபி உட்பட 30 கடற்புலிவீரர்கள் களப்பலியாகினர்.
‘தவளை’ இராணுவ நடவடிக்கையில் கடற்புலிகள் வெளிப்படுத்திய போர்த்திறன் ஒருபுறமிருக்க, இந்த தாக்குதலில் கடற்புலிகள் கைப்பற்றிய ஜந்து நீருந்து விசைப்படகுகளும் கடற்புலிகளின் பலத்தைப் பெருமளவு அதிகரிக்கச் செய்துவிட்டன.
இதுவரை காலமும் சாதாரண படகுகளுடன் ஆழங் குறைந்த கிளாலிக் கடல்நீரேரிப் பகுதியில் மேலாதிக்கம் செலுத்திய கடற்புலிகள். இனி நீருந்து விசைப்படகுகளுடன் கிளாலி நீரேரியை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் அதேவேளை, பெருங்கடலிலும் சிங்களக் கடற்படைக்கு பெரிய சவாலாக அமைவார்கள் என்று நம்பலாம்.
“பூநகரியில்” கடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட படகில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்…




தனித்த நிலையில் இருந்தாலும் கடற்கரையோரம் அமைக்கப்பட்ட இராணுவத் தளங்கள் பாதுகாப்பானவை என்றே, இதுவரைகாலமும் படைத்துறைத் தலைமை எண்ணியிருந்தது. ‘தவளை’ இராணுவ நடவடிக்கையுடன் அந்த எண்ணம் தகர்ந்துவிட்டது. மன்னார் மாவட்டத்திலிருந்த சிலாவத்துறை முகாம் அண்மையில் அகற்றப்பட்டமை, இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
‘தவளை’ இராணுவ நடவடிக்கையின் இராணுவ பரிமாணத்தையும், நாகதேவன்துறையில் கடற்புலிகள் கைப்பற்றிய நீருந்து விசைப்படகுகளையும் அவற்றின் சக்தியையும் எடைபோடும் ஒரு இராணுவ வல்லுனன், ‘குடாநாடு மீதான இராணுவ முற்றுகை என்பது இனிமேல் சாத்தியமற்றதொன்று’ என்ற முடிவுக்கே வருவான்.
இது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு வளர்ச்சிக்கட்டத்தை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகின்றது.
நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (தை 1994).
