சுனாமி பேரழிவுகளின் நினைவுகளுடன் மீள்வாழ்வுக்காக எழுவோம்

26.12.2004 அன்று இந்தோனேசியா, சுமத்திரா தீவில் மையம் கொண்டு ஒரு சில மணித்தியாலங்களில் தமிழீழத்தின் கரையோர மாவட்டங்களை தாக்கிய சுனாமி கடல்கோள் அனர்த்தத்தினால் சாவடைந்தோர்களின் 16ம் ஆண்டு நினைவலைகள்.
“இந்த இயற்கையின் அழிவில் இரத்த உறவுகளையும் அன்புக்குரியவர்களையும் பறிகொடுத்து, ஆற்றற்றமுடியாத துயரத்திலும் வேதனையிலும் துடிக்கின்ற எமது மக்களுக்கு எனது அன்பையும், ஆறுதலையும், ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.” – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

ஊருக்குள் கடல்புகும்… அதுவும் ஆழிப் பேரலையாக நூழைந்து உயிர்க்கொலைகள் புரியும் என்று எவரும் கற்பனை செய்திருக்கவில்லை. ஐம்பெரும் பூதங்களென நிலத்தை – நீரை – நெருப்பை – காற்றை – ஆகாயத்தை எம் முன்னோர்கள் உருவகப்படுத்தியதை நேற்றுவரை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை.பூதம் என்று நாம் இதுவரை கருதியது இனவாதப் பேயையும் அதன் ஏக புதல்வனாகிய இராணுவ பூதத்தையும்தான்.
ஆனால் தனது அழிவுச்சக்தியை இயற்கை எம்மீது காட்டிவிட்டதே! 1500 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் நிலம் என்ற பூதம் நடுங்க – அங்கிருந்து நீர் என்ற பூதம் நெளிந்து – அசைந்து கரையில் சிறகுமுளைத்து வாய் பிளந்து – எம்மக்களை விழுங்கிவிட்டதே.
சிலநிமிட கடல் சீற்றம் தமிழீழத்தின் இருபதினாயிரம் வரையான மக்களை அழித்து விட்டது. எத்தனையோ குடும்பங்கள் முற்றாக அழிந்துவிட்டன. தாய் – தந்தையை இழந்த பிஞ்சுகள் ஏராளம். இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நீடிக்கப்போகும் அந்தச் சோக நினைவுகளை சுமந்துநிற்கும் சில விபரங்களை இங்கே காணலாம்.
யாழ். மாவட்டம்: பருத்தித்துறை, மணற்காடு, நாகர்கோவில், தாளையடி, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு.
இறப்புக்கள் – 1256
காயங்கள் – 1647
இடம்பெயர்ந்தவர்கள் – 41013
சேதமான பாடசாலைகள் – 11
சேதமான வீடுகள் – 7198
சேதமான வைத்தியசாலைகள் – 03
முல்லைத்தீவு மாவட்டம்: மாவட்டத்தின் கூடுதலான பகுதி சுனாமியால் தாக்கப்பட்டது
இறப்புக்கள் – 2771
காயங்கள் – 2590
இடம்பெயர்ந்தவர்கள் – 21178
சேதமான பாடசாலைகள் – 12
சேதமான வீடுகள் – 4000
சேதமான வைத்தியசாலைகள் – 02
கிளிநொச்சி மாவட்டம்:
இறப்புக்கள் – 30
காயங்கள் – 670
இடம்பெயர்ந்தவர்கள் – 1603
சேதமான பாடசாலைகள் – விபரம் இல்லை
சேதமான வீடுகள் – 7500
சேதமான வைத்தியசாலைகள் – 01
திருகோணமலை மாவட்டம்: குச்சவெளி, நிலாவெளி, திருகோணமலை, கிண்ணியா.
இறப்புக்கள் – 1076
காயங்கள் – விபரம் இல்லை
இடம்பெயர்ந்தவர்கள் – 69212
சேதமான பாடசாலைகள் – 23
சேதமான வீடுகள் – 16378
சேதமான வைத்தியசாலைகள் – 09
மட்டக்களப்பு மாவட்டம்: வாகரை, நாவலடி, காத்தான்குடி, பெரிய கல்லாறு
இறப்புக்கள் – 2840
காயங்கள் – 1575
இடம்பெயர்ந்தவர்கள் – 61912
சேதமான பாடசாலைகள் – 39
சேதமான வீடுகள் – 21126
சேதமான வைத்தியசாலைகள் – 08
அம்பாறை மாவட்டம்: பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, கோமாரி, பொத்துவில்.
இறப்புக்கள் – 9051
காயங்கள் – 6771
இடம்பெயர்ந்தவர்கள் – 137960
சேதமான பாடசாலைகள் – 40
சேதமான வீடுகள் – 19077
சேதமான வைத்தியசாலைகள் 29

வரலாற்றில் எப்போதாவது நடைபெறும் ஒரு சம்பவம் ஒரு தேசிய இனத்தை முழுமையான சோகத்தில் ஆழ்த்திவிடுவதுண்டு.
தமிழீழ மக்களைப் பொறுத்தளவில் இத்தகைய பல தேசியத் துயர்களை எமது விடுதலைப் போராட்ட காலத்தில் அவர்கள் சந்தித்திருந்தார்கள்.
இத் துயர்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல கடற்கோள் ஏற்படுத்திய அழிவுகள் மாபெரும் தேசியத் துயராக வரலாற்றில் பதியப்பட்டு விட்டது.
தமிழீழக் கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதிக் கடற்கரை கடற்கோளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு சிலநிமிட நேரத்தில் அழிந்த பல்லாயிரம் உயிர்களும் கடல் அலைகளின் நம்பமுடியாச் சீற்றமும் தமிழீழ மக்களை உலுப்பியெடுத்துவிட்டது.
பண்டைய தமிழ் நூல்களில் பதிவாகியிருந்த கடற்கோள் என்ற சொல், எந்தவித அனுபவ அர்த்தமும் இல்லாத கற்பனைச்சொல் போன்றே, கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழரின் மனதில் இருந்துவந்தது.
26.12.2004 அன்று காலைவேளையில் கரையோரக் கிராமங்களை, பட்டணங்களை விழுங்கிய கடல்நீர், கடற்கோளின் அர்த்த பரிமாணத்தை தமிழ்மக்களுக்குக் காட்டிச் சென்றது.
கரையில்வந்து கால் நனைத்துச் செல்லும் கடல்நீர் திடீரெனப் பனையளவு உயரம் எழும்பிக் கரைகளைச் கபளீகரம் செய்த காட்சி ஒரு அழிவுகரமாகவே காணப்பட்டது.
அழிவையும் – அச்சத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் ‘சுனாமி’ என்ற ஒரு சொல்லையும் தமிழ் அகராதிக்குள் கடற்கோள் திணித்து விட்டுச் சென்றுள்ளது.
தலைவர் பிரபாகரன் கூறியதுபோல இது எமது மக்கள் சந்தித்த இரண்டாவது சுனாமி ஆகும். ‘ஆமி ஏற்படுத்திய சுனாமி’ என்று சிங்களப்படையின் இன அழிப்பை தலைவர் உவமானப்படுத்தியிருந்தார்.
தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் தழிழீழக்கடல் வகித்துவரும் பங்கு – பாத்திரம் முக்கியமானது. அதுபோலவே, கரையோர மக்களின் போராட்டப் பங்களிப்பும் காத்திரமானது.
ஒருபுறம் இயற்கை ஆபத்தையும் – மறுபுறம் சிங்களக் கடற்படையின் கொலைவெறி ஆபாயத்தையும் எதிர்கொண்டு அன்றாட வாழ்க்கை நடத்திய இம்மக்கள் கடற்கோள் என்ற பேரனர்த்தத்தையும் எதிர்கொண்டது பெரும் துயரத்தைத் தருகின்றது.
இத் துயரத்தின் சோகவடுக்கள் அம் மக்களை இன்னும் பல வருடங்களுக்கு வாட்டத்தான் போகின்றது.
கடலுக்கு பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரின் துயரும், பெற்றோரைப் பறி கொடுத்த பிள்ளைகளின் சோகமும், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களின் கவலைகளும் தமிழ் இனத்தின் குடும்பச்சோகமாகவே உணரப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் இந்த இயற்கையின் சீற்றத்தைக் கேள்வியுற்று துடிதுடித்துப் போனதையும் – தாயகத்து உறவுகளுக்கு வாரிவழங்கி உதவிகள் புரிந்ததையும், அவர்களுக்காகக் கண்ணீர் வடித்தழுததும் இந்தத் தேசிய சோகத்திற்குச் சாட்சிகளாக உள்ளன.
வரலாற்றில் நாம் சந்தித்திராத ஒரு பேரழிவை கடல் தந்திருந்தாலும் அது எங்களது எதிரியல்ல. மாறாக, அது எங்களது தேசியச் சொத்து. இயற்கையை அனுசரித்து அதை வசப்படுத்துவதில்தான் மனிதரின் வெற்றி தங்கியுள்ளது. அறிவியலின் வழிகாட்டலுடன் பெற்ற அனுபவங்களையும் துணையாகக்கொண்டு, எதிர்காலத்தில், இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்வோம்.
நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (மார்கழி – தை 2005)

நீளும் நினைவுகளாகி…

கடற்கரும்புலிகடலுடன் சங்கமமானவர்களை இந்நாளில் எம்மனங்களில் நிறுத்தி நினைவில் கொள்வோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”






