கருவேங்கைகள் பயணம்

வழமைக்கு மாறான செயற்பாடுகள், என்றும் இல்லாத முகமாற்றங்கள், நின்று கதைப்பதற்கோ, சிரிப்பதற்கோ நேரமில்லாது அவசரமாய் கழிந்தது பொழுது. எல்லாம் அன்று மாற்றமானதாகவே இருந்தது. ஒவ்வொரு கரும்புலி வீரரும் தன்னையும் தான் கொண்டு செல்ல வேண்டிய ஆயுத வெடிபொருட்களையும் இறுதி நேரம் தயார்படுத்துவதில் மிக மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவர்களிற்குள் ஏதோ ஒரு உணர்வு திரும்பத் திரும்ப அவர்களை நிறைவுபடுத்திக்கொண்டிருந்தது. அவர்களிற்காக வந்த சாப்பாட்டுப் பொட்டலங்களைக் கூட கவனிக்காது தாங்கள் கொண்டு போகும் பொருட்களிற்கு நீர்க்காப்பு போடுவதிலும், அவற்றை சரியா என்று பரீட்சிப்பதிலும் அக்கறை கொண்டிருந்தார்கள். 24.03.2000 அன்றைய பகற்பொழுது இப்படித்தான் அவர்களிற்குக் கழிந்தது.
பொழுது மங்கத் தொடங்கிய வேளை அவர்கள் தங்களிற்கான பொருட்களோடு புறப்படத் தயாரானார்கள். பாரம் சற்று அதிகமானதாய் இருந்தது. ஒவ்வொருவரும் தங்களிற்கு வழங்கப்பட்ட வெடிபொருட்களை கொண்டு சென்றனர். எத்தனை இரவுகள் இப்படியான எதிர்பார்ப்புக்களுடனும், ஆவல்களுடனும் அவர்கள் வேவுக்காக திரிந்திருப்பார்கள். அவர்களின் அந்தத் தேடல் முயற்சியிலே எத்தனை தோழர்களை அவர்கள் இழக்க நேர்ந்திருக்கிறது. எத்தனை நாட்கள் ஒருதுளி தண்ணீர் கூட இல்லாமல் அவர்கள் அதற்காகவே அலைந்திருப்பார்கள். எல்லாம் அவர்களின் நினைவில் நிழலாடுவதாய் இருந்தது.
“எங்கட கையால ‘சாஜ்’ கட்டி ‘ஆட்டி’ உடைக்கோணும், எத்தனையோ தரம் சந்தர்ப்பம் வந்து நழுவிற்றுது. இனியொருக்காவரும் அந்த சந்தர்ப்பத்தில் ‘ஆட்டி’யை உடைச்சு அண்ணை நினைக்கிறத செய்து காட்ட வேணும.;” இப்படி ஒவ்வொருவரின் ஆழமான உணர்வும் காற்று அவர்களோடு பேசுவதாய் உணர வைத்தது. அவர்கள் அத்தனை பாரங்களோடும் ஒவ்வொருவரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தார்கள். “நாங்கள் போறம் இந்த முறை எப்படியும் நினைச்சத செய்து முடிப்பம் இல்லாட்டி……” சிரித்தார்கள், கைகுலுக்கினார்கள், கட்டித்தழுவினார்கள். “ஒவ்வொருவற்ற காதுக்கும் வெற்றிச் சேதிவரும்” என்று மூச்சைப் பேச்சாக்கினார்கள்.
அவர்களின் பார்வை வானத்தையோ அல்லது பூமியையோ நோக்கியபடி உறுதியாய் பிரகாசித்துக்கொண்டிருந்தது. அவர்கள் ஒவ்வொருவரது கால்களும் இலக்கை நோக்கி நடப்பதற்காக குறுகுறுத்தன. வெற்றிலைக்கேணிக் கடற்கரையிலிருந்து அவர்களின் பயணம் ஆரம்பமானது. சிறியபடகுகள் அலைகளில் சத்தமின்றி இருளோடு இரளாக புறப்பட்டன.
வானவிளிம்பு, உயர்ந்த பெருத்த தென்னந் தோப்புக்களையும், அடர்ந்த மரங்களையும், வெளிகளையும் பிரித்துக் காட்டியது. நட்சத்திரங்களின் மங்கிய வெளிச்சம் வானத்திலும் ஓலைக்குடிசைகள் இருப்பது போலவும், அந்தக் குடிசைகளின் துவாரங்களினாலேயே இந்த ஒளி கசிவதாகவும் தெரிந்தது. படகு மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருந்தாலும் அவர்களின் இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. திட்டம், நகர்வு, தாக்குதல் என்று ஒவ்வொன்றையும் சுரம்மாறாது நினைவுகள் அசைபோட்டன.
தாழையடி இராணுவ தளத்திலிருந்து கடற்கரையை நோக்கி வெளிச்சங்கள் தெரிந்தது. அந்த வெளிச்சங்கள் அவனது சின்ன ‘ரோச்’ லைட்டுகளில் இருந்து தான் பிரிந்திருக்கும். அவன் ரோந்திற்காகவோ அல்லது வேறு பாதுகாப்பு எற்பாடு ஒன்றிற்காகவோ நகர்ந்துகொண்டிருக்கிறான் அல்லது பயத்தில் இருளை தனக்குக் கிட்டே வரவிடாது விரட்டுவதற்காக இவ்வாறு செய்கிறான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு சிரித்தார்கள்.
படகிற்குள் மௌனம் குடிகொண்டிருந்தது. காற்று ஈரத்தை சுமந்து வீசிக்கொண்டிருந்தது. சத்தமில்லாது படகு கரையைத் தொடும் தூரத்திற்குள் வந்துவிட்டது. படகின் இரண்டு கரைகளாலும் இரு கறுப்பு உருவங்கள் தண்ணீருக்குள் இறங்கியவர்கள் துப்பாக்கியை மூடியிருந்த நீர்க்காப்பை அகற்றி சுடுவதற்குத் தயாரானார்கள். எந்த நேரமும் தாக்குதல் ஆரம்பிக்கலாம், ஏனென்றால் அது எதிரியின் கோட்டைகள் நிறைந்த இடம். செம்பியன் பற்றுக்கும் மாமூலைக்கும் இடையிலான பிரதேசத்தில் தான் இது நிகழ்ந்து கொண்டிருந்தது.
இறங்கிய இருவரும் துப்பாக்கியை சுடுவதற்கு ஏற்றவாறு பிடித்துக்கொண்டு சற்றுக்குனிந்து சத்தமில்லாது இரண்டு முனைகளிலும் பிரிந்து ஓடியது வானவிளிம்பில் தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் நிலையெடுத்த பின், எந்தவிதமான ஆபத்தும் தென்படவில்லையென்பதற்கு மணிக்கூட்டு வெளிச்சத்தில் சமிக்ஞை செய்தார்கள். அதன் பின்னே படகு கரையடைந்தது. அந்தப் படகிலிருந்து மற்றப் படகிற்கு சமிக்ஞை காட்டப்பட்டது. அதுவும் விரைந்துவந்து கரையைத் தொட்டது. ஒவ்வொருவரும் நிதானமாக எதற்கும் தயாராக படகுகளிலிருந்து குதித்தார்கள்.
அவர்களின் பார்வை இப்போது முன்னோக்கியதாக கூர்மையடைந்திருந்தது. படகில் ஏற்றி வந்தவர்களிற்கும், இதுவரை ஒன்றாகவே நின்று இறுதிக்கணமும் பிரியமனமின்றி தவித்து நிற்கும் தோழர்களிற்காகவும் ஒருமுறை திரும்பிப் புன்னகைத்தார்கள். அதற்குமேல் அவர்களிற்கு அவகாசம் கிடைக்கவில்லை. நகருவதற்கான வியூகங்கள் அமைத்து முன்னேறத் தொடங்கினார்கள். கால் புதைந்து புதைந்து எழும் அந்த மணல், கடற்கரை ஓரமாகவே வளைந்து நெளிந்து போகும் பாதை, மணல் மேடுகளின் நடுவில் வளர்ந்திருக்கும் கண்டல்காடுகள் அவற்றினூடாக அவர்களின் கால்கள் முன்னேறின.
அடர்ந்த கண்டல் காடு நிறைந்த ஓர் இடத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். அகற்றப்படாதிருந்த நீர்க்காப்புக்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. அங்கே தடயங்களாக இருந்த பொருட்களை மணலில் குழி தோண்டிப் புதைத்து விட்டு மிக அவதானத்துடன் எழுந்து நடந்தார்கள். அவர்கள் போகும் திசையில் தொலை தூரத்தில் ஆட்லறிகள் இயங்கிய சத்தம்; அதைத் தொடர்ந்து வானத்தையும் பூமியையும் அதிரவைக்கும் சத்தம் எல்லாம் தெளிவாகக் கேட்டது. எல்லோருடைய மனதிலும் நம்பிக்கை; எங்களுடைய இலக்ககள் இருக்கின்றன. இனி எப்படியும் அவை அழிக்கப்பட்டு விடும் என்று.
நடந்து கொண்டிருந்தபடியே தனது தோளை வெட்டிய வெடி மருந்துப் பொதிகளைச் சீர்செய்து விட்டு “சத்தம் போடுங்கோ இஞ்ச உங்களுக்கான சாமான்களோட நான் வாறனென்டு உங்களுக்கத் தெரியாது தானே” என்று எல்லோருக்கும் கேட்கும் படியாக கூறிவிட்டுச் சிரித்தான் தனுசன். அவனின் சுபாவமே தனித்துவமானது. உச்சி பிரித்து மேவி வாரப்பட்டிருக்கும் தலைமயிரும் கறுப்பும் சாம்பலும் கலந்த நிறத்தில் இருக்கும் அவனது கண்களும் கதைக்கும் போதும் சிரிக்கும் போதும் கண்ணை மூடிமூடித் திறக்கின்ற அசைவுகளும், உயர்ந்த உடற்கட்டான அவனுடைய உருவமும் அவனை ஒருமுறை பார்த்தவர்களின் மனதைக்கூட பற்றிக் கொள்ளும். அவனது வார்த்தையிலிருந்த உறுதியும் நகைச்சுவையும் எல்லோரையும் ஒருகணம் சிரிக்க வைத்தது.
தனுசனது கவசமே அலட்டிக் கொள்ளாது அதிகமான செயற்பாடுகள் மூலமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சுபாவம் தான். இலக்கிற்காக அவன் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து பயிற்சி எடுத்தது, அதற்காக நகர்வது அனைத்திலுமே அவனின் செயற்பாடுகளில் தன்னை இனங்காட்டிக் கொண்டான். எல்லாப் போராளிகளுடனும் அதிகமாக சிரித்துக் கதைத்தான். அடிக்கடி “இந்த ஆட்லறிகளை நிச்சயமா உடைப்பன்” என்று உறுதியாய்க் கூறிப் புன்னகைத்தான். இன்று இலக்கிற்கும் அவனிற்குமான தூரங்களை காலடிகள் குறைத்துக் கொண்டிருந்தன. அவன் உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் இருந்தான். அவனிற்கான கொஞ்சப் பொதிகள் கொடுத்த போதும் அவன் மேலதிகமாகவும் புறப்படும் போது தனக்கு வழங்கிய வெடி மருந்துப் பொதிகள் போதாது என்று “இன்னும் கொஞ்சம் ‘சாஜ்’ தாங்கோ நான் கொண்டு போவன், தேவைப்படும்” என்று வாங்கி அதையும் சேர்த்து சுமந்து கொண்டு நடந்தான். ஒவ்வொருவரது நெஞ்சிற்குள்ளும் தலைவர் கதைத்தது. தளபதிகள் எடுத்துரைத்தது. போராளிகள் விடைகொடுத்தது என்று, ஒவ்வொன்றும் வந்து போனது.
அணிகள் நகர்ந்து அகிலன் வெட்டக்கரையை ( சிறுநீரேரி ) வந்தபோது நேதம் நள்ளிரவைத் தாண்டிக் கொண்டிருந்தது. அகிலன் வெட்டையில் பரந்து நின்றிறுந்த நீர் காற்றுவீசும் நேரம் தவிர மீதியெல்லாம் அமைதியாய் இருந்தது. ஆட்லறிகள் ஏவப்படுகின்ற சத்தம் அவர்களிற்குள் ஓர்; வேகமேற்படுத்தியது. மெல்ல மெல்ல ஒவ்வொருவராக நடந்தார்கள். ஆழம் அதிகமான இடங்களில் சத்தியாவும், ஆந்திராவும் தாண்டு மீண்டார்கள். இரண்டு பேருமே உருவத்தில் மிகச் சிறியவர்கள். அவர்களின் இந்த சிறிய தோற்றம் பலதடவைகளில் அவர்களிற்கு இலக்கு கிடைக்காது போவதற்கு காரணமாய் இருந்தது. என்றாலும், இம்முறை அவர்களிற்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மலர்விழி தன் தலைமையிலேயே இவ்விருவரையும் அழைத்துச் சென்றாள். தண்ணீரின் ஆழம் அதிகமான இடங்களில் நுனிக்காலில் நடந்தும்இ அதைவிட ஆழம் அதிகமானால் மலர்விழியின் தோள்களில் பிடித்தபடியும் சத்தியா தன் தண்ணீர்க் கடப்பு பயணத்தைத் தொடர்ந்தாள். ஆந்திராவும் அப்படியே. மற்ற கரும்புலி வீரர்களும் அவர்களிற்கு உதவினார்கள். தண்ணீரும் பாதங்களைப் பிடித்திழுக்கும் சுரிகளும் பயணத்தை சிரமமாக்கியது. யாரும் அதைக் கஸ்ரமாகப் பெரிதுபடுத்தவில்லை. எந்தவிதமான தடயமும் ஏற்படாது கரையேறியவர்கள், சற்றுத் தூரம் நடந்து ஒரு மறைப்பான இடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டார்கள்.
சிலர் தங்கள் துப்பாக்கிகளைத் துப்பரவு செய்தார்கள். சிலர் அப்படியே அந்தப் புதர்கள் மண்டிக் கிடந்த இடத்திலேயே படுத்திருந்தார்கள், இன்னும் சிலர் தாங்கள் கொண்டு வந்த உலர் உணவுகளை உண்டு கொண்டும் மற்றவர்களிற்கு அன்பாய் கொடுத்துக் கொண்டுமிருந்தார்கள். அது ஒரு இராணுவ பிரதேசம் என்ற உணர்வு தெரியாது அவர்கள் இயல்பாகவே பேசினார்கள், சிரித்தார்கள், ஆளாளாய் கிண்டலடித்தார்கள். அந்த இடத்திலேயே மறுநாள் பகற்பொழுது கழிந்தது.
பகற்பொழுதில் தான் அந்த இடமெல்லாம் இராணுவ நடமாட்டம் அதிகமான இடமெனத் தெரிந்தது. இராணுவச் சப்பாத்தின் அடையாளங்கள் ஆங்காங்கே பளிச்சிட்டன. மாலைச் சூரியன் சற்று மரங்களிற்குள் மறையத் தொடங்கினான். இதுவரையும் ஒன்றாக நகர்ந்த அணி இனி இரண்டாகப் பிரிந்து வேறுதிசையில் இன்னொரு இலக்கைத் தேடப்போகிறது. களத்தினுள்ளும் ஓர் உணர்ச்சி பொங்கும் பிரிவு, பளையில் அமைந்திருந்த ஆட்லறித் தளம் நோக்கிப் போகின்ற தனுசன், சுதாஜினி அடங்கிய அணியைப் பார்த்து “உங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு இதவிடக்கூடாது, ஆட்டி தகர்க்க வேணுமெண்டது கனபேற்ற எதிர்பார்ப்பு” என்றாள் மலர்விழி. கூறிவிட்டு தனது தோள்ப்பையிலிருந்த “பழரின்” ஒன்றை எடுத்து வெட்டினாள். ஒரு தாயிற்குரிய பரிவோடும், பாசத்தொடும் ஒவ்வொரு போராளிகளுக்கும் கொடுத்தாள். அந்தக் கணங்களில் கண்கள் மெல்லக் கசிந்தன. இதே அணிகளில் இனியார் வெற்றிச்செய்தியோடு திரும்புவார்கள்?
அங்கு தாமதம் என்ற வார்த்தைக்கு இடமில்லை. ஒவ்வொரு மணித்துளியும் ஒவ்வொரு துளி இரத்தமாய் மதிக்கப்பட்டது. தனுசன், சுதாஜினி அடங்கிய குழு பளை நோக்கியும் மலர்விழி, சத்தியா, ஆந்திரா அடங்கிய குழு தாமரைக்குளம் நோக்கியும்இ பிரிந்து நடந்தனர். இனி கடக்கவேண்டிய மிகப்பெருந் தடை கண்டி வீதி A9 – பிரதானசாலை.
வீதியோரத்தில் முட்கம்பி வேலிகள். அதைக்கடந்தால் ரோந்து வந்து போகும் இராணுவத்தினர் அதிகளவு ஒளி சிந்தி இரைந்தபடி ஓடித்திரியும் ‘றக்’ குகள். அத்தனை ஆபத்துக்களையும் கடந்துவிட்டால் இலக்கு தகர்க்கப்படுவது உறுதியாகிவிடும். இந்தக் கணத்திலும் அவர்கள் எடுத்துக் கொண்ட உறுதியை மீண்டும் சொல்லிக் கொண்டனர். “ஒராள் மிச்சமென்டாலும் உள்ளுக்க போய் ஆட்டியை உடைக்கோணும்” ஒவ்வொருவருமே அதன் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டிய விதத்தையும் நன்கு அறிந்து வைத்திருந்தனர். கண்டி வீதி கடப்பதற்காக அங்குலம் அங்குலமாய் நகர்ந்து, தடைக்கம்பி வெட்டி, மண்ணணை ஏறி ஒவ்வொருவராக சமிக்ஞை கொடுத்து கிட்ட அழைத்து, அவர்களை நிலையெடுக்கச் செய்து இப்படி ஒவ்வொன்றும் அங்கே நிதானமாக அரங்கேறிக் கொண்டிருந்தன.
கண்டி வீதியால் கிடுகிடுத்தபடி சைக்கிளில் ரோந்துக்கு இராணுவம் போய்வரும் நடமாட்டம் தெரிந்தது. அடுத்தடுத்து சில இராணுவத்தினர் ரோச்லைட்டுக்களுடன் போவதும் வருவதுமாக இருந்தனர். அவர்கள் போகும் போது சிங்களப் பாடல்களையோ அல்லது வேறு எதையோ கத்திக் கொண்டே சென்று வந்தார்கள். அவர்கள் கதைக்கும் சிங்களச் சொற்களிற்குள் கலந்து வந்த சில ஆங்கிலச் சொற்கள் அவர்கள் காவல்கடைமையை மாற்றுகின்றார்கள் என்று உணரக்கூடியதாக இருந்தது. அதற்குப் பின் எல்லாம் மௌனம்.
பழைய வடிவமைப்பிலான ஒரு கார் போன்ற வாகனம் பளையிலிருந்து முகமாலைப் பக்கமாய் விரைந்தது. அணி வீதிக்கரையை வந்ததும் வேகமாக கடக்க முயன்றார்கள். முன்னே சென்ற ஒருவன் வேகமாக நடந்து கண்டி வீதியைக் கடந்தான். அடுத்தவன் தனது நிலையிலிருந்து எழுந்தான். கடப்பதற்காக விரைவாக நடந்தான். சாவகச்சேரிப் பக்கமிருந்து உறுமலோடு ஏதோ ஒரு வாகனம் வந்தது. அதன் பிரகாசமான வெளிச்சம் அவனை முழுமையாகக் காட்டியது. கண்ணைப் பறிக்கும் பளிச்சென்ற வெளிச்சம். விரைவாய் திரும்பி, வந்த இடத்திற்கு சென்றான். பின்வந்தவர்களை மறைவெடுக்கச் சொன்னான். எல்லாம் ஒருகணத்திற்குள் செய்து முடிந்தது. தண்ணீருக்குள் வந்து கொண்டிருந்தவர்கள் அப்படியே அதற்குள்ளே அமிழ்ந்தார்கள். மரங்களிற்குள், பற்றைகளிற்குள், மண்திட்டுக்களிற்குள் என்று அவசர அவசரமாக தங்களை மறைத்துக் கொண்டார்கள். அது இராணுவ ‘றக்’ வண்டி. அந்த வண்டி நிறைய எறிகணைகளை ஏற்றிச் செல்வது அந்த பெட்டிகள் மூலம் அறிய முடிந்தது. அதைக் கண்ட பொது அவர்களிற்கு மெய் சிலிர்த்தது. எங்கோ ஓர் நடவடிக்கைக்கு இராணுவம் தன்னை தயார் செய்கின்றது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்கள்.
ஆட்லறிகளின் அதிர்வு மிக கிட்டவாகவும் எத்தனை என்று அறியக்கூடியதாகவும் இருந்தது. அந்த வாகனத்தின் புகையும், அது கிளப்பிச் சென்ற காற்றும் அடங்க முன் அணி வேகமாக கடந்தது. கண்டி வீதியைக் கடந்ததும் மனதில் நம்பிக்கை பளிச்சிட்டது; இனி எப்படியும் அந்த இலக்குகள் அழிக்கப்பட்டு விடும் என்று. தென்னந்தோப்புகள், பற்றைக்காடுகள், வடலிகள் என்று ஒவ்வொரு இடத்தையும் வேகமாகக் கடந்து தளத்திலிருந்து சற்றுத் தூரத்திற்குள் தங்கிக்கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் சிரித்து, கதைத்து தங்களின் இறுதிநேர ஓய்வையும் உணவையும் பகிர்ந்து கொண்டார்கள். நித்திரை கொள்பவர்களை தட்டியெழுப்பி “ஏன் இப்ப அவசரப்படுறியள் இனி ஒரேயடியா தூங்கலாம் தானே” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் சுதாஜினி. வழமையான அவளது குறும்புப் பார்வை சிரிப்பு எல்லாமே அப்பொழுதும் அப்படியே இருந்தன. முகமெல்லாம் முத்து முத்தாக வியர்த்தப்போயிருந்தது. இயல்பாகவே அவளிற்கு முகம், கைகாலெல்லாம் வியர்த்துப் போய்த்தானிருக்கும். எப்போதும் சிரிக்காமல் கதைத்து அவளிற்குப் பழக்கம் இல்லை; இன்றும் சிரித்தபடியே.
அவளின் உடற்தோற்றத்திற்கு ஏற்றது போல அவளிற்கு (‘லோ’) வழங்கப்பட்டிருந்தது. அது அவளின் மடியில் அவளைப்போலவே அடுத்தகட்ட பூகம்பத்தை நினைத்தபடி மௌனமாய்க் கிடந்தது. ஒவ்வொரு உணவுப் பொதிகளையுமே எடுத்து உண்டபடி தங்களிற்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். “எப்படி வெளிநாட்டுச் சாப்பாடு, கதிரை மேசைதான் இல்லை பத்தையெண்டாலும் சந்தோசமான சாப்பாடு” சொல்லி முடித்து மூச்சு விட்டான் தனுசன். அவர்கள் ஓய்வை முடித்து அங்கிருந்து புறப்படத் தயாரானார்கள். தலைகோதிவிட்டு, கசங்கிய உடுப்பை சரிசெய்து, வியர்த்து உருமாறிய முகங்களை துடைத்து ஏதோ கொண்டாட்டத்திற்கு போவது போல அவர்கள் தயாரானார்கள்.
இலக்கை அண்மிக்க, அண்மிக்க உணர்வின் வேகம் அதிகமானது. சண்டைக்கான தயார் நிலையில் அவர்கள் நகர்ந்தார்கள். கொண்டு போன தண்ணீர்க் ‘கான்’ கள் அவர்களைப் போலவே தண்ணீருக்காய் தவித்தது. ஒரு மோட்டை! அந்த பரப்பின் ஓர் மூலையில் கொஞ்சம் தண்ணீர்! அது எப்படி என்ன மாதிரியென்று தெரியாது. என்றாலும் அதைக் குடித்தார்கள். பனை மரங்களோடு ஒட்டி வளர்ந்திருக்கும் சிறுபற்றைகளும், மணற்பிரதேசத்தில் முளைத் புற்களையும் கவசமாக்கி அங்குலம் அங்குலமாய் நகர்ந்தார்கள். அவர்களின் கண்ணிற்குள் அந்த தளத்தின் பிரமாண்டமான உருவம் தெரிந்தது.
மண்ணணைஇ இடையிடையே காவலரண் முட்கம்பித் தடை என்று அதன் பலத்தை உறுதி செய்யும் ஏற்பாடுகளும் அவர்கள் முன் விரிந்து கிடந்தது. எதிரி ஒரே நேரத்தில் அடுத்தடுத்து எட்டு ஆட்லறிகளை இயக்குவது தெரிந்தது. அது இயக்குவதற்காகவும் வேறு பக்கம் திருப்புவதற்காகவும் அவன் கொடுக்கும் கட்டளைகள் காது மடல்களில் அறைந்தன. அந்த எறிகணைகள் பெரும் சத்தத்தோடு சுவாலை கிளப்பி வெடிக்கின்ற போது அதன் சுவாலை அவர்களின் வியர்வையை உலர்த்துவதாய் முகத்தில் சுட்டது. அவை இன்னும் சில வினாடிகளிற்குள் நொருங்கப் போகிறது என்று எண்ணிய போது ஒவ்வொருவரது பற்களும் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டன.
பனை புகையிரத நிலைய கட்டிடத்தின் கூரை இல்லாத தோற்றம் முகம் இழந்த ஒருவனைப்போலிருந்தது. அந்த இருளையும் ஊடுருவி அவன் அமைத்திருந்த தடைகளிற்கு வெடிமருந்துகளைப் பொருத்திவிட்டு அணிகளுக்குத் தாக்குதலை ஆரம்பிக்கும் சமிக்ஞையை கொடுக்கவென நினைத்த போது திறந்த காவலரண் ஒன்றிலிருந்து இராணுவச் சிப்பாய் ஒருவன் வெளியே வந்தான் – அவன் கைகளில் துப்பாக்கி இல்லை. பிரகாசமான ரோச்லைட் ஒன்றை வைத்து எல்லா இடமும் சுற்றியடித்தான். அவனின் பருத்த உருவமும் முரட்டுத்தனமான தோற்றமும் தெளிவாக வானவிளிம்பில் தெரிந்தது. முன்னே சென்றவர்களின் முகத்திற்கு நேரே அவன் ஒளி பாய்ச்சிய போது திடுக்குற்று ‘கவ்த’ என்றான் நடுக்கத்துடன். கரும்புலி வீரர்கள் மனசிற்குள் சிரிப்போடும் கூடிய நிதானத்தோடும் நிலையாக நின்றார்கள். மறுமுறையும் தனது ஒளியை வேறுதிசை ஒன்றில் பாய்ச்சியும் சத்தமாய் ‘கவ்த’ என்றான். நிதானம்…… சிரிப்பு. மூன்றாம் முறை முகத்திற்கு நேரே ஒளிபாய்ச்சி அதட்டலாக ‘கவ்த’ என்றது தான் தெரியும்; அந்த சிப்பாய் அதிலேயே செத்துக் கிடந்தான்.
அணி மிக வேகமாக உள்நுழைந்தது. “ஓடுங்கோ…… வேகமாக முன்னேறுங்கோ” என்ற சத்தத்தோடு எல்லோரும் மண்ணணை ஏறி உள்நுழைந்தார்கள். காவலரணில் இருந்து சூடுகள் வந்துகொண்டே இருந்தன. “நான் ‘லோ’ அடிக்கிறன் முன்னேறுங்கோ” என்று சுதாஜினி கத்தியது சத்தங்களிற்குள் அடக்கமாய் கேட்டது. அடுத்து என்ன நடந்தது என்று நிதானிப்பதற்குள் வெடியோசைகள் – சுதாஜினி நின்ற இடமே தெரியவில்லை. நிச்சயமாக எதிரியின் குறி அவளாகத்தான் இருந்திருக்கும்.
சுதாஜினியின் வெடியதிர்வைப் போலவே ஒவ்வொருவரும் வேகமாக இவக்குகளை நெருங்கினார்கள். ஆட்லறிகள், அதற்கான எறிகணைக் களஞ்சியங்கள் எல்லாம் தெளிவாகத் தெரிந்தன. நிலவு வருவதற்கு முன்னதாக வானம் வெளுத்திருந்தது. அந்த மங்கிய வெளிச்சத்தில் அந்த ஆட்டிலறிகளின் உருவங்கள் கருமையாகத் தெரிந்தன. மிகவேகமான தாக்குதலில் அந்த பெரிய தளமும் அத்தனை ஆட்லறிகளும் பூரண கட்டுப்பாட்டிற்குள் வந்தன. ஆயுதக் களஞ்சியங்கள் ஆங்காங்கே பெரும் சத்தமுடன் வெடித்து சின்னச்சின்ன எரிமலையாய் எரிந்து கொண்டிருந்தன.
நிலைமைகள் வெளியில் அறிவிக்கப்பட்டது. உதவிக்கு செல்லவென இருந்த அணி அங்கே குறித்த நேரத்திற்குள் போய்ச் சேருமா என்பதில் சந்தேகம் எழுந்தது. கரும்புலி வீரர்களிற்கும் செம்பியன்பற்றுக் கடலில் சண்டை நடக்கும் சத்தங்களை தெளிவாகக் கேட்க முடிந்தது. உதவியணி இனி வந்து சேராது என்ற முடிவிற்கு வந்தாலும் இயன்றளவு அத்தனை ஆட்டிலறிகளையும் பாதுகாத்தனர். தனுசன் எல்லா ஆட்லறிகளுக்கும் ஓடி ஓடி வெடிமருந்துப் பொதிகளை கட்டி வெடிக்கக்கூடிய நிலைக்கு கொண்டு வந்துகொண்டிருந்தான். வேறு வேறு முகாம்களில் இருந்து அந்த தளத்தை இலக்கு வைத்து எறிகணைகளை எதிரி ஏவிக்கொண்டிருந்தான். தனுசன் தன் பணிகளை நிறைவேற்றி முடித்த போது அவனிற்கு அருகோடு எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்தது. அதற்குப் பின் தனுசனின் தொடர்பு இல்லை. பொழுது வெழுக்கத் தொடங்கியது.
அத்தனை ஆட்லறிகளையும் தகர்த்துவிட்டு பின்வாங்கும்படி கட்டளை கிடைத்தது. ஆட்லறிகளையும் ஆயுதக் களஞ்சியங்களையும் தகர்த்து விட்டு வெற்றியோடு பின்வாங்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவரது மனதிற்குள்ளும் அவர்களோடு வந்து பிரிந்து சென்ற மலர்விழியின் அணியும் நிச்சயம் தனது இலக்குகளை அழித்திருக்கும் என்ற நம்பிக்கை நிறைந்திருந்தது. அறிய ஆவலாகவும் இருந்தது.
அவர்களோடு வந்தவர்களில் இரண்டு தோழர்கள் இல்லை. ஆனால் அவர்களின் இலக்கை வெற்றி கண்டு விட்டார்கள். தீர்மானித்ததன்படி வந்த வழியிலே கண்டி வீதியில் நிலைகொண்ட எமது அணிகளோடு கைகுலுக்கியபோது சொன்னான் ஒரு கரும்புலி வீரன் “எத்தனை பேர் எத்தனை இரவுகளாய் தேடி அலைந்த ஆட்லறிகள்…… அத்தனை பேற்றை கனவையும் நிறைவேற்றிப்போட்டம்.” சமரிற்கு அடித்தளமிட்டுவிட்ட நிறைவு அவர்களிடம் இருந்தது.
அவர்கள் அறிய ஆவலாய் இருந்த மற்றைய மலர்விழியின் அணி தனக்குத் தரப்பட்ட நான்கு ஆட்லறிகள் கொண்ட மற்றைய தளத்தை அழித்து விட்டது. ஆனால் அந்த கரும்புலி வீரர்களில் மலர்விழியும், ஆந்திராவும், சத்தியாவும் திரும்பவில்லை.
நினைவுப்பகிர்வு: கிள்ளிவளவன் (துளசிச்செல்வன்).
நன்றி – விடுதலைப்புலிகள் குரல்: 94.


