ஒரு வீரனின் ஆசை

கரும்புலி லெப். கேணல் போர்க்
மாப்பாணப்பிள்ளை அரசரத்தினம்
ஆறுமுகத்தான் புதுக்குளம், வவுனியா
பிறப்பு: 11.11.1959
வீரச்சாவு: 23.11.1990
வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் – அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப் படைமுகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது.
இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம் முகாம் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது.
எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படைமுகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடாத்தி அதைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
இத்தாக்குதலை தலைமை தாங்கி வழிநடாத்திய தளபதி பால்ராஜ் சொல்லும்போது, “நாங்கள் இம்முகாம் தாக்குதலுக்கான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது ‘மாங்குளம் முகாமைப் பற்றி எனக்குத்தான் அதிகம் தெரியும். எனவே நான்தான் சக்கை லொறி கொண்டு போகவேணும்’ என, ‘போர்க்’ சொன்னான்.
அந்தக் குரலில் உறுதி தெரிஞ்சுது… போர்க் போராட்டத்திற்கு புதியவரல்ல. அவர் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர். பல தாக்குதல்களை முன் நின்று வழி நடத்தியவர்.”
தளபதி பால்ராஜ் மேலும் தொடர்கையில்….
“1990 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 23ஆம் நாள்…
அண்டைக்குத்தான் போர்க் கரும்புலியாப் போனவர். புறப்பட முன் கடைசியாக என்னைக் கட்டியணைச்சு ‘நான் புறப்படுறன்… இதோட மாங்களம் முகாம் முடிஞ்சுது…’ என்று சொல்லிப்போட்டு, வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச் சென்றார். கொஞ்ச நேரத்தில பெரிய வெடிச்சத்தம் கேட்டுது; முகாம் தகர்ந்தது… பிறகு சில மணி நேரத்தில முகாம் கைப்பற்றப்பட்டது” என்றார்.
இந்தத் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, போர்க் அண்ணை விடுமுறையில் வீட்டுக்குச் சென்றார்.
அவரது கிராமம் சிங்கள எல்லையில் அமைந்துள்ளது. அது வன்னியிலுள்ள சேமமடு.
சிறு வயதுதொட்டு நடந்து திரிந்த அக்கிராமத்தில் குளம், வயல், காடு… என்று ஒவ்வொன்றையும் சுற்றி ரசித்தார். இல்லை… அவற்றிடமிருந்து விடை பெற்றார்.
அந்த நாட்களில் ஒருநாள் பக்கத்துவீட்டுச் சிறுவர்கள் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்விடத்திற்குச் சென்று ஓர் மரக்குற்றியில் அமர்ந்தவாறு போர்க் அண்ணை கேட்டார் –
“தம்பியவை, மாவீரர் நாள் வருதல்லோ?, தற்செயலா நான் செத்துப் போனா அண்டைக்கு என்ன செய்வியள்?”
“நீங்கள் ஏன் சாகப்போறியள்” எனக் கேலியாகப் பதில் கூறினர் பிள்ளைகள்.
போர்க் அண்ணையும் சிரித்தபடி, “தப்பித்தவறி நான் செத்துப்போனா என்ர நினைவா ஆளுக்கொரு மரம் நட்டு வளவுங்கோ என்ன……?”
அவர்கள் சிரித்தனா.; போர்க் அண்ணையும் சேர்ந்து சிரித்தார்.
வீட்டிலிருந்து புறப்படும் இறுதி நாள் வந்தது. மதியம் உணவருந்தி விட்டு விறாந்தையில் பாயைப் போட்டுப் படுத்தார். சற்றுத்தள்ளி போர்க் அண்ணையின் அம்மாவும் படுப்பதற்காக, தரையில் பாயைப் போட்டார்.
“அம்மா இதில வந்து, எனக்குப் பக்கத்தில பாயைப் போடணை.” போர்க்கண்ணை கேட்டார். அம்மாவும் வந்து அவரின் தலையை வருடியவாறு இருந்தார்.
அன்று பின்னேரம் அப்பா, அண்ணன்மார், தம்பிமார், அன்புத்தங்கை… என்று எல்லோரிடமும் விடைபெறுகிறார்.
கடைசியாக தாயாரிடம் வந்து, “அம்மா எனக்கு உங்கட கையால ஒரு பொட்டு வைச்சுவிடுங்கோவன், ஆசையாயிருக்கு” என சாதாரணமாகக் கேட்டார். ஏதுமறியாத தாயுள்ளம் பிள்ளையின் விருப்பப்படி பொட்டிட்டு மகிழ்ந்தது. இவ்விதம் சிறுபிள்ளைபோல் அவர் நடப்பது வழக்கம் என தாயாரும் கூறினார்.
சிரித்தபடியே விடைபெற்றவர், வீட்டுப் படலையில் நின்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தார்… பின் போய்விட்டார்.
சிறிது நேரத்தின் பின்…
“தம்பி சாரத்தையும் ரீசேட்டையும் விட்டுட்டுப் போட்டானணை” என்று, போர்க் அண்ணையின் சகோதரன் அவசரமாகக் குரல் கொடுத்தார்.
“பழசாக்கும், அதான் விட்டுட்டப்போட்டான் போலக் கிடக்க” என்றார் அம்மா.
இன்று, போர்க் அண்ணையின் அம்மா சொல்கின்றார், “தம்பி அவன் அண்டைக்கு வித்தியாசமா நடந்ததை என்னால புரிஞ்சு கொள்ள முடியேல்லை. ஆனால் கரும்புலியாய்ச் செத்தபிறகுதான், அவன் பக்கத்தில படுக்கச் சொன்னது… பொட்டு வைக்கச் சொன்னது… உடுப்புகளை விட்டிட்டுப் போனது… ஏனெண்டு விளங்கது.”
போர்க் அண்ணனின் அம்மாவின் நா தழுதழுத்தது……
நன்றிகள்: உயிராயுதம் – பாகம் 01, விடுதலைப்புலிகள் இதழ் (ஆனி, 1993).
