வரலாற்றின் பதிவாளன்

தமிழீழ வரலாறு சொல்லப்படும் காலம் முழுவதும் தவாவின் நினைவுகள் பதிவுபெறும் வகையில் அமைந்திருந்தது அவனது களப்பணி.
தவாவைப் பொறுத்தவரை அவன் இயக்கம் சொல்வதை, தலைவர் நினைப்பதை அல்லது விரும்புவதைச் செயல்படுத்தும் போராளியாக இருந்தான். அவன் தனக்கு வழங்கப்பட்ட படப்பிடிப்புப் பணியைத் தொய்வின்றிச் செயற்படுத்தினான்.
இன்று எமது விடுதலைப் போராட்டம் உலகமெல்லாம் பரந்துவாழும் எமது மக்களின் உணர்வுத்தளத்தில் நடைபோட்டுவருகின்றது. மக்களாதரவுடன் தீவிரமாக நடைபெற்றுவரும் முதன்மை நிலை விடுதலைப் போராட்டமாக உலகின் கவனத்தையும் ஈர்ந்துள்ளது. எமது விடுதலைப் போராட்ட நிகழ்வுகளைக் காட்சி ஊடகப்படுத்தலின் மூலம் உலகில் உள்ள அனைவரையும் எமது விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புபடுத்தும் பணியில் படப்பிடிப்பும் முக்கியம் பங்காற்றி வருகின்றது.
சம்மந்தப்பட்டவர்கள் இல்லாமற்போனாலும், அல்லது நிகழ்வுகள் அவர்களது நினைவிலிருந்து மறந்துவிட்டாலும் அந்த நிகழ்வுகளைக் காலத்தின் பதிவுகளாக்கி வைப்பதன் மூலம் நிகழ்கால சந்ததி அறிந்துகொள்வதற்கும், எதிர்காலச் சந்ததியுடன் பகிர்ந்து கொள்வதற்குமான ஊடகமாகப் படப்பிடிப்பு எனும் தளம் திகழ்கின்றது.
அவ்வகையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் படப்பிடிப்பு எனும் தளத்தில் பல வருடங்களாகத் தொடர்ச்சியாகச் செயற்பட்ட தூணாகத் தவா காணப்பட்டார்.
லெப். கேணல் தவம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் புனலாய்வுத்துறை பொறுப்பாளர் ச.பொட்டு அவர்கள்.


தவாவைத் தனிப்பட்டமுறையில் நாம் அறிந்திருந்ததில் எளிமையையே தனது அடையாளமாகக் கொண்டிருந்தார். எவருடனும் எதற்காகவும் முரண்பட்டதாகவோ, அடம்பிடித்ததாகவோ அல்லாமல் தனது போராட்ட வாழ்வைக் கடமையையே கண்ணாகக்கொண்டு அமைதியாகக் கடந்து சென்றவர். ஆந்த அமைதிக்கும் எளிமைக்கும் பின்னால் அவரது உழைப்பும் அனுபவமும் நிறைந்திருந்தன. அந்த உழைப்பினதும் அனுபவத்தினதும் பயனாகத் தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகமெல்லாம் எடுத்துச் செல்லப்படுவதாகவும் பேசப்படுவதாகவும் அமைந்த காட்சிகளைப் பதிவுசெய்து அப்பதிவுகளை உலகத்தின்முன் விட்டுச்சென்றுள்ளார்.
போர்க்கள வீரனுக்கு இருந்திருக்கக்கூடிய பெருமிதத்திற்குச் சமமாக, அல்லது அதற்கு மேலான போர்க்களப் பெருமிதத்தைப் பெறக்கூடிய பணியைத் தவா செய்துள்ளார். வுரலாற்றுப் பதிவுகள் அவரது மனதில் வழிப்படுத்தலின் கண்களின் ஊடாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதே மனதில் வழிப்படுத்தலினால் அதே பணிக்குரியவர்கள் அவரால் தயார்ப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவை தவாவின் பெருமைக்குரிய அடையாளங்களாகும்.
எமது விடுதலைப் போர் சார்ந்த இதுவரை காலக் காட்சிப்படுத்தல்களைப் பார்க்கும் வேளைகளிலெல்லாம் எமக்குத் தவாவும் நினைவிற்கு வருவார். தமிழீழ வரலாறு பேசப்படும் காலம் வரை தான் எடுத்த காட்சிகளுடன் தனது மனதையும் இணைத்துப் பதிவு செய்துள்ளார். ஆவ்வகையில் தமிழீழ வரலாற்றின் பதிவாளனாய் வாழ்வான்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ச.பொட்டு
பொறுப்பாளர்
புலனாய்வுத்துறை
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
மூலம்: “பதித்த சுவடுகளும் தொடுத்த நினைவுகளும்” லெப். கேணல் தவம் நினைவாக நூல்.
